Published:Updated:

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

Published:Updated:
”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

தான் பிறந்து வளர்ந்த, எழில் சூழ்ந்த கிராமமான மங்கல்ரேவு பற்றி தன் எண்ணங்களை இங்கே எழுத்தாக வடிக்கிறார் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்.

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

''என் இளம்பிராயம் நவிமும்பையில் கழிந்தது. 1986-ல் மதுரை வந்து சேர்ந்தபோது, ஊர் எங்கும் விற்கும் ஜாங்கிரியைப் பிய்த்துப் போட்டதுபோல இருந்தது நாங்கள் பேசும் தமிழ்மொழி. வீட்டில் எங்களுக்குள் பேசிக் கொள்வோமே தவிர, பிறருடன் உரையாடுவதும்கூட சிரமமாகத்தான் இருந்தது. எங்கள் சொந்த ஊரான மங்கல்ரேவுக்குச் சென்றபோது எல்லாம் புதுசாகவும் விநோதமாகவும் இருந்தது.

##~##

மங்கல்ரேவில்தான் நான் பல விஷயங்களை முதன்முதலில் பார்த்தேன். அதுவரை பாடப் புத்தகங்களில் மட்டுமே பார்த்திருந்த கிணறு முதல் நெற்பயிர் வரை எல்லாவற்றையும் அங்கே பார்த்து பிரமித்தேன். மங்கல்ரேவுதான் என் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை உருவாக்கியது. அதன் மூலம் எனக்கு ஒரு முகவரியையும் ஏற்படுத்தித் தந்தது. மங்கல்ரேவுக்குள் நுழைந்தபோது என் கற்பனையில் அதுவரை இருந்த ஒரு முழுமையான கிராமமாகவே அது திகழ்ந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஊர், பெரும் ஊருணி, கண்மாயில் ஆலமரத்துடன் கூடிய மருகாத் துறை, காலாங்கரை என்று அழைக்கப்படும் அழகிய ஓடை, முக்குரோட்டுக்குப் போகும் வழியில் ஆறு, ஊரின் ஒரு புறம் கிணற்றுப் பாசனம், மறுபுறம் கண்மாய் வயல்கள், ஊரைச் சுற்றிக் கரிசல் காடுகள்... இவற்றை எல்லாம் சுற்றிச் சுற்றி வந்து, இந்தக் காட்சிகளை என் கண்களில் நிரப்பிக்கொண்டேன். அதில் இருந்துதான் தமிழ் நிலம் மீது காதல் கொண்டேன். தமிழ் மொழியைக் கற்றே தீரவேண்டும் என்ற ஆவல் அந்தக் காதலில் இருந்துதான் எழுந்தது. மாடுகளுக்கு லாடம் கட்டுவது, தச்சு ஆசாரிகள் ஏர் கலப்பை செய்வது, ஆசாரிகள் கமலைகளைச் சரிசெய்வது ஆகியவை, பார்க்கப் பார்க்க... தீராத ருசியைத் தந்தன. இருப்பினும் இன்றும் டெரா பாறை அணை இந்தப் பகுதி மக்களின் நிறைவேறாத ஆசையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக இயற்கையாகவே அமைந்து உள்ள இடத்தில் அணை கட்டும் திட்டம் கடந்த 40 ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கிறது.

1798-ல் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி சிவகங்கையை நோக்கிப் பயணம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், எங்கள் ஊர் மலை அடிவாரத்தில் இருக்கும் சுனை அருகில் உள்ள ஒரு மரத்தடியில் தங்கி ஓய்வு எடுத்துச்சென்றார். இதை எங்கள் ஊரின் பெருமையாகவே கருதுகிறார்கள்.

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

எங்கள் ஊர், சிறு தெய்வங்கள் நிறைந்த இடம்.  பல சாதியினரின் குல தெய்வங்களாக அவை திகழ்வதால், எப்போதும் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை. இந்தத் திருவிழாக்கள், சடங்குகள், ஊர் வழக்கங்களின் வழியேதான் தமிழக சாதியக் கட்டுமானங்கள் குறித்த ஒரு பார்வையே எனக்கு ஏற்பட்டது. ஒரு கல்வி முறை கற்றுத் தர மறுக்கிற ஓராயிரம் விஷயங்களை, எனக்குச் சில ஆண்டுகளிலேயே மிகக் கச்சிதமாக அறிமுகப்படுத்தியது இந்த ஊர்.

ஊரில் இருந்த வேலுத் தாத்தா, காட்டு வேலை செய்துகொண்டே என்னிடம் சொன்ன ஊரைப் பற்றிய கதைகளின் வழியே நவிமும்பை பின்னுக்குத் தள்ளப்பட்டு மங்கல்ரேவும் தமிழ்மொழியும் மனதில் முதன்மை பெற்றன. ஊரும் உழைக்கும் மக்களின் வெக்கையான மூச்சுக்காற்றும் என்னுள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. மெள்ள மெள்ள அருகில் இருக்கும் சாப்டூர், பேரையூர், அத்திப்பட்டி, சேடப்பட்டி, எழுமலை, உசிலம்பட்டி, மகாலிங்கம் மலை என, இந்த நிலம் எங்கும் அலைந்தேன்.

இன்றும் என் ஊரின் பெரும் ஈர்ப்பாக என் மனதுக்குள் வீற்றிருப்பது என் தாத்தா ஆர்.எம்.பெருமாள்தான். 40 ஆண்டுகள் சிங்கப்பூரில் வாழ்ந்த அவர், கடந்த 52 ஆண்டுகளாகத் தன் ஜாகையை மங்கல்ரேவுக்கு மாற்றிவிட்டார். சிங்கப்பூரில் தன் இளம் பருவத்தில் அவர் நேதாஜியின் ஐ.என்.ஏ. படையில் இருந்தார். 1945-களில் சாதி மறுப்புத் திருமணம் செய்தார். இப்படிப் பல செயல்பாடுகளில் எனக்கு முன்னோடியாக இருப்பவர் அவரே.

மெள்ள இது என் ஊராவும், என் நிலமாகவும் மாறியபோது, மதுரை தெருக்களில் இருந்த ஜாங்கிரித் துண்டுகள் தமிழ் மொழியாக.., என் மொழியாக ரசவாதம் பெற்றன!''

”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்!”

-பா.காளிமுத்து