Published:Updated:

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

'வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி, மக்களின் பசி போக்கிய, உருவ வழிபாட்டை ஒதுக்கி ஜோதி வழிபாட்டை நடைமுறைப்படுத்திய வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார், தன் 51 ஆண்டு கால வாழ்க்கையில் 33 ஆண்டுகள் சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் உள்ள வீட்டில்தான் கழித்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் ஜோதி வடிவமான தைப்பூச நாள், இந்த வீட்டில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வள்ளலார் வாழ்ந்த இந்த வீட்டைப் பற்றி என் விகடனில் எழுதினால் அது பலருக்கும் பயனுள்ள கட்டுரையாக அமையும்!'' - இப்படித் தன் ஆவலை வாய்ஸ்நாபில் பதிவுசெய்து இருந்தார் ராயபுரம் ஆர்.கிருஷ்ணன்.

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!
##~##

ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள வள்ளலார் வாழ்ந்த அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர் ஸ்ரீபதி, வள்ளலார் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

'அடிகளார், சிதம்பரம் அருகில் உள்ள மருதூரில் தோன்றினாலும், தன் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவருடைய அண்ணன் சபாபதியால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு வளர்க்கப்பட்டார். இந்த வீட்டின் மேல்பகுதியில்தான் அவர் 33 வருடங்கள் வாழ்ந்தார். தன் அறையைப் பூட்டிக்கொண்டு பல மணி நேரங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருப்பாராம். தியானத்தில்தான் ஜோதி வடிவில் இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி ஒருநாள் ஜோதியை வணங்கிவிட்டு கண்ணாடியைப் பார்த்தபோது திருத்தணி முருகன் காட்சித் தந்ததாகத் தன் பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார். தூக்கத்தில் தவறி விழப் போனவரை இறைவன் தாங்கிப் பிடித்ததும் இங்கேதான் நடந்ததாகச் சொல்கிறார்கள். இதேபோல் இங்கு இரவில் பசியோடு படுத்த நாட்களில் இவருடைய அண்ணியின் உருவில் வடிவுடை அம்மன் தோன்றி, தனக்கு அமுது ஊட்டியதாகவும் தன் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். உலகமே கொண்டாடும் திருஅருட்பாவின் முதல் ஐந்து திருமுறைகளை அவர் இந்த வீட்டில்தான் எழுதினார். மனதுக்குத் தோன்றும்போது எல்லாம் இங்கு இருந்து காலாறக் கந்தக்கோட்டம் முருகன், திருவொற்றியூர் சிவன் கோயில்களுக்குச் நடந்து செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

காலப்போக்கில் அவர் உருவ வழிபாட்டை மறுத்து, இறைவனை ஜோதி வடிவாக வழிபட வேண்டும் என, வலியுறுத்த ஆரம்பித்தார். 'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’ எனக் கூறியவர், சென்னையில் பல அற்புதங்களை நிகழ்த்த அவருக்குப் பல தொல்லைகள் வரவே இங்கு இருந்து வெளியேறி கருங்குழிக்குப் போய்விட்டார். அவர் இந்த வீட்டில் இருந்து சென்றாலும் இங்கு அவரின் தாக்கத்தை இன்னமும் உணர்கிறோம். அய்யாவின் முக்தி நாளான தைப்பூசம் அன்று அவர் தங்கி இருந்த அறையின் முன் அகவல், அருட்பா பாடல்களைப் பாடி வழி படுகிறோம். தொடர்ந்து திருஅருட்பா பற்றிய சொற்பொழிவு நடக்கும். இதையடுத்து பல திரைகளை  நீக்கிப் பல்வேறு முறை ஜோதி வழிபாடு நிகழும். 'நம் மன அகந்தைகளை நீக்கி இறைவனை உணர்தல்’ என்பதே இதன் பின் உள்ள தத்துவம். வேறு எந்தத் தெய்வங்களின் உருவமும் இங்கு இல்லை. அய்யா அமர்ந்து இருந்த இடத்தில் ஜோதி மட்டும் விடாது எரிந்துகொண்டே இருக்கும். மக்கள் தொடர்ந்து வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

வள்ளலாரின் கையெழுத்துப் பிரதி, அவர் அமர்ந்த அறை, பயன்படுத்திய கிணறு என, முடிந்த அளவுக்கு இந்த வீட்டைப் பழமை மாறாமல் பராமரித்துவருகிறோம். தைப்பூச விழாவின்போது நாள் முழுதும் மக்களுக்கு அன்னதானம்  நடக்கும். அவருடைய வழிகாட்டுதலின்படி இங்கு எல்லா மதத்தவரும் வழிபடலாம். இவ்வளவு ஏன் இந்த அறையில் பூஜைகளைச் செய்பவர் ஒரு பெண்மணிதான். இறைவன் முன் ஆண், பெண் பாகுபாடு ஏது?'' என்கிறார் ஸ்ரீபதி.

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

- பூ.கொ.சரவணன்
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு