Published:Updated:

காங்கிரஸில் இருந்து எஸ்.வி. சேகர், கராத்தே தியாகராஜன் நீக்கம்: தங்கபாலு அறிவிப்பு

சென்னை, ஏப். 14, 2011
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.வி. சேகர், கராத்தே தியாகராஜன் உள்பட 19 பேரை நீக்குவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு அறிவித்துள்ளார். ##~~##

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி. சேகரும், கராத்தே தியாகராஜனும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கேட்டவர்கள்.  ஆனால், தங்கபாலு மனைவிக்கு அங்கு சீட் கிடைத்தது. பிறகு, அவரது வேட்பு மனு தள்ளுபடியானதால் மாற்று வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்து இருந்த தங்கபாலு போட்டியிட்டார்.  இதன் தொடர்ச்சியாக, தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் அணிக்குள் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 19 பேரை நீக்கம் செய்து தங்கபாலு இன்று வெளியிட்ட அறிக்கையில், 2011 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களுக்கு எதிராகவும், கட்சித் தலைமைக்கு எதிராகவும், கட்சி நலன்களுக்கு முரணாக கட்சியின் பெயரை களங்கப்படுத்தும் வண்ணமும் பல்வேறு முறைகளில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொய்ப் பிரசாரங்கள், விளம்பரங்கள் ஆகியவை மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக நடந்துகொண்ட கீழ்க்கண்ட நபர்களை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
கராத்தே தியாகராஜன், மா. முத்துசாமி, கவுன்சிலர்கள் மங்களராஜ், செங்கை செல்லப்பன், சாந்தி சம்பந்தம், மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி. விஜயசேகர், தென் சென்னை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி. பிரகாஷ், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரஞ்சன் குமார், காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆர்.வி. ரஞ்சித்குமார்,

முன்னாள் மாணவர் காங்கிரஸ் கமல், விவசாய அணி பவன்குமார், பட்டுக்கோட்டை ஏ.ஆர்.எம். கோவிந்தராஜன், எஸ். திருஞானம், கே.ஆர். நாடி முத்து, வில்லிவாக்கம் சாந்த குமார், நடிகர் எஸ்.வி. சேகர், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே. சுரேஷ், ஈரோடு பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சக்திவேல், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜவகர்பாபு. கட்சி உறுப்பினர்கள் யாரும் மேற்குறிப்பிட்ட நபர்களிடம் கட்சி ரீதியாக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தங்கபாலு தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு