Published:Updated:

’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு!’

’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு!’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு!’

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் மெயின் ரோட்டில் இருக்கிறது வல்லநாடு. இது நடிகர் டெல்லி கணேஷின் சொந்த ஊர். தன் ஊர் பற்றி இங்கே மனம் திறக்கிறார் அவர்.

’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு!’
##~##

''அந்தக் காலத்துல ஸ்ரீமாற ஸ்ரீவல்லப்பாண்டிய மன்னன் ஆண்ட பகுதிக்கு உட்பட்ட இடத்தில் இருந்ததால், வல்லநாடுனு பெயர் வந்துச்சு. எங்க ஊர் அரிவாள் தயாரிப்புக்குப் பேர் போனது. சுத்துப்பட்டிக் காரங்க வல்லநாட்டு அரிவாள்னு விரும்பி வாங்குவாங்க. துப்பாக்கி அருவா, கோழிக் கால் அருவா, பல்லருவானு விதவிதமா அரிவாள் தயாரிப்பாங்க. எங்க ஊர்ல எனக்குப் பிடிச்சது தாமிரபரணி ஆறுதான். ஆத்துல வெள்ளம் வரும் போது எட்டி நின்னு வேடிக்கை பார்ப்போம். தண்ணி குறைஞ்சதும் நீச்சல் அடிச்சு, ஆட்டம் போடுவோம். தண்ணி ஓடலைனா ஆத்து மணலை மம்பட்டிவெச்சுப் பள்ளம் தோண்டி, ஊத்துத் தண்ணியை கோரிட்டுப் போவோம்.   பள்ளிக்கூடம் லீவு விட்டா ஊர்ல இருக்கிற பெருமாள் கோயில் கோபுரத்து ஓட்டையில புறாக் குஞ்சு பிடிச்சு வளர்ப்போம். ஆத்துப் பொந்துல தண்ணிப் பாம்பு பிடிச்சு ஒண்ணோட ஒண்ணு சண்டைக்கு விடுவோம். ஓணானைப் பிடிச்சு அதோட கண்ணுல மிளகாப் பொடி போட்டு சுத்தவிடு வோம். அதெல்லாம் அப்போ சாகசமாத் தெரிஞ்சுது. ஆனா, ஒண்ணும் தெரியாத அந்த வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துனோமேனு நினைச்சுப்பார்த்தா இப்போ வருத்தமா இருக்கு.  ஊர்ல ஒரு டூரிங் டாக்கீஸ் உண்டு. படம் பார்க்க வீட்டுல காசு கொடுக்க மாட்டாங்க. அதனால நண்பர்களோட சேர்ந்து, வீட்டு மாடியில காயவெச்சிருக்கிற நெல்லை யாருக்கும் தெரியாம பையில் அடைச்சு கயிறு வழியா இறக்கி, சந்தையில் வித்துப் படம் பார்ப்போம்.  சுற்றி இருக்கிற ஊர்க்காரங்க தங்களோட பகையைத் தீர்த்துக்க சினிமாக் கொட்டகையைத்தான் பயன் படுத்துவாங்க. மூணு மாசம் பிரச்னைஇல்லா மப் படம் ஓடும். அப்புறம் ஒரு கொலை விழும். அப்புறம் மூணு மாசம் தியேட்டரை மூடிடுவாங்க. இப்படியே திரும்பத் திரும்ப நடந்துட்டு இருக்கும்.  தீபாவளிக்கு வீட்டுல வெடி வாங்கித் தர மாட்டாங்க. பணக்கார வீட்டுப் பசங்க போடுறதுல வெடிக்காத வெடிகளைக் கைப்பத்தி வெயில்ல காயவெச்சு ராத்திரி வெடிப்போம்.

வருஷத்துக்கு ஒருநாள் வாத்தியார் பேச்சிமுத்துப்பிள்ளை டூர் கூட்டிட்டுப் போவாரு. அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷன்தான் டூரிஸ்ட் ஸ்பாட். பாட்டு பாடிட்டு நடந்தே ஸ்டேஷனுக்குப் போய் காத்திருப்போம். கரி புகையைக் கக்கிட்டு திருச்செந்தூர்ல இருந்து ரயில் வரும். ரயிலைச் சுத்திப் பார்த்துட்டுத் திரும்ப நடந்து ஊர்த் திரும்புவோம்.  அடுத்து வர்ற பள்ளிக்கூடப் பரீட்சையில் 'சமீபத்தில் சுற்றுலா சென்று வந்த இடம் பற்றி விவரி?’ங்கிற கேள்வி இருக்கும். உடனே எல் லாரும் செய்துங்கநல்லூர் போய் ரயிலை சுத்திப் பார்த்ததை எழுதுவோம். எனக்குத் தெரிஞ்சு யாரும் யாரையும் பார்க்காம, யார்கிட்டயும் கேட்காம சொந்தமா எழுதின ஒரே பதில்அதுவாத்தான் இருக்கும்.

’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு!’

ஊர்ல இருக்கிற பஜனை மண்டபத்துல சீனிவாச ஆண்டவருன்னு ஒருமாற்றுத் திறனாளி இருந்தார். அவர் யார் கூடவும் சரியாப் பேச மாட்டார்.  ஒருநாள் அவரே தானா முன்வந்து, 'நான் ஜீவசமாதி அடையப் போறேன்’னு சொன்னார். குழி தோண்டி உப்பு, மிளகு எல் லாம் போட்டு அவராவே ஜீவசமாதி அடைஞ்சுட் டார். அந்தச் சம்பவம் அப்போ பரபரப்பாப் பேசப்பட்டுச்சு. எங்க ஊருக்கு கவர்மென்ட் பஸ் கிடையாது. 'லயன் சீதாபதி பயனீர்’னு தனியார் வண்டிதான் வரும். அப்போ அதை பஸ்னு சொல்ல மாட்டோம். காருனுதான் சொல்வோம். பஸ் வர்ற நேரத்தைவெச்சு 'காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு’னு சொல் வோம். நாடகம், சினிமாவுக்காகப் பல ஊர்கள் போயாச்சு. ஆனா, வல்லநாடு மண்ணைமிதிச்சாத் தான் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்குது!''

’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு!’

- இ.கார்த்திகேயன், ஆ.கோமதிநாயகம்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு