Published:Updated:

தோசை மாஸ்டர்!

7-ஆம் வகுப்பு

தோசை மாஸ்டர்!

7-ஆம் வகுப்பு

Published:Updated:

'தாம்பரம் டு செங்கல்பட்டு சாலை தைலாவரத்தில் தள்ளுவண்டியில் இட்லி, தோசை விற்கும் ஒரு தம்பதிக்கு அவர்களுடைய  மகள் செய்யும் உதவி வியக்கவைக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் அவள் அங்கேயே அமர்ந்து படிக்கவும் செய்கிறாள். அந்தத் தன்னம்பிக்கைச் சிறுமி பற்றி என் விகடனில் எழுதலாமே?’ - இது தாம்பரம் வாசகர் என்.தினேஷ் வாய்ஸ் நாபில் சொன்ன தகவல்.

தோசை மாஸ்டர்!
##~##

நாம் அந்தக் கடைக்குச் சென்றபோது இரவு 7 மணி. ''என்னங்கண்ணா வேணும்? தோசையா? பிளைனா? ஆனியனா?'' என்று கேட்டபடி, ஒரு டபராவில் மாவை எடுத்து அழகாகக் கல்லில் ஊற்றி வட்டம், நீள்வட்டம் என விதம்விதமாகத் தோசை சுட்டு, சுருட்டித் தட்டில் போட்டபடி இருக்கும் கலைவாணி 7-ம் வகுப்புப் படிக்கும் மாணவி.

''அண்ணா, நான் நத்திவரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். எங்க அம்மா அப்பாகூட சாயங்காலம் 7 மணிக்கு வந்துடுவேன். இங்க நான்தான் தோசை மாஸ்டர். ஆம்லேட், ஆஃப் பாயில், ஃபுல் பாயில், சப்பாத்தி எல்லாம் போடுவேன். ராத்திரி 10.30 மணி வரை இங்க வியாபாரம் போகும்'' என்றவரிடம், ''சரி பாப்பா... இப்படி இங்க தோசை சுட்டுக்கிட்டு இருந்தா எப்பப் படிப்ப?'' என்ற நம்மிடம், ''என் பேரு பாப்பா இல்லண்ணா, கலைவாணி'' என்று சிரித்தவள் தொடர்ந்து பேசுகிறாள்.

''எங்க கிளாஸ்ல மொத்தம் 94 பேரு இருக்காங்கண்ணா. அதுல நான் செகண்ட் ரேங்க். கிளாஸ் லீடரும் நான்தான். எல்லாப் பாடத்தையும் கிளாஸ்லயே படிச்சிடுவேன். ஹோம் வொர்க் கொடுத்தாங்கனா அதையும் இன்டர்வெல், லஞ்ச் டைம்லயே முடிச்சுடுவேன். அப்படி முடிக்க முடியலைனா, இங்க வந்து ஆள் கம்மியா இருக்கறப்ப உட்கார்ந்து எழுதிடுவேன். ஸ்கூல்ல இருந்து வந்ததும் வீட்லயும் படிப்பேன். என் தங்கச்சி கற்பகம் ரெண்டாவது படிக்கிறா. அவளுக்கும் பாடம் சொல்லித்தருவேன். ஏதாவது தெரியலைனா மட்டும் மிஸ்கிட்ட போய்  கேட்டுப்பேன்.

நான் இங்க வேலை செய்றது எங்க கிளாஸ் மிஸ் ஸ்டெல்லா மேடத்துக்கு மட்டும்தான் தெரியும். ஒரு தடவை அவங்க இங்க தோசை வாங்க வந்தப்ப பாத்தாங்க. என் ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் தெரியாது. 'தெரிஞ்சா கிண்டல் பண்ணுவாங்களோ’னு நினைச்சு சொல்லலை. நான் ரொம்பச் சுட்டினு எங்க மிஸ் சொல்வாங்க. நான் இங்கதாண்ணா இப்படிப் பேசுறேன். கிளாஸ்ல சமர்த்தா இருப்பேன்'' என்ற கலைவாணியிடம், ''ஏம்ம்மா தண்ணி தீர்ந்துடுச்சு. போய் எடுத்துட்டு வா கண்ணு'' என்று அவளின் அப்பா சொல்ல, ''ஒரு நிமிஷம் இருங்கண்ணா... வந்துடுறேன்'' என்றபடி குடுகுடுவென ஓடிப்போய் பெரிய தண்ணீர்க் குடத்தைத் தூக்கி சின்ன இடுப்பில் வைத்துக்கொண்டு வந்துவைத்தவள், ''இப்ப கஷ்டப்பட்டா பின்னாடி நல்லா இருக்கலாம்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க. அது உண்மைதானேண்ணா!'' என்று சிரிக்கிறாள்.

தோசை மாஸ்டர்!

கலைவாணியின் அம்மா ராமலட்சுமி, ''இவ எங்களுக்குக் கடவுளாப் பார்த்து தந்த வரம். எனக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கு. இவராலயும் ரொம்ப நேரம் வேலை செய்ய முடியாதுங்க. இவளாலதான் இந்தக் கடையும் எங்க வாழ்க்கையும் ஓடிக்கிட்டு இருக்கு. நல்லா தோசை சுடுவா. வீட்லயும் என்னை வேலை செய்யவே விடமாட்டா. எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்வா. நல்லாவும் படிப்பா. சில நேரத்தில் எங்களுக்கே புத்திமதி சொல்வா. ஆச்சர்யமா இருக்கும்'' என்று பூரிக்கிறார்.

ரோல் மாடல் என்பவர்கள் மகாத்மா காந்தி, அன்னை தெரசாவாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்த கலைவாணி மாதிரியும்கூட இருக்கலாம்!

தோசை மாஸ்டர்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: க.கோ.ஆனந்த்