Published:Updated:

”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது!”

”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது!”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஊனம்தான் என்னோட முதல் போட்டியாளன். ஒவ்வொரு நாளும்... ஒவ்வொரு போட்டியிலும்... நான் அவனைத் தோற்கடிச்சுக்கிட்டே இருக்கேன். அதற்குச் சாட்சி இந்தப் பதக்கங்கள்!' புன்முறுவலோடு தான் பெற்ற பதக்கங்களை உயர்த்திப் பிடிக்கிறார், அரக்கோணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ராஜ் அரவிந்த்!

”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது!”
##~##

தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் தங்கம் வென்ற இவர், மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த பிரத்யேக காமன்வெல்த் போட்டிகளில் இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர். டேபிள் டென்னிஸ் மட்டுமின்றி வாலிபால், கபடி, ஷாட் புட் எனப் பல விளையாட்டுகளிலும் தன்னுடைய தடத்தை அழுந்தப் பதித்தவர். தொலைதூரக் கல்வி மூலம் பி.டெக்., பயிலும் இவர், தான் விளையாடிய ஒரு போட்டியில்கூட‌ பதக்கம் வெல்லாமல் திரும்பியதே இல்லையாம்(?!) - இனி அவர் சொல்லக் கேட்போம்.

'விளையாட்டுல நான் இவ்வ‌ள‌வு சாத‌னைக‌ள் செய்வேன்னு எதிர்பார்க்க‌வே இல்லை. ப‌ள்ளி நாட்க‌ளில் ந‌ண்ப‌ர்க‌ளோட விளையாடுவேன். அவங்க கொடுத்த ஊக்கத்தாலும் உற்சாக ஆதரவாலும் மாவ‌ட்ட‌, மாநில‌ அள‌வி லான‌ போட்டிக‌ளுக்கு விளையாடப் போனேன். முதன்முத‌லா நான் ப‌த‌க்க‌ம் வாங்குனது வாலிபாலில்தான். என் ரெ‌ண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டிருச்சு. ஆனால், இப்பவரை நான் என்னோட கால்கள் ஊனம்னு நினைக்கலை.  ரெ‌ண்டு கால்க‌ளும் ந‌ல்லா‌ இருப்ப‌தா நினைச்சுத்தான் ஒவ்வொரு வேலையையும் செய்றேன். சொல்ல‌ப் போனா கால்க‌ளைவிட‌ என‌க்குத் திட ‌மான‌ ம‌ன‌சு இருக்கு. அதுதான் இத்த‌னை சாத‌னைகளுக்கும் கார‌ண‌ம்.

சீனாவின் தாய்பேயில் வென்ற‌ வெண் க‌ல‌ம்தான் உல‌க‌ அள‌வில் நான் வென்ற‌ முத‌ல் ப‌த‌க்க‌ம். நிறைய‌ போட்டிக‌ளில் அரை இறுதியிலும் கால் இறுதியிலும் தோல்வி அ‌டைஞ்சிருக்கேன். அந்தத் தோல்விகள் தான் எனக்கு உரமாவும் பாடமாகவும் இருந்திருக்கு.‌ இன்னைக்கு இந்திய‌ அணிக்குப் ப‌யிற்சியாள‌ரா‌ இருக்கேன்னா என்னோட வெற்றிகள் மட்டும் காரணம் இல்லை, தோல்விகளுக்கும் அதில் சம பங்கு இருக்கு.  

”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது!”

எனக்குனு‌ த‌னிப்ப‌ட்ட ப‌‌யிற்சியாள‌ர் யாரும் கிடையாது. இத்த‌னை சாத‌னைக‌ள் புரிந்தும் ஸ்பான்ச‌ர் கிடைக்காம‌ல் இடையில் சில‌கால‌ம் எதுவும் செய்ய‌ முடியாம இருந்தேன். அப்போ ஆல்ஃபா ப‌வ‌ர்ங்கிற நிறுவ‌ன‌த்தில் வேலை பார்த்தேன். அந்த‌ வேலையை என்னை ந‌ம்பி கொடுத்த க‌லிய‌பெருமாள் சாருக்குக் கண்டிப்பா ந‌ன்றி சொல்ல‌ணும். ஏன்னா, அங்க வேலை பார்த்த ச‌ம‌ய‌த்தில்தான், அந்த  கம்பெனி வெப்சைட்டில் என்னைப் பற்றிய‌ செய்தியையும் புகைப்ப‌ட‌த்தையும் வெளியிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்துட்டு 'மிலாங்கோஸ் இன்ட‌ர்நேஷன‌ல்’ அப்படிங்கற நிறுவ‌ன‌ம் என‌க்கு ஸ்பான்ச‌ர் கொடுக்க முன்வ‌ந்துச்சு.

அர‌க்கோண‌ம் ர‌யில்வே ப‌யிற்சிப்ப‌ள்ளி யின் அப்போதைய‌ செய‌லாளர் ல‌ட்சு ம‌ண‌ன் என் திற‌மைக‌ளைப் புரிஞ்சுக்கிட்டு என்னைப் ப‌யிற்சியாள‌ரா நிய‌மிச்சார். நான் மாற்றுத்திற‌னாளிக‌ளோட மட்டும் தான் விளையாடுவேன்னு இல்லை, மாற்றுத்திறனாளி கள் அல்லாதவங்களோடயும் விளையாடுவேன்.

”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது!”

இந்தியாவில் டேபிள் டென்னிஸில் மாற்றுத் திற‌னாளிக‌ள் அவ்வ‌ள‌வா முதல் இடத்தில் இல்லை. அதுக்காக இங்க திறமையானவங்க இல்லைனு அர்த்தம் இல்லை. சரியான வாய்ப்பு கள் கிடைக்கலை. சில நேரங்களில் பணம் இருந்தால்தான் விளையாடவோ, பயிற்சியாளரா கவோ ஆகமுடியும்கிற சூழ்நிலையும் இருக்கு. என்னைப் போல எத்த‌னையோ திற‌மைசாலிக‌ள் ஸ்பான்ச‌ர் கிடைக்காததால  வெளி உலகத்துக்கு அடையாளம் தெரியாம இருக்காங்க. அவங்களை எல்லாம் அடையாளம் காணணும். அடுத்த ஒலிம்பிக்கில் பயிற்சிக்கொடுத்து டேபிள் டென்னிஸில் பதக்கம் வாங்கவைப்பேன். பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக,‌ காம‌ன்வெல்த் தீப‌த்தை ஏந்திட்டுப் போனேன். அது சாதார‌ண‌ தீப‌ம் அல்ல, இருளில் இருந்த என்னை வெளிச்ச‌த்துக்குக் கொண்டுவ‌ந்த‌ நம்பிக்கை தீபம்!' என்று சொல்லும் ராஜ் அரவிந்துக்கு வாழ்த்துச் சொல்லி கை குலுக்க, ந‌ர‌ம்பின் வ‌ழியே நமக்கும் தொற்றிக்கொள்கிற‌து இன‌ம்புரியா ம‌ன‌உறுதி!

”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது!”

பா.ப‌ற்குண‌ன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு