''மாப்ளே... வேலை முடிஞ்சிருச்சா? வாயேன் சரக்கடிக்கப் போகலாம்'', ''என்னா மச்சான், இதெல்லாம் தப்பு இல்லியா?'' ''தப்பு இல்லைனுதானே கவர்மென்ட்டே கடையைத் திறந்துவெச்சிருக்கு!'' - இதுமாதிரியான உரையாடல்கள் இப்போது தமிழ்நாட்டில் சகஜம்தான். ஆனால், கடலூர் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கணிக்கர் சமூகத்தை இந்தச் சூழலோடு ஒப்பிட்டால், இவர்கள் தமிழகத்தின் தனித்த தீவு. இவர்களில் யாரும் மது அருந்தக்கூடாது. அருந்தினால் அபராதம் உண்டு.

புகையும் குடியும் பகை!
##~##

''25 வருஷத்துக்கு முன்ன மராட்டியத்துல இருந்து வந்தவங்க நாங்க. எங்களோட சொந்தபந்தம் எல்லாம் சாணார்பாளையத்துல இருக்காங்க. இங்க சுமார் நூறு குடும்பங்கள் இருக்கு. குடுகுடுப்பை ஆட்டி வாக்கு சொல்றதும், கைரேகைப் பார்த்து எதிர்காலத்தைக் கணிச்சு சொல்றதும்தான் எங்கக் குலத்தொழில். கணிச்சுச் சொல்றவங்க என்பதாலதான் எங்களைக் கணிக்கர்கள்ங்கிற பேர் வந்தது. ஜக்கம்மாதான் எங்க குலதெய்வம். ஒவ்வொரு வருஷமும் ஆடி மாசத்துல, ஜக்கம்மாவுக்குத் திருவிழா நடத்துவோம்.  

திருவிழா முடிஞ்ச மறுநாள் எங்க மக்கள் எல்லாரும் சேர்ந்து, எங்க குலத்தைச் சேர்ந்தவங்க யாரும் தண்ணி அடிக்கக்கூடாதுனு எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதிப்போம். ஊர்ல இருக்குற எங்க மக்கள் எல்லார்க்கிட்டேயும் சம்மதம் கேட்போம். அவங்களும் சம்மதம் சொல்வாங்க. இதையும் மீறிக் குடிச்சா ஊர்க் கூடி, அந்தக் காரியத்தைச் செஞ்சவங்களுக்கு ரெண்டாயிரம் ரூவா அபராதம் விதிப்போம். கட்டத் தவறுனா, யாரும் அவரோட எந்த ஒட்டும் உறவும் வெச்சுக்கக் கூடாதுனு ஊரைவிட்டு  ஒரு மாசத்துக்கு ஒதுக்கிவைப்போம்.

அதே மாதிரி பீடி, சிகரெட் பிடிச்சா 50 ரூபாயும் குடும்பத்துல சண்டை சச்சரவுனா 500 ரூபாயும் அபராதம் போடுவோம். இதுவரைக்கும் எங்க ஜனத்துல யாரும், 'திருட்டு நடந்துருச்சு, குடும்பச் சண்டை, அடிதடினு போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி ஏறினது இல்லை. எங்க ஜக்கம்மா குடியிருக்குற இந்த ஊருக்குள்ள நாங்க செருப்புகூட போட்டு நடந்தது இல்லை. இன்னும் ஒரு விஷயத்தை முக்கியமாச் சொல்லணும். இப்பத்து இளவட்டப் புள்ளைங்க காதல்ங்கற பேருல சீரழிஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதனால, பல  குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கு. ஆனா, எங்க ஊருல இந்தக் காதல்

புகையும் குடியும் பகை!

கத்திரிக்காய்ங்கற பேச்சுக்கே இடமில்லை. சிறுசுல இருந்து பெருசு வரைக்கும் எல்லாரும் இதுல அடக்கம்.  இதை மீறினாலோ, மீற நெனைச்சாலோ, எங்க ஜக்கம்மா கட்டாயம் அவங்களைத் தண்டிப்பா.

ஒருநாளைக்கு நூறுல இருந்து நூத்தம்பது ரூபா வரைக்கும்தான் சம்பாதிப்போம். அவ்வளவுதான் வருமானம் வரும். ஆனா, அதுலயே குடும்பச் செலவையும் சமாளிச்சிக்கிட்டு  குழந்தைகளைப் படிக்கவைக்கிறோம். எங்க புள்ளைங்க என்னதான் நல்லாப் படிச்சாலும் பத்தாவதுக்கு மேல எங்களால படிக்கவைக்க முடியலங்கறதுதான் எங்க வருத்தம்.

முக்கியமா நாங்க படிச்சு நல்ல நிலைக்கு வர்றதுக்குச் சாதி சர்டிபிஃகேட் முக்கியம். ஆனா, கவர்மென்ட் ஆபீஸ்ல சாதி சர்டிபிஃகேட் வாங்கறது அவ்வளவு சுலபம் கிடையாது. பல தடவை மனு கொடுத்தும் பலன் இல்லை. ரேஷன் கார்டு, ஓட்டுப் போடற அட்டை எல்லாம்கூட வெச்சு இருக்கோம். ஆனா, இந்தச் சாதி சர்டிபிஃகேட் வாங்கறதுக்குள்ள நாங்க படற கஷ்டம் இருக்கே, அது அந்த ஜக்கம்மாவுக்குத்தான் தெரியும்'' என்று அலுத்துக்கொள்கிறார் கணிக்கர் சமூகத்தின் தலைவர் ரெட்டி.

  நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொள்கிற நம்மால் கடைப்பிடிக்க முடியாத கட்டுப்பாடுகளைப் கடைப்பிடிக்கிற இவர்களுக்கு நல்ல காலம்... பொறக்குமா?

- க.பூபாலன்
படம்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு