Election bannerElection banner
Published:Updated:

”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”

”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”

”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”

டுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அதற்கு எதிரான குரலை உயர்த்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கோ.சுகுமாரன், புதுச்சேரி குறித்த தன் நினைவுகளையும் உணர்வுகளையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”
##~##

''புதுவையில் தற்போது மஞ்சினி நகர் என்று அழைக்கப்படும் பகுதிதான் என் முன்னோர்கள் பிறந்த பகுதி. எங்கள் தெருவுக்கு வடக்கில் பெருமாள் கோயில் வீதியில் பாரதிதாசன், தெற்கில் ஈஸ்வரன் கோயில் வீதியில் பாரதியார் வாழ்ந்த வீடுகள் உள்ளன. இரண்டு மகத்தான தமிழ் ஆளுமைகள் உலவிய வீடுகள் என்ற அறிதலே இல்லாமல் இந்த வீடுகளுக்குச் சென்று விளையாடுவோம்.

வீட்டுக்குத் தெரியாமல் கடலில் குளிப்பது சுகமானது. ஆனால், சில நேரங்களில் கடலில் குளிப்பது ஆபத்தாக முடிவதால் குளிக்க வீட்டில் தடைபோடுவார்கள். கால் விரல்களுக்கு இடையே படிந்து இருக்கும் கடல் மணல், அணிந்து இருக்கும் துணியை நக்கி உப்புக் கரிக்கிறதா எனப் பார்த்து, கடலில் குளித்ததை உறுதிசெய்து கண்டிப்பார்கள். பல நேரங்களில் கடற்கரையில் சட்டை, காற்சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு குளிக்கப்போய், அவற்றைத் தொலைத்துவிட்டு நிர்வாணமாக வீட்டுக்குச் சென்று அடிவாங்கிய நாட்களும் உண்டு. ஒழுங்கு நிறைந்த வீதிகள்தான் எங்களுக்கு விளையாட்டுத் திடல். கோட்டிப் புல், கண்ணாமூச்சி, திருடன் போலீஸ் என, சகல விளையாட்டுக்களும் வீதியில்தான் நடக்கும். இன்று சிறுவர்கள் தங்களுக்கான வெளி இன்றி தவிப்பது பரிதாபம். சாதி அடையாளத்தை ஞாபகப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம், கோமுட்டித் தெரு, செட்டித் தெரு, வெள்ளாள வீதி என, இன்றும் தொடர்வது அழகு நகரத்தின் அவலம்தான்!

”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”

நகரத்தைப் பிரிக்கும் வாய்க்காலுக்குக் கிழக்கே உள்ள பகுதி வெள்ளை நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் பகுதி வசித்துவருகின்றனர். பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது என்பது ஒவ்வோர் இளைஞனின் கனவு. இதற்காக பிரெஞ்ச் கற்றுத்தரும் அலியான்ஸ் ஃபிரான்சேஸ், லிசே பிரான்சேஸ் பள்ளி முன்பு மாணவிகளைக் காதலிக்க இளைஞர்கள் தவம் இருப்பது சுவாரஸ்யம் நிறைந்த தனிக் கதை. ஜூலை மாதம் தொடங்கி மூன்று மாதத்துக்கு விடுமுறையில் தங்களின் சொந்த ஊருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் வருவர். நவீன பைக்கும், கையில் 'குர்மாத்தும்’ அணிந்த இளைஞர்கள் எப்படியாவது அந்தக் குடும்ப இளம் பெண்களில் ஒருத்தியைக் காதலித்து பிரெஞ்சுக் குடியுரிமைப் பெற்று பிரான்சுக்குச் செல்ல எடுக்கும் பகீரத முயற்சிகளை ரசிக்காமல் இருக்க முடியாது.

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் ரோமன் ரோலண்ட், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், புதுவை பல்கலைக்கழக நூலகங்கள் பெரும் தரவுகளைக் கொண்டு விளங்குகின்றன. வெள்ளை நகரத்தில் 1965 முதல் இயங்கிவரும் 'கபே லூயின்’ என்ற சிறிய ஹோட்டலில் ஒரு கப் டீ குடித்துக்கொண்டே எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் விவாதிப்பது உண்டு.

அரசியல், இலக்கியம், அழகியல், நாகரிகம் தோய்ந்த எங்கள் அழகான தெருக்களில் நடைபோடுவது இன்றும் எனக்குக் கம்பீரமான அனுபவம்தான்!''

”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”
”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்!”

படங்கள்: ஆ.நந்தகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு