மிலிட்டரி குடும்பம்!

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்துக்குச் சென்று, ''பெரியசாமி வீடு எங்கே?'' என்று கேட்டால், ''ஓ... பட்டாளத்தார் வீடா?'' என்று கை காட்டுகிறார்கள். பெரியசாமியைச் சேர்த்து அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு உழைப்பதைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார் பெரியசாமி.

##~##
வாசகர் வாய்ஸ்!

''எனக்கு 19 வயசில் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. முதல் குழந்தை பிறந்ததுமே பட்டாளத்தில் சேரணும்னு தீராத ஆசை. உடனே கிளம்பிட்டேன். 17 வருஷ சர்வீஸ்ல இந்தியா நடத்தின மூணு போர்லயும் நான் இருந்தேன். அதில் 1965-ல் பாகிஸ்தானோடு நடந்த போரைத்தான் மறக்க முடியாது. நடுநிசியில் எல்லாரும் தூங்கிட்டு இருக்கோம். திடீர்னு பாகிஸ்தான் ஆளுங்க சராமாரியாச் சுட ஆரம்பிச்சுட்டாங்க. என் ட்ரூப்ல இருந்த முக்கால்வாசி பேர் இறந்துட்டாங்க. நான் எப்படியோ உயிர் பிழைச்சுட்டேன். 1971-ல் போர் நடந்தப்ப இந்திராகாந்தி பிரதமர். எந்தப் பிரதமரும் போர்க்களத்துக்கு வர மாட்டாங்க. ஆனா, இந்திரா அம்மா வந்து எங்களை ஊக்கப்படுத்தினாங்க. ''நீங்க நாட்டுக்காகத் தைரியமாப் போர் செய்யுங்க. நான் உங்கக் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன்!''னு சொன்னாங்க. அந்தத் தைரியம் பிடிச்சுப்போய்த்தான் என் மகளுக்கு இந்திரானு பேர்வெச்சேன். என்னோட ஆறு பசங்க, மூணு பேரனுங்க எல்லாரும் இந்தியாவுல வெவ்வேறு இடத்தில் பட்டாளத்துல இருக்காங்க.  எல்லாம் என் கதையைக் கேட்டுவந்த ஆசைதான். என் குடும்பம் மட்டும் இல்லை. என் ஊரே அப்படி வீரமான ஊர்தான். இதுவரைக்கும் 500 பேருக்கு மேல பட்டாளத்துல இருக்காங்க. சமீபத்தில் மதுரை கலெக்டர் சகாயம் எங்களைப் பாராட்டிக் கௌரவிச்சார்!'' என்கிறார் பெருமையாக.

ரா.அண்ணாமலை, படம்: ச.லெட்சுமிகாந்த்

பீரங்கி நாட்டாமை!

'கண்டால் எடு... கேட்டால் கொடு!’ இது கிராமங்களில் இன்றளவும் வழக்கத்தில் இருக்கும் ஒரு பழமொழி. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத் தில் இருக்கும் பொட்டல்குளம் கிராம மக்கள் இதுவரை எடுத்துவைத்த பொருளைத் 'திரும்பக்கொடுப்பேனா?’ என்று அடம்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் பொருளைக் கேட்பது இந்திய அரசாங்கம் என்பதுதான் இதில் சுவாரஸ்யம். அந்தப் பொருள்... அந்தக் காலத்து பீரங்கி.

வாசகர் வாய்ஸ்!

50 வருஷத்துக்கு முன்னாடி ஒரு  கோடை காலத்தில் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற உழவு செய்துகொண்டு இருந்திருக்கிறார் பொட்டல்குளம் விவசாயி ஒருவர். திடீரென மண் உள்ளே இழுக்க, தோண்டிப் பார்த்திருக்கிறார். அடுக்கிவைக்கப்பட்டப் பலகைகளுக்குக் கீழே அமைதியாக நின்றிருக்கிறது ஒரு பீரங்கி. அந்த பீரங்கியை ஊருக்கு நடுவே நிறுத்திவைத்து அதன் வாய்ப் பகுதியில் விளக்கு ஏற்றி இருக்கிறார்கள். அப்போது நாட்டாமைக் கூட்டங்கள் இந்த பீரங்கி விளக்கின் கீழ்தான் நடைபெற்று இருக்கின்றன. மின்சார விளக்கின் வரவால், பீரங்கி விளக்கின் மேல் கடிகாரம்வைத்து பீரங்கிக் கடிகாரமாக மாற்றிவிட்டனர். அகழ்வாராய்ச்சித் துறை அதிகாரிகள் மூன்று முறை ஊர் மக்களிடம் பீரங்கியைக் கொடுக்கச் சொல்லி கேட்டும், தலையை இட வலமாக அசைத்துவிட்டார்கள் மக்கள். ''அட கொடுத்துட வேண்டியதுதானே?'' என்றால், கோபப்படுகிறார் விவசாயி ராபின்சன். ''அந்தக் காலத்துல எங்க ஊர்ப் பெரியவங்க வெள்ளைக்காரங்ககிட்ட சண்டை போடுறதுக்காக வெச்சிருந்த பீரங்கி இது. அவங்களோட வீரத்தின் அடையாளம் இது. காலப்போக்கில் அதை என்ன பண்றதுனு தெரியாமப் புதைச்சுவெச்சு இருக்காங்க. 'பெரியவங்க ஞாபகமா அது எப்பவுமே நம்ம கூடவே இருக்கட்டும்’னு ஊர்க் கூடி முடிவு செஞ்சோம். அதனால் ஆபீஸருங்க வந்து கேட்டப்ப, 'கொடுக்க முடியாது!’னு சொல்லிட்டோம். மன்னர்களோட கோட்டை எல்லைக்காக நடந்த சண்டையில் இந்த பீரங்கியைப் பயன்படுத்தி இருப் பாங்கனு நினைக்கிறோம். ஒரு தடவை எங்க ஊர்ல தோட்டத் துக் கிணத்தைத் தூர் வாரும்போது பீரங்கிக் குண்டு கள்கூட கிடைச்சுது. அதையும் எங்க மக்கள் பத்திரமா எடுத்து வெச்சு இருக்காங்க. என்கிட்டே கூட ரெண்டு பீரங்கி குண்டுகள் இருக்குது. இதை வெச்சுக்கிட்டு கவர்மென்ட் என்ன சண்டையாப் போடப் போகுது? ஏதோ கண்ணாடிக்குள்ள தூக்கிவைக்கப்போறாங்க. அதுக்கு நாங்களாவது பத்திரமாவெச்சு இருப்போம்ல!'' என்றபடியே தோள் துண்டைப் பட்டென்று உதறுகிறார்.

அது சரிதான்!

ரா.ராபின் மார்லர்

கதவைத் தட்டும் சான்றிதழ்!

மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசின் பல திட்டங்களைப் பெறுவதற்கு சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் அவசியம். இவற்றைப் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் களைக் களைவதற்காகப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், தாலுகா அலுவலகங்களில் இந்தச் சான்றிதழ்களை பெறும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம்      செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர் களுக்கு நேரடியாக வீடுகளுக்கே தபால் மூலம் சான் றிதழ் வழங்கும் திட்டத்தை முதல்முறையாக செயல்படுத்தி இருக்கிறார் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜி.

வாசகர் வாய்ஸ்!

''விருதுநகர் மாவட்டத்தில் 270 அரசு மற்றும் தனி யார்ப் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் களுக்குச் சான்றிதழ்கள் வழங்க முடிவுசெய்தோம். அதன்படி அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் இருந்தேவிண் ணப்பம் மற்றும் ரேஷன் கார்டு நகல் போன்றவற்றை வாங்கி, விண்ணப்பங்களைத் தனித் தனியாகப் பிரித்து ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி சரிபார்த்தோம். பிறகு குறிப்பிட்ட நாட்களில் அனைத்துத் தாசில்தார்களையும் ஒரே இடத்தில் வரவழைத்து மாண வர்களுக்குத் தேவையான சான்றிதழ்களில் கையெழுத்து வாங்கினோம். ஒவ்வொரு மாணவரின் முகவரிக்கும் எல்லாச் சான்றிதழ்களும் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பட்டன. கிட்டத்தட்ட 30 ஆயிரத்து 685 மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயன் அடைந்து இருக்கிறார்கள். இதில் வரவேற்கத்தக்கது மாணவர்களின் தபால் கவருக்கு ஸ்டாம்ப் ஒட்டுவதில் இருந்து இந்தியத் தபால் துறை விலக்கு அளித்திருந்தது. மேலும் மாணவர்களின் சான்றிதழ் தபால்களைப் பெற்று அவற்றை அனுப்புவதற் கும் தபால் துறை, சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.அத னால்தான் ஒரே நாளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கும் சான்றிதழ்களை எளிதாக அனுப்ப முடிந்தது!'' என்றார் கலெக்டர் பாலாஜி.

- எம்.கார்த்தி, படம்: முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு