Published:Updated:

நாளைக்கு காலைல கார் வரும்!

நாளைக்கு காலைல கார் வரும்!

நாளைக்கு காலைல கார் வரும்!

நாளைக்கு காலைல கார் வரும்!

Published:Updated:
##~##

''அந்தோணி! போயி நாலு டீ வாங்கினு வா!'' அந்தோணி போகிறார்.

 ''அந்தோணி, அந்த சைக்கிளை மட்டும் கொஞ்சம் துடைச்சுக் கொடேன்!'' - பதில் பேசாமல் அந்தோணி சைக்கிளைத் துடைக்கத் துவங்குகிறார்.

''பாலு முதலியார் பணம் தர்றேன்னு சொன்னாரு... போயி வாங்கினு வர்றியா அந்தோணி?''    அடுத்த கால் மணி நேரத்தில் அந்தோணி பணத்துடன் வருகிறார்.

ஏகமாக வளர்ந்திருந்தாலும், கவனமாக வகிடெடுத்து வாரப்பட்ட தலைமுடி; ஒட்டிப்போன கன்னத்திலும் மோவாயிலும் மண்டிக்கிடக்கும் ஒழுங்கற்ற தாடி; எதிரில் இருக்கும் ஆளை எடைபோட முயலும் பளபள கண்கள்; அழுக்குச் சட்டையும் முக்கால்வாசி மடித்துவிடப்பட்ட பேன்ட்டுமாகக் காணப்படுகிறார் அந்தோணி. முழுப் பெயர் - அருள் அந்தோணி.

நாளைக்கு காலைல கார் வரும்!

மதுரையில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்துவிட்டு, தபேலா வாசிப்பதில் வல்லவராக இருந்த அந்தோணி, மியூஸிக் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஏகப்பட்ட கனவுகளோடு சென்னையில் அடியெடுத்துவைத்தார். அந்தோணிக்கு லேசு பாசாகக் 'கஞ்சா’ அடிக்கும் வழக்கம் உண்டு. சென்னைக்கு வந்த பிறகு, கூடாத நட்பினால் அந்தப் பழக்கம் தீவிரமாகி, அவருடைய மியூஸிக் டைரக்டர் கனவுகள் பொடிப் பொடியாகிவிட்டன.

''பள்ளிக்கூடத்துல படிக்கிற நாள்லயே அவனைச் சுத்தி ஒரு பெரிய கூட்டம் இருக்கும். அவனை தபேலா வாசிக்கச் சொல்லி எப்பவும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அப்பவே அவன் மதுரை முழுக்க ஃபேமஸ். அவன் தீவிரமான கம்யூனிஸ்ட் அனுதாபி சார். இளையராஜாவோட அண்ணன் பாவலர் வரதராஜன் குரூப்புல ரொம்ப நாள் தபேலா வாசிச்சுக்கிட்டு இருந்தான். எவ்வளவு கஷ்டமான தாளம்னாலும் கொஞ்சம்கூட அசர மாட்டான். அநாயாசமா அடிச்சுக் காட்டுவான். டாக்டர் ஆனந்த் செல்லப்பா, மதுரை சோமு உட்பட பிரபல ட்ரூப்புகள் எல்லாத்துலயுமே இவன் வாசிச்சிருக்கான்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஒரு மெல்லிசைக் குழுவின் இசையமைப்பாளர்.

சென்னை மந்தவெளிப்பாக்கம் சர்ச் அருகில் அந்தோணியைச் சந்தித்தோம். எதையுமே கோவையாகப் பேச முடியவில்லை அவரால். ''நான்கூட இசையமைப்பாளர்கள் சங்கத்துல மெம்பர்தான். என்கிட்ட போட்டோ பாஸ் இருக்கு தெரியுமா! நான் நடுரோட்டுல தூங்கறதால, அதைப் பத்திரமா ஒரு இடத்துல ஒளிச்சுவெச்சிருக்கேன். சினிமாவில் வாசிக்க சான்ஸ் கிடைக்கும்போது, அதைக் கொண்டுபோவேன்...'' என்று அப்பாவியாகச் சொன்னவர், ''அந்தக் காலத்துல பெரியார் நடத்தின பிரசார நாடகம், தி.மு.க. ஆட்சியில அரசு நடத்தின குடும்பக் கட்டுப்பாடு பிரசார நாடகம்... இப்படி எல்லாத் துக்கும் நான்தான் தபேலா வாசிச்சேன்! ஹூம்... நான் வாசிக்காத இசைக் குழுவே அந்தக் காலத்துல இல்லை'' என்று சிரித்தார். தொடர்ந்து ''அப்போலாம் 'படிப்பைப் பார்க்காம ஏண்டா தபேலா வாசிக்கிறே?’னு எங்கப்பா என்னைத் திட்டுவாரு. ஆனாலும், அதைப்பத்திக் கவலைப் பட்டதே இல்லை'' என்று சொல்லிவிட்டு, மௌனத்தில் ஆழ்ந்தார் அந்தோணி. அவரைப் பேசவைப்பதற்கு நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ரொம்ப நேரம் வரை பலன் அளிக்கவில்லை. ''விடுங்க! கொஞ்ச நேரத்தில் தானாப் பேசுவான்...'' என்றார் ஏரியாவாசி ஒருவர்.

சொன்னபடியே அந்தோணி தானாகவே மறு படியும் தொடர்ந்தார்... ''எங்க அப்பாவுக்கு ரெண்டு சம்சாரம்... எங்கம்மாதான் முதல் பொண்டாட்டி. சித்தியும் நல்லவங்கதான். ஆனாலும், எனக்கு அப்பாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். எங்கப்பா செத்துப்போன பிறகு என்னால அந்த வீட்டுல இருக்க முடியலை. எப்பவும் அப்பா ஞாபகம் வந்து என்னைத் தொல்லைப்படுத்திக்கிட்டே இருக்கும். அந்த வேதனையில் இருந்து தப்பிக்கவும் பெரிய தபேலா ஆர்ட்டிஸ்ட் ஆகவும்தான் நான் மதுரையைவிட்டுக் கிளம்பி மெட்ராஸ் வந்துட்டேன்'' என்று சொல்லிக்கொண்டே வந்தவர், திடீரென்று கையால் தாளமிட்டபடி... 'மன்னவன் வந்தானடி...’ பாட்டைப் பாட ஆரம்பித்தார். தடாலென்று பாட்டின் நடுவே, லேட்டஸ்ட் பாடல் ஒன்றை நுழைத்துப் பாடிவிட்டு, ''பார்த்தீங்களா... ரெண்டும் ஒரே தாளத்துல வருது...'' என்று நம்மை அசரவைத்தார்.

அதற்குப் பிறகு இசையைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தவரை இடைமறித்து, ''நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா..?'' என்று கேட்டோம்.

''ஐயையோ! வாத்தியம் வாசிக்கிறவன் எவனுமே கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. தினம் ஒரு ஊருக்குப் போய்க் கச்சேரி பண்ணிக்கிட்டு இருந்தா, பொண்டாட்டியை எப்படிக் கவனிக்கிறது? வீணா ஒரு பொண்ணு வாழ்க்கையைப் பாழாக்க வேணாம்னுதான் நான் கல்யாணமே பண்ணிக்கலை'' என்றார்.

நாளைக்கு காலைல கார் வரும்!

''அதெல்லாம் வக்கணையாப் பேசுவான். வாழ்க்கையிலதான் கோட்டை வுட்டுட்டான். அவன் மட்டும் உருப்படியா இருந்திருந்தா, நிச்சயம் பெரிய ஆளா வந்திருப்பான். ஏகப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் அவனுக்கு சான்ஸ் கொடுத் தாங்க. பாழாப்போன கஞ்சாதான் அவனைக் கெடுத்துடுச்சு. சாயங்காலம் ஆறு மணிக்குக் கச்சேரின்னா, ரிகர்சல் பார்க்கக்கூட கொஞ்சம் முன்னாடி வர மாட்டான். அஞ்சே முக்கால் மணிக்கு வந்து, திடீர்னு திரும்பவும் காணாமப் போயிடுவான். நாங்கள்லாம் தேடோ தேடுன்னு தேடிப் பார்த்தா, ஆடிட்டோரியத்துக்குப் பின்னால உட்கார்ந்து கை நடுங்க கஞ்சா அடிச் சுக்கிட்டு இருப்பான். அப்புறம் எங்கே கச்சேரி பண்றது? அதனாலயே அவனைக் கச்சேரிக்குக் கூப்பிடறதை ரொம்பப் பேர் நிறுத்திட்டாங்க'' என்றார் அந்தோணியின் முன்னாள் நண்பர் ஒருவர்.

அப்படியும் அந்தோணியைவிடாமல் பாதுகாத்திருக்கிறார் ஒரு மெல்லிசைக் குழுவின் தலைவர். ''நான் சீரழிஞ்சுபோன பிறகுகூட, அவர் என்னை வந்து பார்த்துக்கிட்டுத்தான் இருப்பாரு. 'ஏண்டா இப்படிப் பண்றே? எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட வா... திரும்பவும் நீ வளர வாய்ப்பிருக்கு’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. நான்தான் புத்திகெட்டு, தெருத்தெருவா போய்ப் புதுப் புது சிநேகிதர்களோடு சேர்ந்து கஞ்சா அடிச்சிக்கிட்டு இருப்பேன். ஒரு நாள் பொறுமை எல்லை மீறி, என்னை நடுரோட்டுலயே பெல்ட்டால விளாசிட்டாரு அவரு... அப்பவும் நான் திருந்தலை. அதனாலதான் இந்த நிலைமை'' என்று கபடம் இல்லாமல் சிரிக்கிறார் அந்தோணி.

''தெரியுதில்ல... அப்புறமும் ஏன் இந்தப் பழக்கம்?'' என்றோம்.

''ஐயோ... என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே... தபேலா பைத்தியம் மாதிரிதான்

கஞ்சாவும். ரெண்டுமே என்னைவிட்டுப் போகாது. ரெண்டுமே சந்தோஷமான விஷயங்கள்தான்!'' என்றார் சாதாரணமாக.

மனம்போன போக்கில் ஏறக்குறைய அரைப் பைத்தியமாகத் திரிந்துகொண்டு இருக்கும் அந்தோணி, இப்போதும் தபேலா வாசிப்பதை நிறுத்தவில்லை. அக்கம்பக்கத்தில் கையேந்தியாவது கொஞ்சம் பணம் சேர்த்துவிடுவார். வருகிற பணத்தில் ஒரு தபேலாவை வாடகைக்கு எடுத்து வந்து வாசிப்பார். அந்தோணிக்கு வாடகைக்கு தபேலா கொடுக்க மறுப்பவர்களே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஒரு தபேலா கலைஞர் கச்சேரிக்குப் போவதற்கு முன் அந்தோணியைப் பார்த்துப் பேசிவிட்டு, தன் தபேலாவை அவர் கையால் கொஞ்சம் நேரம் வாசிக்கச் சொல்வாராம் (சென்டிமென்ட்?!)

திடீரென்று ஒருநாள் காலை இசையமைப்பாளர் ஒருவரின் வீட்டுக்குப் போய் நின்றாராம் அந்தோணி. அந்தோணியைப் பற்றி அறிந்திருந்த அந்த இசையமைப்பாளர், ''சமயம் வரும்போது உனக்கு சான்ஸ் தர்றேன்!'' என்று அப்போதைக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறார். அதை நம்பிக்கொண்டு வந்த அந்தோணி, தினமும் இரவில் படுக்கப்போகும்போது, ''நாளைக்கு காலைல கார் வரும்... என்னை எழுப்பு...'' என்று பக்கத்தில் இருக்கும் ஆட்களிடம் சொல்லிவிட்டுத்தான் தூங்கப்போகிறார்!

- கே.அசோகன்
படம்:    ஏ.ரவீந்திரன்