Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

காசு வெறி புடிச்சு அலையறான் முத்துமணி.

 அனுபவிக்கிறது மட்டும்தான் காசு. அதுக்கு மேல பதுக்கிவைக்கிறதெல்லாம் வெறும் நம்பர்னு தெரியாமப்போகுது நாட்டுல பல பேருக்கு. அந்த நம்பர் கையில குடுமியக் குடுத்துட்டா, லேசுல விடாது அது.

முத்துமணி குடுமி சிக்கிப்போச்சு காசோட கையில. மலையக் கொள்ளையடிச்ச பாவிப் பய, ஊருல குளத்துப் பொறம்போக்கையும் கொஞ்சம் கொஞ்சமா விக்க ஆரம்பிச்சுட்டான்.

ஒரு பெருச்சாளி போதும் வீட்(¬)டக் கெடுக்க;

ஒரு வஞ்சகன் போதும் ஊ(¬)ரக் கெடுக்க.

டேயப்பா... ஒரு காலத்துல எப்பிடிஇருந்த குளம்? பாக்கப் பாக்க ஆசையா இருக்கும். குளம் நெறை பெருக்கா நிக்கிறப்பக் கரை மேல நின்னு பாத்தா, காணக் காணக் கண்ணடங்காது. தண்ணிக்கு மேல தீபம் பொருத்திவச்ச மாதிரி தாமரைப் பூவும் அல்லிப் பூவும் சும்மா வரிசை கட்டி நிக்கும். தவளையும் மீனும் தாமரை எலை மேல சடுகுடு விளையாடிட்டிப் போகுங்க.

மூன்றாம் உலகப் போர்

குளத்தங்கரையில உக்காரக்கெடச்சவன் கொடுத்துவச்சவன். கண்ணு முன்னால ஒரு உயிர் சினிமா நடக்குமய்யா குளத்துக்குள்ள. அயிரை மீனு, ஆரா மீனு, உளுவ மீனு, கெண்டை மீனு, கெளுத்தி மீனு, கெளுறு, வெராலு, மணிக்குரவைன்னு ஒரு மீனுக் குடும்பமே சண்டைச் சத்தம் போட்டுக்கிட்டே சந்தோசமா இருக்கும். 'கடக்’குன்னு தண்ணிக்குள்ள முங்கிக் கொஞ்ச நேரம் காணாமப் போயி, வீட்டுக்குச் சாயங்காலம் வெறுங்கையோட திரும்பாத சில அதிகாரிகளப் போல எதையாச்சும் ஒண்ணைப் புடிச்சு எங்கேயாவது எந்திரிக்கும் நீர்க்கோழிக.

குளத்துக்கு மத்தியில காலங்காலமா நிக்குது ஒரு கருவேலங்காடு. ஊரு தேசம் சுத்திவந்தாலும் பறவைகளுக்கெல்லாம் படுக்கை அங்கதான். கொக்கு, நாரை, மயிலு, மைனா, காக்கா, குருவி, மரங்கொத்தி, பெராந்து - இப்படிச் சகல பறவைகளுக்கும் சமத்துவபுரம் அதுதான். விடிகாலையிலயும் சாயங்காலத்துலயும் எல்லாம் கூடிக் கத்திக் குடியக் கெடுக்குங்க. ஒவ்வொரு தொண்டைக் கும் வேற வேற சத்தம். ஆனா, அத்தன சத்தத்துக்கும் ஒரே அர்த்தம் சந்தோசம் மட்டும்தான்.

ண்டு, நத்தை, தவளை, தண்ணிப்பாம்பு - இதுகளப் பாத்துப் பழகலேன்னா, ஒருத்தன் ஊருல பெறந்து ஒரு புண்ணியமும் இல்ல. மண்ணைக் கரைச்சு மனசுக்குள்ள ஊத்தாத வனுக்கு அனுபவம் எப்படி வரும் அனுபவம்?

ரு நரி, நண்டு புடிக்கிறதப் பாக்கக் கொடுத்துவச்சவன் பாக்கியசாலி.

ஓடியாடி மேஞ்சிட்டு அந்தி மசங்கப் பொந்துக்குள்ள போயிருங்க நண்டுங்க. அந்த நேரம் பாத்துத்தான் நாட்டாமைய ஆரம்பிக்கும் நரி. ஒவ்வொரு பொந்தா மோப்பம் புடிச்சு வர்ற நரி நண்டோடிய தடம் பாக்கும். மேய்ச்சல் எடுத்த நண்டு இதுக்குள்ளதான் அடைஞ்சிருக்குமின்னு அடையாளம் கண்டுபுடும். இப்பப் பின் பக்கம் திரும்பிப் பின்னங்கால்ல குத்தவச்சு ஒக்காந்துக்கிட்டு வாலைச் செலுத்தும் நரி நண்டுப் பொந்துக்குள்ள. தலையில்லாத நண்டுக்கு மூளை கம்மியா இல்லையா? என்னமோ ஒண்ணு பொந்துக்குள்ள எறங்குதுன்னு நரி வாலைக் கவ்வும் நண்டுங்க. சிக்கிருச்சுக நண்டுகன்னு தெரிஞ்சதும் விசுக்குன்னு வாலை வெளிய உருவித் தரையில ஓங்கி அடிச்சு நண்டுகளத் தலைகீழாக் கவுத்துப்புடும் நரி. அதுக பெரண்டு படுக்குமுன்ன மளார்னு தவ்வி நண்டுக் காலுகள மிசுங்க விடாம அமுக்கிக்கிட்டு அடிவயித்துச் சதைய அப்பிடியே பிச்சுத் தேங்காச்சில்லத் திங்கற மாதிரி தின்டுபுடும் தின்டு. தந்திரக்கார நரின்னு சும்மாவா சொலவம் சொன்னாங்க?

மூன்றாம் உலகப் போர்

குளமும் பூமாதேவி மாதிரிதான். ஒரு பாகுபாடும் பாக்கிறதில்ல.

மனுசனா? மாடா? வா... வந்து குளிச்சுக்க.

முள்ளுச் செடியா? அல்லிக் கொடியா? வா... வந்து முளைச்சுக்க.

மேல் சாதியா? கீழ்ச் சாதியா? வா... வந்து குடிச்சுக்க.

வயித்த வலிக்காரனா? வாந்தியெடுத்த முண்டச்சியா? வா... வந்து செத்துக்க.

சக்கரை வியாதியா? சங்கு இலை இருக்கு; தின்னுக்க.

தடுமன் காய்ச்சலா? தாராக்கீரை இருக்கு; வதக்கிக்க.

இப்பிடிச் சகல சீவராசிகளுக்கும் சர்வரோக நிவாரணியா இருந்தது பாண்டிய ராசக்கமாரு வெட்டிவச்ச அந்தக் குளம்.

குளம் நெறஞ்சாக் காடுகரை விளையறது மட்டுமில்ல - நிலத்தடி நீர் கசிஞ்சு கசிஞ்சு சுத்துபத்துல இருக்கிற மலட்டுக் கெணறுகளுக்கும் மார்புல ஊத்தெடுக்க ஆரம்பிச்சிரும்.

குளம்கிறது ஒரு ஊருக்குத் தளதளன்னு தளும்பி நிற்கிற சந்தோசம்.

ருக்குள்ள என்னைக்கு ஒரு அரசியல் கொலை நடந்துச்சோ, அன்னைக்குக் கெட்டுச்சு குளம்.

பொக்கப் பாண்டிக்கும் தும்மலப்பட்டிக் கரையான் தலையனுக்கும் ஆண்டாண்டு காலமா அரசியல் பகை. அந்தத் தேர்தல்ல பொக்கப் பாண்டிக்கு ஓட்டுப் போடவிடாமத் தன் சாதிசனத்தையே தடுத்துப்புட்டான் கரையான் தலையன்.

'ஏலேய்... அவனுக்கு லேசா ஒரு முரட்டு வைத்தியம் பண்ணிட்டு வாங்கடா’ன்னு பொக்கப் பாண்டி சொன்னதும் கிளம்பிருச்சு ஒரு தண்ணி பார்ட்டி.

வயக்காட்டுக்கு வா(ய்)மடை தெறந்துவிட்டுட்டு நடுச்சாமம் திரும்பிக்கிட்டிருந்த கரையான் தலையனக் குளத்தங்கரையில வழி மறிக்குதுக கோஷ்டிக.

வாய்த் தகராறு முத்திக் கம்புல ரெண்டு சாத்து சாத்தவும் கை தவறிப் பொடணியில விழுந்துபோச்சு ஒரு அடி; பொட்டுன்னு உசுரும் போச்சு. அடிச்சவங்களுக்கு போதையும் எறங்கிப் போச்சு.

பொணத்த என்ன பண்றது? புடிபடல ஒருத்தருக்கும்.

குளத்தோரமா ஒரு காளவாசல் புகைஞ்சிக் கிட்டிருக்கு; செங்கல்லு வெந்துக்கிட்டிருக்கு. பொணத்தத் தூக்கிக் காளவாசல்ல எறிஞ்சாங்க; முள்ளப் போட்டு மூடிட்டாங்க. பொண வாடை வராம இருக்க ஒரு சாக்கு மொளகாயக் கொட்டுனாங்க.

''யப்பே... யாத்தே''ன்னு கத்திப்பாத்தான் காளவாசல் குருசாமி.

''ஒன்னையும் சேத்து எரிச்சிருவம்டா''ன்னு மிரட்டிப் பொணத்த மட்டும் எரிச்சிட்டுப் போய்ட்டாய்ங்க.

மறுநாள் முத்துமணிகிட்ட மட்டும் தண்ணி யப் போட்டு உளறிட்டான் குருசாமி.

ஒரு புடி கிடைச்சுப்போச்சு முத்துமணிக்கு.

தன் வேலை வாங்க சினேகிதன் மூலமாப் பொக்கப் பாண்டிகிட்டக் கொடுத்த லஞ்சக் காசை வசூல் பண்ண இதாண்டா நேரமுன்னு முடிவு பண்ணிட்டான் முத்துமணி. பொக்கப் பாண்டியப் போய்ப் பாத்துட்டான்.

''யண்ணே... ஆட்சி மாறுச்சுன்னா ஆபத்துண்ணே. குடிகாரப்பய குருசாமி ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் உளறிருவாண்ணே. பச்சைநோட்டை வச்சு அவன் வாயை அடைக்கணுமுண்ணே...''

கொஞ்ச நேரம் மேலயும் கீழயும் பாத்துத் தலைய அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டுனாரு பொக்கப் பாண்டி. தலையாட்டம் நின்னுச்சுன்னா முடிவுக்கு வந்துட்டாருன்னு அர்த்தம்.

''பணமாக் கொடுக்க வேணாம்; நெலமாக் கொடுத்திருவோம்.''

''நெலமா? என்னண்ணே சொல்றீங்க?''

''குளத்துப் பொறம்போக்குல ரெண்டு ஏக்கரை அளந்துவிட்டு குருசாமிய உழுதுக் கிறச் சொல்லு. தாசில்தார், தோலான் துருத்தியெல்லாம் நான் பாத்துக்கிறேன்.''

முத்துமணி மூஞ்சி வெளுத்து வெள்ளையாப்போச்சு.

''சீ... கெட்ட சாதிப் பயலா இருக்கானே. இவன நான் ஏய்க்கலாமுன்னு வந்தா, இவன் என்னிய ஏய்ச்சு, அரசாங்கத்தையுமில்ல ஏய்க்கப் பாக்கிறான். இருங்கடி... நான் ஒன்னிய ஏய்ச்சு, குருசாமிய ஏய்ச்சு, அரசாங்கத்தையும் ஏய்க்கிறனா இல்லையா பாரு.''

நேரா குருசாமிகிட்ட போனான்.

அவன் செங்கல்ல வித்து வச்சிருந்த காசைக் கையில வாங்கிக்கிட்டுக் குளத்துப் பொறம்போக்கைக் கையக் காட்டிவிட்டுட்டுச் சொல்றான்;

''ஆண்டாண்டு காலத்துக்கு ஆண்டு அனுபவிச்சுக்க. காலாகாலத்துல பட்டா வாங்கறதுக்குப் பொக்கப் பாண்டியும் நானும் பொறுப்பு.''

எப்படியோ தன் வேலைக்காக அடுத்தவன் கொடுத்த லஞ்சத்தையும் தன் பேருக்கே மாத்தி வரவு வச்சிட்டான் முத்துமணி.

மூங்கில் காட்டுல ஒரு மரம் பத்திக்கிட்டாப்போதும்; காடே எரிஞ்சிரும். குருசாமி ஒருத்தன் உழுகவும் இந்தா... இந்தான்னு ஏழெட்டுப் பேரு எறங்கிட்டான் குளத்துக்குள்ள.

தாசில்தார் ரொம்ப வேண்டப்பட்டவர் முத்துமணிக்கு. ஒருத்தன்கூடப் பழகுன உடனே அவன் பலவீனம் கண்டுபிடிக்கிறதுதான் முத்துமணிக்கு மொதல் வேலை. தாசில்தார் காசு பணத்துக்கு ஆசப்பட்ட மாதிரி தெரியல. அவருக்கு டீ வாங்கிட்டு வர்றதுக்கே பிராந்தி பாட்டிலு எடுத்துட்டுப் போனான் பியூனு; மோப்பம் புடிச்சுட்டான். தண்ணியும் மான் கறியும்தான் தாசில்தாருக்கு இஷ்டமுன்னு தெரிஞ்சுக்கிட்டு, ஏற்றுமதித் தரத்துக்கு மான் கறியும் இறக்குமதித் தரத்துக்கு பிராந்தி பாட்டிலும் குமிச்சுப்புட்டான் குமிச்சு; விழுந்துட்டாரு தாசில்தாரு.

வீட்டுப் பத்திரத்த எடுத்து நீட்டுனாலும் கண்ண மூடிக்கிட்டுக் கையெழுத்து போட்டுருவாரு போலிருக்கு பாவம்.

இந்தா இந்தான்னு குளத்துப் புறம்போக்குல ஒரு பதினெட்டு ஏக்கரக் காசு வாங்கிட்டுப் பகுந்து கொடுத்துட்டான் முத்துமணி.

கொலைக்குச் சாட்சி வச்சிருக்கான் கையில;

ஒண்ணும் பேச முடியல பொக்கப் பாண்டியால.

மான் கறி மயக்கம்; தட்ட முடியல தாசில்தாரால.

அப்பன்கிட்டப் பிரிச்சு வீட்டைப் பங்கு போட்ட மாதிரி குளத்தையும் ஊருக்குப் பங்கு போட்டுக் கொடுத்துட்டான் கொள்ளைக்காரப் பய.

குளத்துப் பொறம்போக்குல தண்ணி வந்து அடிக்கிற தூரத்துல ஒரு காலனியே உண்டாகிப்போச்சு.

அந்த காலனி உண்டான கதையே ஓர் அரசியல் கூத்து.

செக்கானூரணியில கல்லு உடைக்கற குவாரி ஒண்ணு இருக்கு பொக்கப் பாண்டிக்கு. தேர்தலுக்கு காபந்து பண்ணவும் கள்ளஓட்டுப் போடவும் குவாரியிலயிருந்து நூறு நூத்தம்பது குடும்பங்களக் கொண்டாந்து குளத்தங்கரை ஓரமாக் குடுசு போட்டுக் கொடுத்தாரு பொக்கப் பாண்டி.

தேர்தல் முடிஞ்சிருச்சு.

வெரல்ல மையும் மையில மொய்யும் வச்ச பெறகும்கூட ஒரு பயலும் ஊரவிட்டுக் கிளம்பல.

''அய்யா சாமி... இந்த ஊருநாடு புடிச்சுப்போச்சு; மரம் மட்டை புடிச்சுப்போச்சு. பொழைச்சா இங்கேயே பொழைக்கிறோம்; செத்தா இங்கேயே சாகிறோம். எங்கள வெளியேத்தாதீக. இங்கேயே வீடு கட்டிக் கிர்றோம்.''

நூத்தம்பது குடும்பமும் மளார்னு கால்ல விழுந்திருச்சு.

''இது என்னடா வம்பாப்போச்சு? திண்ணையில பொத்திப் படுக்கப் புடவையக் கொடுத்தா, விடிஞ்சு எந்திரிச்சுப் பொண்டாட்டியே சொந்தம்கிற கதையால்லஆகிப் போயிருச்சு. என்ணொண்ணுக்கும் இருக் கட்டும். கள்ள ஓட்டுக்கும் ஆச்சு; கலவரத் துக்கும் ஆச்சு.''

அத்தனை பேரையும் சொந்தத்துக்கு வீடு கட்டவிட்டு, அனுபோகப் பாத்தியதை வேற வாங்கிக் கொடுத்துட்டான் பொக்கப் பாண்டி.

மூன்றாம் உலகப் போர்

ந்தக் கதை இப்பிடியிருக்க -

குளத்துத் தண்ணிய யாருக்கும் தெரியாம விலை பேசி விக்க ஆரம்பிச்சுட்டான் முத்துமணி.

உச்சிக்கரட்டுல இருந்த பொட்டக்காடுகளப் பூரா வளச்சு வளச்சு வாங்கிட்டான் மில்லுக்காரன். மா, எலுமிச்சை, நெல்லி, சப்போட்டான்னு நானூறு ஏக்கரையும் அடக்கி நட்டுப்புட்டான். ஆனா, நானூறு ஏக்கரும் நனையணுமே... தண்ணி இல்ல.

மில்லுக்காரன்கிட்டச் சொல்றான் முத்துமணி:

''அய்யா... பொக்கப் பாண்டி குடுமி என் கையில். நான் என்ன செஞ்சாலும் எதிர்ப் பேச்சுக் கெடையாது. தண்ணிதான வேணும் உங்களுக்கு? எங்க ஊரு குளம் என் கட்டுப்பாட்டுல. தண்ணி நான் தாரேன். ஏதோ உங்க காடு நனையற மாதிரி மாசாமாசம் என் கைய நனச்சுவிட்டுருங்க.''

வாய்மொழி ஒப்பந்தம் போட்டு, ராத்திரியோட ராத்திரியாக் குழாய் பதிச்சுத் தண்ணியும் கடத்திப்புட்டான் முத்துமணி; கொட்டுது வருமானம் கொடம் கொடமா.

அரசாங்கச் சம்பளம்தான் அவன் வாங்கறதுலயே கம்மியான பிச்சைக் காசு.

பொக்கப் பாண்டிய மிரட்டற மாதிரி கெஞ்சி, கெஞ்சற மாதிரி மிரட்டிக் குளம் தூரு வாருற டெண்டர பினாமி வச்சு எடுத்துப்புட்டான் முத்துமணி.

சம்பந்தப்பட்ட மந்திரிக்கு எட்டு சதவீதம், உள்ளூர் மந்திரி - மாவட்டச் செயலாளரு - உள்ளூர் எம்.எல்.ஏ. எல்லாம் கூடி ஏழு சதவீதம், மீடியேட்டருக்கு ரெண்டு, அதிகாரி களுக்கு எட்டு, ஒப்பந்தக்காரருக்கு ஒரு இருபத்தஞ்சு போக, பாதிக்குப் பாதி திட்டத்துக்குப் போய்ச் சேந்தா அதுவே 'கடவுள்’ செயலு. பொதுவா இதுதான் சர்க்கார் சாங்கியம்.

இந்த சாங்கியத்துல ஒண்ணைக்கூடச் செய்யல முத்துமணி.

''உசுரு போனாலும் உண்மை சொல்ல மாட்டேண்ணே. இத விட்டுக் கொடுங்கண்ணே'' - பொக்கப் பாண்டிய பயம்காட்டியே தன்னக்கட்டிட்டான்.

''அய்யா, நீங்களும் நானும் ஒரே சாதி; அரசாங்க சாதி. கருணை காட்டுங்க'' - அதிகாரிகளக் கும்புட்டே கொன்னு புட்டான்.

எடுத்துட்டான் டெண்டர; கப்பம் கட்டாமலே கப்பல் வாங்கிட்டான்  மூளைக்காரன் முத்துமணி. இமயமலையில கொண்டு போயி விட்டா, ஐசு சூடா இருக்குன்னு சொல்லிப் பனிக்கட்டிய வித்துப் பணம் சேத்திருவான்.

டெண்டர் எடுத்தது அவன்; ஆனா, குளத்துல தூரு எடுத்தது அவன் இல்ல.

குளம் வத்தி வறண்டு பாளம் பாளமா வெடிச்சவுடனே கம்மாக்குள்ள யாரு வேணும்னாலும் கரம்பை அள்ளிக்கோங்கன்னு சொல்லிப்புட்டான்; குளத்துக்குள்ள குத்து வெட்டாகிப்போச்சு. கட்டை வண்டி, டயர் வண்டி, டிராக்டரு, லாரின்னு - அவன் அவன் வரிசையில நின்னு குளத்தத் தூரு வார ஆரம்பிச்சுட்டான். ஒரே மாசத்துல குளம் ஆழமாகிப்போச்சு.

அதுக்குப் பெறகு ஜேசிபி வண்டியக் குளத்துக்குள்ள எறக்குனான் முத்துமணி. நூறு யானை மொத்தமாத் தும்பிக்கைய நீட்டிப் போற மாதிரி போகுது அந்த வண்டி. முப்பது நாள் செய்ய வேண்டிய வேலைய மூணே நாள்ல முடிச்சான். மேடு கோடு தட்டிவிட்டு ஓரஞ்சாரம் சரிபண்ணிட்டான்... மேலதிகாரிக வந்து பாத்தாலும் சந்தேகப்படாத அளவுக்குக் கீழ் மண்ண மேல் மண்ணாப் பொரட்டிவிட்டான்.

அதுக்குப் பெறகுதான் நடந்துச்சு ஒரு அநியாயக் கூத்து. சரிஞ்ச கரைய உசத்திக் கட்டறேன்னு டெண்டர் எடுத்தவன், ஜேசிபி வண்டிய முட்ட விட்டானய்யா கரையோரத்து மரங்க மேல.

நூறு இருநூறு வருசமாக் கரைக்குக் காவக் காத்த புளிய மரம், புங்க மரம், அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வேல மரம், மருத மரம், தேக்க மரம் எல்லாம் அடுக்கி வச்ச செங்கல் சூறாவளிக் காத்துல விழுகிற மாதிரி சடசடன்னு சரியுதய்யா.

பாவம்... கொப்பும் கிளையுமாக் கீழ கெடக்கு; இருநூறு வருசம் தரையில இறந்துகெடக்கு. எல்லா மரத்தையும் வெட்டி வெட்டி வித்துப்புட்டான். கேட்டா பொந்து விழுந்த மரம் - பொட்டுன்னு தட்டுனதுல விழுந்துருச்சுன்னு கணக்குச் சொல்லிப்புட்டான். தூரு எடுக்க ஆர்டர் வாங்கி வேரு எடுத்துட்டுப் போயிட்டான் விளங்காத பய.

குளத்துக்குள்ள காலங்காலமா நின்ன கருவேல மரங்களையும் அடையாளம் இல்லாம அழிச்சுப்புட்டான். கேட்டா - அந்த இடத்தையும் ஆழப்படுத்தி இருக் கேன்னு களவாணித்தனத்துக்குப் பில்லும் போட்டுப்புட்டான். ஊரே வந்து உச்சுக் கொட்டி நிக்குது விழுந்துகெடந்த மரங்களப் பாத்து. பொட்டழிஞ்ச பொம்பள மாதிரி கரையே அடையாளம் மாறிப்போச்சு.

ஊருல கெழடுகட்டைக, பொண்டுபொடுசுக எல்லாரும் வந்து மரம் செத்துப் போனதுக்கு எழவு விசாரிச்சாலும், காக்கா, குருவி, நாரை, கொக்கு ஒண்ணையும் காணோம்.

'உங்க வீடு வாசல் போச்சு; இனிமே இங்கிட்டு வராதீக’ன்னு காத்து போயித் தகவல் சொல்லியிருக்கும் போலிருக்கு பட்சி பறவைக்கெல்லாம்.

ரம் இழந்த குளத்தங்கரை வெறுமையை உடுத்தியிருந்தது. சின்னப்பாண்டி, எமிலி, இஷிமுரா மூவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டார்கள் குளக்கரை மீது. அரைக் குளம் நிறைந்திருந்தது அப்போது. பூமி நனைந்துகொண்டிருந்தது அந்தியின் தங்க ஒழுக்கலில். உடம்பில் உட்கார்ந்து உட்கார்ந்து கடந்துகொண்டிருந்தது குளத்தில் குளித்து வந்த ஈரக் காற்று.

ஒற்றை நாற்காலியிட்டு தூரக் கரையில் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன்.

அடிக்கடி வான் பார்ப்பதும் குளத்தில் ஒரு கல்லெறிவதும் வெறியோடு பேனா எடுத்து விறுவிறுவென எழுதுவதும், சட்டென்று நிலைகுத்தி நிற்பதுமாய்த் தனக்கான தனி உலகத்தில் இயங்கிக்கொண்டிருந்தான் அந்த மனிதன்.

சற்றே திகைப்புற்றவளாய் ''யார் அந்த மனிதர்?'' என்றாள் எமிலி.

''எங்கள் தமிழ் மொழியின் கவிஞர்களுள் ஒருவர்'' என்றான் சின்னப்பாண்டி.

''பெயர்...?''

''வைரமுத்து.''

''பேசலாமா?''

''பேசலாம்.''

மூவரும் நடந்தனர் வைரமுத்துவை நோக்கி.

- மூளும்