Published:Updated:

”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”

”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”

”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”

”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”

Published:Updated:
”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”

'வழுக்குப் பாறை’ பாலு, கொங்கு மண்டல விவசாயப் போராளி. இயற்கை விவசாயம், சொட்டு நீர்ப் பாசனம் என, எதற்கும் தீர்வு சொல்லும் அனுபவசாலி. 'விவசாயிகள் சங்கம் - கட்சி சார்பற்றது’ அமைப்பின் கோவை மாவட்டத் தலைவரான பாலு, தன் சொந்த ஊரான வழுக்குப்பாறையைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”
##~##

''பாலக்காடு கணவாய்க்கு மத்தியில் பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதிங்ணா வழுக்குப்பாறை. கொளுத்துற கத்திரியிலகூட புழுக்கம் தெரியாதுங்க. விவசாயம்தான் ஊரோட அடையாளம். அதிலயும் எங்க ஊர்த் தக்காளி ரொம்பப் பிரபலம். இயல்பாவே இந்த மண்ணுல பொட்டாஷ் சத்து அதிகம். தக்காளி செழுமையா வளர்ந்து, ஒரு வாரம் வரை அழுகிப்போகாம, கெட்டியா இருக்குமுங்ணா.  

எங்களுக்கு ரெண்டு பருவ மழை கிடைக்கறதால நெல்லு, கரும்பு, ராகி, கம்பு, தினைனு வருஷம் முழுக்க விதைப்பு, அறுப்புனு சரியா இருக்கும். எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது, அந்தக் காலத்துல பெருசாப் பணப் பரிவர்த்தனைக் கிடையாது. தோட்டத்துல கூலி வேலை பார்க்கிறவங்களுக்கு மாசம் 30 ரூபா

பணமும், 70 கிலோ தானியமும்தான் சம்பளம். பெரும்பாலான வீடுகள்ல நாலு காளை மாடும் பத்துப் பசு மாடும் இருக்குமுங்க. கிணத்துல தண்ணி இறைக்கக் காளை மாடு; பால் கறக்கப் பசு மாடு. இதுபோக வீட்டுக்கும் தோட்டத்துக்குமாப் பத்து, இருபது வெள்ளாடுகளும் குறியாடுகளும் திரியும்.

எங்க ஊர்ல 15 வருஷத்துக்கு முந்தி பாலை யாரும் வியாபாரம் பண்ணது இல்லை. கறக்கிற பாலை வீட்டுக்குப் போக அக்கம்பக்கம் சொந்தபந்தங்களுக்குக் கொடுத்துடுவாங்க. தேவைக்கு அதிகமாக் கறக்காம விடறதால கன்னுக்குட்டிங்களும் வயிறு முட்ட பாலைக் குடிச்சுப்போட்டு கெதியா திரியுமுங்ணா. ஆனா, கெரகம் இன்னைக்கு எல்லாமே மாறிப்போச்சு. பாலை வித்துத்தான் பல பேர் பொழப்பே ஓடுது.

நான் ஸ்கூல் படிக்கும்போது ஊருக்கு மேற்புறம் ஓடுற வழுக்குப்பாறை ஆத்துல துண்டுலயும் தூண்டில்லயும் மீன் பிடிச்சு வெளையாடுவோம். ஆத்துல மீனுங்க அதிகம். தண்ணியோட்டம் குறைஞ்சா ஊர்ல பாதிப் பேர் ஆத்துல இறங்கி கசகசனு திரியுற கெண்டை மீனுங்களை அள்ளிட்டுப் போவாங்க. ஒரு மாசம் முழுசும் ஊர் முழுக்க மீன் குழம்புதான் மணக்கும். எங்க ஊர்ல சாரை, நாகன், விரியன்னு பாம்புகள் அதிகம். தெருவுல குறுக்கே நெடுக்கே ஓடுனாலும் யாரும் அதைப் பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஏன்னா, வயல்ல எலித் தொல்லையை ஒழிக்கிறதே அந்தப் பாம்புங்கதான்.

வழுக்குப்பாறையில மாரியம்மன் கோயில் நோம்பி ரொம்பப் பிரசித்தம். நோம்பியோட சிறப்பம்சம் என்னான்னா, உயிர்ப் பலி கிடையாது. 15 நாள் நடக்கிற திருவிழாவுல வீட்டுக்குச் சுண்ணாம்புப் பூசி, காவி அடிச்சு ஊரே கலகலனு இருக்குமுங்ணா. நோம்பிக்குப் பச்சரிசி, கருப்பட்டி, நெய் போட்டுச் செய்யுற பச்சமாவு பலகாரம், மாசக் கணக்கா வெச்சு இருந்தாலும் கெடாது. எங்க ஊர்ல சாப்பாடும் சத்தாவே இருக்கும். ராகிக் களி, சோளச் சாதம், தட்டப் பயிறு சுண்டல்னு தானியங்கள்தான் உணவு. காபி எல்லாம் கண்ணுல பார்த்ததே இல்லை.

எங்க ஊரோட முதல் பட்டதாரி வெங்கடாசலம் ஐயாதான். படிப்பைப் பாதியில நிறுத்திட்டு, மாடு மேய்க்கப்போன பலரைப் பள்ளிக்கூடத்துக்குத் திருப்பினவர் அவர். இன்னைக்கு இந்தச் சின்ன கிராமத்துல டாக்டரேட் முடிச்சவங்க மட்டும் 10 பேர் இருக்காங்கன்னா, அதுக்கு அவரும் ஒரு காரணம். எங்க ஊரைச் சேர்ந்த முத்துசிவராமசாமிகள் செஞ்சேரியில திருநாவுக்கரசர் திருமடம் ஆரம்பிச்சு, ஆன்மிகச் சேவை பண்ணிட்டு இருக்கார். எங்க ஊர்ல அருமையாக் கும்மியடிக்கிற ஆண்கள் குழு ஒண்ணு இருந்துச்சு. எந்த விழானாலும் இவங்க கும்மிதான் களைகட்டும். ஆனா, அந்தக் கலைஞர்கள் மறைஞ்சதுக்கு அப்புறம், அந்தக் கலையும் எங்க ஊரைவிட்டு மறைஞ்சு போச்சுங்கறதுதான் வேதனைங்க!''

”பாலை, வியாபாரம் பண்ணதில்லைங்க!”

சந்திப்பு: எஸ்.ஷக்தி
படம்: செ.பாலநாக அபிஷேக்