Published:Updated:

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

Published:Updated:

மாதவி லதா - போலியோவால் பாதிக்கப்பட்டாலும் தன் தொடர் முயற்சியாலும் பயிற்சியாலும் நீச்சல் பழகி, பதக்கங்களை அள்ளி, நல்ல பணியில் அமர்ந்து பலரை நிமிர்ந்து பார்க்க வைத்தவர். இவருடைய போராட்ட வாழ்க்கையைப் பற்றி விகடன் 31-8-2011 இதழில் 'நம்மால் முடியும்!’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். இன்று அவரிடம் நீச்சல் கற்ற இரண்டு மாற்றுத் திறனாளிகள், தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாரா ஒலிம்பிக்ஸ்’ போட்டியில் நான்கு தங்கம் உட்பட எட்டுப் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்!

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!
##~##

''வெங்கடேசன், உதிரா ராமச்சந்திரன் இருவரும் விகடன்ல வந்த கட்டுரையைப் படிச்சிட்டுதான் என்கிட்ட பயிற்சிக்காக வந்தாங்க. இதற்கிடையில் என் பணிகளைப் பார்த்துட்டு 'பாரா ஒலிம்பிக்ஸ் ஸ்விம்மிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு, 'நாங்க தேசிய அளவில் ஒரு போட்டி நடத்துறோம். கலந்துக்கங்க’னு சொன்னாங்க. பிராக்டீஸுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே இருந்தது. 'பட்டர்ஃப்ளை ஸ்விம்மிங்ல ரெண்டு கால்களும் மேல போகணும். ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்ல கால்கள் மேலேயே போகக் கூடாது’னு மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டிகள்ல சில விதிமுறைகள் இருக்கு. இது எதுவுமே தெரியாமல் பயிற்சி எடுத்துக்கிட்டு மகாராஷ்டிரா கொல்ஹாபூர்ல நடந்த 11-வது தேசிய பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் போனோம்!'' என்று மாதவி நிறுத்த, உதிரா ராமச்சந்திரன் தொடர்ந்தார்.

''எனக்கு 55 வயசு. வலது கையும், இடது காலும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கு. இதை 'கிராஸ் போலியோ’னு சொல்வாங்க. இவங்களைப்  பத்தி வந்த செய்திதான் நடக்க முடியாம இருந்த என்னை நடக்க வெச்சது. ஹைட்ரோ தெரபி எடுத்துக்கிட்டேன். இவங்ககிட்ட நீச்சலும் பழகினேன். 'பாரா ஒலிம்பிக்ஸ்’ போட்டிகள்ல கலந்துக்கிறதுக்கு வயசு ஒரு தடை இல்லைங்கிறதால நானும் கலந்துக்கிட்டேன். 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவுல எனக்குக் கிடைத்தது வெள்ளிப் பதக்கம்!'' என்று சிரித்தவர் நீரில் யோகாசனம் செய்துகாட்டி அசத்தினார்.

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

''பொதுவா, மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியை ஷி1 முதல் ஷி5 வரை ஐந்து பிரிவாப் பிரிச்சு இருப்பாங்க. உடலில் கடுமையான குறைபாடு உள்ளவங்களை 'சிவியர் டிஸ்எபிலிட்டி’னு சொல்லி முதல் இரண்டு பிரிவுகள்ல வெச்சு இருப்பாங்க. அப்புறம் மீடியம், ஓரளவு குறைந்த உடல் குறை பாடுனு அடுத்தடுத்த பிரிவுகள் வரும். இதில் நானும், வெங்கடேசனும் முதல் பிரிவு. 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், பேக், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகள்ல நான் மூணு தங்கப் பதக்கம் வாங்கினேன். ஷி1 பிரிவுல 'சாம்பியன்ஷிப்’பும் ஜெயிச்சேன்!'' என்று மாதவி பெருமிதத்துடன் கூற, அதுவரை அமைதி காத்த வெங்கடேசன் பேசினார்.

''தருமபுரி மாவட்டம் எம்.ஒட்டப்பட்டிங்கிற கிராமம்தான் என் பூர்வீகம். சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு தீ விபத்துல என் ரெண்டு கையும் போயிடுச்சு. 1996-ல் அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதா கோச்சமடைக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்தாங்க. அவங்களைப் பார்த்து மனு கொடுத்தேன். உடனே பக்கத்துல இருக்கிற பிசியோதெரபி ஹாஸ்பிட்டல்ல இடம் கிடைச்சுது. என்னோட அன்றாடப் பணிகளைச் செய்யவே அங்கதான் கத்துக்கிட்டேன். அப்புறம் தருமபுரி சிறப்புப் பள்ளியில படிச்சேன். தொடர்ந்து பி.ஏ., பி.எட்., டி.டி.எட்.னு படிச்சிட்டு இப்ப எம்.எட். பண்றேன். விகடன்ல இவங் களைப் பத்தி படிச்சதுக்கப்புறம் இவங்கக்கிட்ட நீச்சல் பயிற்சிக்குச் சேர்ந்தேன். இதோ இன்னிக்கு நானும் பதக்கம் ஜெயிச்ச ஸ்விம்மர்!'' என்று சொல்லும்போதே  அவருடைய  உடலும் முகமும் சந்தோஷத்தால் நடுங்கின.

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

''நாங்க போயிருந்த போட்டிக்கு மற்ற மாநிலங்கள்ல இருந்து 10, 20னு பலபேர் கலந்துக்கிட்டாங்க. தமிழ்நாட்டில் இருந்து போனது நாலே பேர்தான். இங்க நிறையப் பேர் எங்களை மாதிரி இருக்காங்க. அவங்களைக் கண்டு பிடிக்கணும். அவங்களுக்குனு தனியாப் பயிற்சி மையம் ஆரம்பிக்கணும். ஆந்திராவுல மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சிகளை மாநில விளையாட்டுத் துறை இலவசமாக் கொடுக்கணும்னு ஒரு அரசாணை இருக்கு. தமிழ்நாட்டுல அப்படி ஒண்ணு வந்தா நல்லா இருக்கும். இந்த வருஷம் தேசிய பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியை சென்னையில நடத்தலாம்னு இருக்கேன். எங்களைப்போல 30, 40 பேராவது போட்டியில் கலந்துக்கணும்னு எதிர்பார்க்கிறேன். ஜெயிக்கிறது ரெண்டாவது... போட்டியில கலந்துக்க முன்வருவதே பெரிய வெற்றிதானே?'' என்றபடி கைகுலுக்குகிறார் மாதவி லதா!

எங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்!

- ந.வினோத்குமார்
படங்கள்: கே.கார்த்திகேயன்