‘‘நாலே வரிகளில் ‘நச்’ என்று ஒரு கதை சொல்லுங்கள்’’ என்று இவர்களிடம் கேட்டபோது...

வா.மு.கோமு, எழுத்தாளர், விஜயமங்கலம்: ''சின்ன மீன்களை எல்லாம் ஒரு பெரிய மீன் விழுங்கிட்டே இருந்ததாம். ஒரு சின்ன மீன் அதுகிட்ட வந்து, 'எங்களை மாதிரி சின்ன மீன்களை விழுங்குறியே, இது நியாயமா?னு கேட்டுதாம். அதுக்கு உடனே அந்த மீன், 'இல்லைதான். வேணும்னா நீ என்னை விழுங்கிக்கோ’னு சொன்னதாம்!''

கதை கதையாம் காரணமாம்!
##~##

என்.ஸ்ரீராம், எழுத்தாளர், தாராபுரம்: ''விஸ்வநாதன் கம்பெனியில் மேனேஜர் வேலைக்கு நேர்காணல். ரகுதான் தேறினான். வேலையை அவனுக்கே கொடுத்துவிடலாம் என்று நினைத்தபோது, லைனில் எம்.எல்.ஏ! 'தியாகராஜனைத் தேர்வுசெய்தால் 'கவனிக்கிறேன்’ ’ என்றார். தியாகராஜனுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். அங்கே ரகு, விஸ்வநாதனின் மகளுடன் நின்று இருந்தான். 'அப்பா, இவரைத்தான் ரெண்டு வருஷமா லவ் பண்றேன். வேலை கிடைச்சபின்னாடி சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப நடந்த இன்டர்வியூல இவருக்குத்தான் வேலை கிடைக்கும்னு சொன்னார்’ என்றாள் அவள்!

அமோகராஜ், ஐந்தாம் வகுப்பு, சேலம்: ''இன்டோர் ஸ்டேடியத்தில் பாக்ஸிங் போட்டி. திடீர்னு கரன்ட் கட். கும்மிருட்டு. ஒரு பாக்ஸர் தீக்குச்சியைப் பத்தவெச்சு, ஆடியன்ஸ் அத்தனை பேரையும் ஒரு தீக்குச்சியைப் பத்தவைக்கச் சொன்னார். எல்லாரும் பத்தவைக்க... பிரகாசமான வெளிச்சம் வந்துச்சு. ஒரு சின்ன தீப்பொறி போன்ற விழிப்பு உணர்வுதான், சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் அங்கிள்!''

கதை கதையாம் காரணமாம்!

வித்யா ப்ரியதர்ஷினி, கல்லூரி மாணவி, சேலம்: ''இரண்டு துறவிகள், ஓர் இளம் பெண் ஆகியோர் நடந்து சென்றபோது, காட்டாறு குறுக்கிடுகிறது. ஆற்றைக் கடக்க அந்தப் பெண், துறவியிடம் உதவி கேட்க... ஒரு துறவி அந்தப் பெண்ணைத் தூக்கி அக்கரையில் விடுகிறார். சிறிது நேரம் கழித்து அவரோடு வந்த துறவி, 'நீங்கள் அந்தப் பெண்ணை தொட்டுத் தூக்கியது தவறு’ என்றார். அதற்கு அவர், 'நான் அந்தப் பெண்ணைத் தூக்கி அக்கரையில் விட்டுவிட்டேன். ஏன் நீங்கள் இன்னும் மனதில் அந்தப் பெண்ணையே சுமந்து வருகிறீர்கள்?’ என்று சொன்னபோது, கேள்வி கேட்ட துறவி தன் தவறை உணர்ந்து வெட்கப்பட்டார்!''

துரைசாமி, எழுத்தாளர், சேலம்: ''இளைஞன் ஒருவன் சாமியாரைச் சந்தித்து வாழ்க்கையில் செல்வச் செழிப்பாக இருக்க வழி கேட்டான். சாமியார், 'ஐந்து வருடம் கடும் தவம் செய்தால் ஸ்ரீதேவி வருவாள். வரங்களைப் பெறலாம்’ என்றார். இளைஞனோ, 'மூன்று நாளில் நான் நினைத்ததை அடைய வேண்டும்’ என்றான். சாமியார், 'மூன்று நாளில் மூதேவிதான் வருவாள்’ என்று கோபமாகச் சொல்லிப் போய்விட்டார். இளைஞனும் மூதேவியை வேண்டி தவம் இருக்க, உடனே வந்தாள் மூதேவி. 'என்னை வேண்டி யாரும் தவம் இருந்ததே இல்லை. மிக்க நன்றி. உனக்கு என்ன வேண்டும்?’ என்றாள். இளைஞனும், 'நான் செல்வச் செழிப்புடன் இருக்கவேண்டும். என் வாழ்க்கையில் நீ வரக்கூடாது’ என்றான். மூதேவியும் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டு சென்றாள். இதுக்குப் பேர்தான் மாத்தி யோசிங்கிறது!''

- வீ.கே.ரமேஷ், கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு