Published:Updated:

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!

அசத்தல் ஆட்டோக்காரர்

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!

அசத்தல் ஆட்டோக்காரர்

Published:Updated:

'சென்னைதாங்க நம்ம சொந்த ஊரு. ஸ்கூலுக்குப் போகாம கட் அடிச்சுட்டு எங்க ஏரியா ஆட்டோக்காரங்கக்கூட சேர்ந்து லூட்டி அடிச்சவன், அப்படியே நானும் ஆட்டோக்காரன் ஆயிட்டேன். அம்பத்தூர்ல இருந்து தாம்பரம் வரைக்கும் சென்னையில இருக்குற எல்லா சந்துபொந்துகளும் தெரியும். 30 வருஷமா அபிராமபுரம் ஆட்டோ ஸ்டாண்ட்தாங்க என் இன்னொரு வீடு!'' - கலகலவெனப் பேசுகிறார் ஆட்டோ ஓட்டுநர் ரவி. இவருக்கு இன்னொரு பெயர் 'ஃபன் ரவி.’ பிறந்தநாள் பார்ட்டி, திருமண வரவேற்பு, கேம் ஷோ எனச் சிறிதும் பெரிதுமாக ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை வடிவமைத்து தந்து வியக்கவைக்கிறார். ஆட்டோ ரவி, பன் ரவியான கதையை அவரே பகிர்ந்து கொள்கிறார்.

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!
##~##

''சினிமாவுல இடைவேளைக்கு அப்புறம் ஒரு ட்விஸ்ட் வர்ற மாதிரி என் வாழ்க்கையிலும்  ஒரு ட்விஸ்ட் வந்துச்சு தம்பி. அப்ப நான் கலை நிகழ்ச்சிகளை ஆர்டர் எடுத்து நடத்துற தனியார் கம்பெனியில ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தேன். அந்த விழாவுக்குத் தேவையான பொருட்கள், ஆட்களை ஏத்திக்கிட்டு போறதுனு நிறைய வேலைகள். அப்பப்ப அவங்களுக்குச் சில ஐடியாக்களை அள்ளிவிடுவேன். 'யோவ் செம சோக்கா இருக்குய்யா உன் ஐடியா’னு ஜாலியாக் கிண்டலடிப்பாங்க. ஆனா, என் ஐடியாவையும் செயல்படுத்துவாங்க. இவ்வளவு ஏன், கம்பெனி மீட்டிங்குக்கும் கூட என்னைக் கூப்பிடுவாங்க. எல்லாரும் கோட் டும் சூட்டுமா டை கட்டி டீக்கா உட்கார்ந்திருக்கிற இடத்துல நான் அழுக்குக் காக்கிச் சட்டையைப் போட்டுக்கிட்டு குந்திக்கினு இருப் பேன். பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க மத்தியில நம்ம கருத்தையும் கேக்குறாங்களேனு பெருமையா இருக்கும்.

'நமக்கும் திறமை இருக்குப்பா’னு புரிஞ்சுக்கிட்டேன். தனியா வந்து இந்த மாதிரி தொழில் பண்ணலாமேனு முடிவுபண்ணி நிகழ்ச்சிக்கு நிறைய இடங்கள்ல ஆர்டர் கேட்டேன். 'ஆட்டோக்காரன் எப்படிப் பண்ணுவானோ?’னு ஆரம்பத்துல கொஞ்சம் தயங்கினாங்க. அப்படி இப்படினு போராடி முதல்ல ஒரு பிறந்தநாள் விழா ஆர்டர் எடுத்து நடத்திக் கொடுத்தேன்; அசந்துட்டாங்க. இதுவரைக்கும் 50 விழாவுக்கும் மேல சிறப்பா நடத்திக்கொடுத்து இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னகூட பெங்களூருல ஒரு கல்யாணத்துக்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் பண்ணிக்கொடுத்தேன். 'என்னென்ன தேவைனு தெளிவா லிஸ்ட்டு போட்டுக் கொடுத்துடுங்க. அதுக்குத் தகுந்த மாதிரி ஆட்களை இறக்கி வேலையை முடிச்சுக் கொடுத்துடுறேன்’னு சொல்லிடுவேன்.

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!

முதல்ல ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தப்ப ஹோட்டல் ரெசிடன்சியில சவாரி ஏத்தப் போனா 'இங்க எல்லாம் வரக்கூடாது’னு செக்யூரிட்டி விரட்டுவார். ஆனா, இப்ப அங்ககூட கிராண்டா ஒரு விழாவை நடத்திக் கொடுத்தேன். அந்த ஃபங்ஷனுக்கு பெரிய பெரிய ஆளுங்க மத்தியில உள்ளே போனப்ப, என்னை உள்ளே விட மாட்டேன்னு சொன்ன அதே செக்யூரிட்டி சல்யூட் அடிச்சி வரவேற்றார். இதைவிட வேற என்ன தம்பி பெருமை வேணும்?

அந்த விழா ஏற்பாடு அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போய் சொன்ன டப்புக்கு மேலயே கொடுத்தாங்க. 'பேசின காசு கொடுத்தா போதும். வேற ஏதாவது ஆர்டர் இருந்தாச் சொல்லுங்க. இதைவிட சிறப்பாப் பண்ணித் தர்றேன்’னு சொல்லி மிச்சப் பணத்தைத் திரும்பக் கொடுத்தேன். இப்ப கல்யாண ஆர்டர்தான் நிறைய வருது. கல்யாண விழாக்கள்ல மேஜிக் ஷோ, பார்ட்டி கேம்னு அவங்கவங்களுக்கு எது விருப்பமோ, அதுக்கான ஏற்பாடுகளை பெஸ்ட்டா பண்ணிக்கொடுத்துடுவேன். இப்ப என் ரெண்டாவது பையனும் உதவியா இருக்கான். குறுகிய காலத்துல தனியா வந்து சாதிக்கிறது பெருமையா இருக்கு தம்பி. ஆனாலும் நான் எப்பவும் அதே ஆட்டோக்காரன்தான். ஒரு மாசத்துக்கு அஞ்சுல இருந்து பத்து ஆர்டர் வரைக்கும் வரும். மத்த நேரத்துல ஆட்டோ ஓட்டப்போயிடுவேன். நமக்கு வெட்டியா குந்திக்கினு இருக்கிறது பிடிக்காது தம்பி. கூடிய சீக்கிரம் ஒரு குட்டியூண்டு தொழிலதிபராவது ஆகிடுவேன். அப்பவும் நம்மளை வந்து பேட்டி எடுக்கணும் கண்ணு!'' என்கிறார் 'ஃபன் ரவி’.

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி