Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : சுப.உதயகுமாரன்படங்கள் : வி.செந்தில்குமார்

நானும் விகடனும்!

இந்த வாரம் : சுப.உதயகுமாரன்படங்கள் : வி.செந்தில்குமார்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை,   நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்’
- அதற்கு தந்தை செய்ய வேண்டிய ஒரே செயல், மகனுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான். என் தந்தை என்னை வாசிக்கப் பழக்கினார்!

வீடு முழுவதும் 'உண்மை’, 'குடிஅரசு’, 'விடுதலை’, 'காஞ்சி’, 'திராவிட நாடு’, 'முரசொலி’ போன்ற திராவிட இதழ்கள் இறைந்துகிடக்கும். இவற்றுக்கு இடையே ஆனந்த விகடனும் ஒளிந்திருக்கும். அத்தகைய கடின வாசிப்புகளுக்கு மத்தியில் விகடன் வாசிப்பு எனக்கு இதமானதாக இருந்தது.

விகடனின் விகடம்தான் என்னைப் பெரிதும் கவர்ந்த அம்சம். 'ரெட்டை வால் ரெங்குடு’, 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா’, 'முழுச் சோம்பல்முருகேஷ்’ போன்ற நாம் தினமும் சந்திக்கக்கூடிய சாமான்யர்களை மையமாக வைத்து வெளி வந்த கேரக்டர் பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. விகடன் கார்ட்டூன்களின் நையாண்டியும் அரசியல் அங்கதமும் என் தலைமுறை இளைஞர்களுக்கு உலகத்தைப் பற்றித் தெளிவூட்டின என்றால், அது மிகை இல்லை. அந்தப் பாரம்பரியம்தான் இன்று '

நானும் விகடனும்!

லூஸுப் பையன்’ வரை பற்றிப் பரவிப் படர்ந்துகிடக்கிறது. அரசியல் காட்சிகளுக்கு காமெடிச் சாயம் பூசி 'இப்படியும் நடக்கலாம்’ என்று மறைமுகமாகத் தொலைநோக்குப் பார்வை அளிக்கும் விகடனின் அரசியல் நையாண்டி என்றும் ரசிக்கவைப்பது.

வயிறு வலிக்கச் சிரிக்கவைத்த விகடன், மனதை நெகிழச் செய்யும் கதைகளைப் படைப்பதிலும் தன்னிகரற்று விளங்கும்.  

விகடனின் கதை சொல்லும் பாணி தனித்துவமானது. 'ஒரு பக்கக் கதை’, 'ஒரு நிமிடக் கதை’, 'சற்றே பெரிய சிறுகதை’, 'முத்திரைக் கதை’, 'ஒரு வரிக் கதை’ எனச் சிறுகதைகளுக்கே பல்வேறு பரிமாணங்களைத் தந்தது விகடன். இப்போது பல பத்திரிகைகளிலும் இவை போன்ற கதைகள் வெளிவருகின்றன என்றாலும், அந்தப் போக்கை அறிமுகப்படுத்தியது விகடன்தான்.

சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களின் தொடர்கதைகளைக் கவனமாகப் பிரித்தெடுத்து அப்பா தனிப் புத்தகம்ஆக்குவதைக் கவனித்து இருக்கிறேன். விகடனில் வெளிவரும் கதைகளைக் காரசாரமாக அப்பாவும் அம்மாவும் விவாதிப்பதைக் கேட்டு இருக்கிறேன். அப்போதைய விகடனின் கிளாஸிக் பக்கங்களை இப்போதைய 'பொக்கிஷம்’ பகுதிகளில் படிக்கும்போது, என் தந்தை அடையும் மகிழ்வை நானும் பகிர்ந்து கொள்கிறேன். தலைமுறைகளை இணைக் கும் கண்ணியாக அந்தப் பகுதி தமிழ் இல்லங்கள்தோறும் ஆனந்தத்தை வாரி வழங்குகிறது என்பது உண்மை.

உலகம் முழுக்கச் சுற்ற வேண்டும், பல நாடுகளின் கலாசாரங்கள், மக்கள், அவர்தம் வாழ்க்கைமுறையை நேரில் பார்த்து அவற்றை ஆவணப்படுத்தும் ஒரு 'எக்ஸ்ப்ளோரர்’ ஆக வர வேண்டும் என்கிற ஆர்வம் என் பள்ளிக் காலங்களில் விழுந்த விதை. அதற்காகப் பல தேசாந்திரிகள், ஊர் சுற்றிகளின் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் தேடித் தேடிப் படித்துக்கொண்டு இருந்த சமயத்தில், விகடனில் வெளிவந்த மணியனின் பயணக் கட்டுரைகள் என் ஆர்வத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தன.  

இளைஞனான பிறகு, எழுதும் ஆர்வம் துளிர்த்தது. விகடனுக்குத் துணுக்குகள் எழுதி அனுப்பும் துணிச்சல் எங்கிருந்தோ வந்தது. கட்டுக்கடங்காத ஆர்வத்தோடு தயாரித்ததும் அதிதீவிர ஈடுபாட்டோடு தன்னையே முற்றிலுமாக இழந்து செயலாற் றியதும், தனது முயற்சி திருவினையாகிறதா, திரும்பி வருகிறதா என்று மண்டையே வெடிக்கும் கனவுகளுடன் மயங்கிக்கிடந் ததும் இன்றும் பசுமையாக மனதில் கிடக்கின்றன.

கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று எத்தியோப்பியாவில் பள்ளி ஆசிரியர் பணிக்குச் சென்ற நாட்களில் நண்பன் அகமது அமீர் விகடன் புத்தகங்களை அஞ்சலில் அனுப்பிவைப் பான். மொழி, மக்கள், கலாசாரம் என அனைத்தும் புதிதாக இருந்த தேசத்தில், அனாதரவாக நின்றிருந்த ஒரு தமிழனைத் தோளோடு அணைத்துக்கொண்ட தோழன் விகடன் மட்டுமே. ஆறு ஆண்டுக் கால ஆப்பிரிக்க வனவாசத்துக்குப் பிறகு, ஆஸ்லோ பல்கலைக்கழக உயர் கல்வி. இப்போதைய இணைய வசதிகள் இல்லாத காலகட்டத்தில் ஏர் மெயிலில் விகடன் வருகைக்காகக் காத்திருந்து படிப்பேன். கல்வி முடிந்து ஊருக்குத் திரும்பியபோது 'ஜூனியர் போஸ்ட்’ எனும் புதிய இதழ் விகடன் குழுமத்தில் இருந்து வெளிவந்தது. அதன் முதல் இதழிலேயே நான் நார்வே நாட்டில் எடுத்த புகைப்படமும் அது தொடர்பான செய்தியும் வெளியாகி இருந்தது. உச்சகட்ட மகிழ்ச்சியில் திளைத்தேன்!

நானும் விகடனும்!

1988-ல் கூடங்குளம் அணு மின் நிலையம் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அதற்கு எதிராக நாங்கள் போராடத் துவங்கியது ஜூனியர் விகடனில்தான் முதலில் அழுத்தமாகப் பதிவானது. அப்போதெல்லாம், பிற்காலத்தில் ஜூ.வி-யில் என் எழுத்துக்கள் வெளிவரும் என்றெல்லாம் நான் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

2011-ல் ஏப்ரல் மாதம் சீனாவில் உள்ள வூஹான் (Wuhan) என்ற ஊரில் தங்கியிருந்தபோது ஜூ.வி-யில் அணு சக்திபற்றி ஒரு தொடர் எழுதக் கேட்டு மின் அஞ்சல் வந்தது. இரண்டு மூன்று முறை என்னைக் கிள்ளிப் பார்த்து வலி உணர்ந்த பிறகுதான் ஊர்ஜிதம் செய்துகொண்டேன்.

'அணு ஆட்டம்’ தொடர் ஓர் ஒப்பற்ற போராட்டத்தின் முதல் படி என்பதை யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை. இப்போதைய கூடங் குளப் போராட்ட எரிமலைக்குத் திரி கிள்ளியது அந்தத் தொடர்தான். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற ஒரு துறையை, புலனாய்வுத் துறையின் கீழ் வருகின்ற ஒரு துறையைப் பற்றி வெகுஜனப் பத்திரிகைகள் எழுத யோசித்த கால கட்டத்தில், 'இது வாசிக்கப்படுமா?’ என்ற கேள்வியைக் கடந்து அனைத்துத் தடை களையும் தகர்த்து அணு மின் நிலையப் பிரச்னைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது விகடன் குழுமம்தான்.  

நிருபர்கள் மட்டுமே கேள்வி எழுப்பிக்கொண்டு இருந்த தமிழ்ப் பத்திரிகைச் சூழலில் 'ஹாய் மதன்’, 'நானே கேள்வி... நானே பதில்...’, 'விகடன் மேடை’ போன்ற பகுதிகள் மூலம் வாசகர்களையும் கேள்விகள் எழுப்பவைத்தது விகடனின் சாமர்த் திய சமயோசிதம்!

பேருந்து, ரயில் பயணங்களில் விகடனைக் கையில் வைத்திருக்கும்போது, மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையில் தெரிகின்ற மரியாதை சொல்லும், விகட னின் கண்ணியத்தை!  

நானும் விகடனும்!

கூடங்குளம் அணு உலை பற்றிய விகடனின் கட்டுரைகள் தமிழர்களைச் சிந்திக்கவைத்தன. சிந்திப்பு அவர்களுக்குள் சினத் தீயை மூட்டியது. பன்னாட்டு முதலீடு, அணு சக்தி, வளர்ச்சி, பாதுகாப்பு, வல்லரசு எனும் பசப்பு வார்த்தைகளுக்கும்... தீங்கற்ற மின்சாரம், நோயற்ற வாழ்வு, மாசற்ற வாழ்வாதாரம், குறைவற்ற எதிர்காலம் எனும் கனவுகளுக்கும் இடையே சிக்கித் திணறும் தமிழருக்குச் சிந்திக்க ஒரு தூண்டுகோலாக இருந்ததால், 2011-ம் ஆண்டின் கண்ணியம் மிக்க தமிழர்களுள் ஒருவனாக என்னை விகடன் தேர்வுசெய்தது, என் பணிகளுக்குக் கிடைத்த நிறைவான அங்கீகாரம்!  

'நெருப்புத் தமிழன்’ என்று பட்டமிட்டு, தேசத் துரோகி, அமெரிக்கக் கைக்கூலி, ரகசியக் கிறிஸ்தவன், பிற்போக்குவாதி என்றெல்லாம் என் மீது வீசப்பட்ட பழிச்சொற்களை எரித்தழித்தது விகடன். என் ஆயுளையும் அணு சக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு அடமானம் வைப்பதே விகடனுக்கு நான் சொல்லும் உண்மையான நன்றியாக இருக்கும்!''