Published:Updated:

சமூகப் போராளி!

Vikatan Correspondent

''இது முள் மேல் நடக்கும் பயணம். எத்தனை மிரட்டல்கள்... எத்தனை அவமானங்கள்... எங்கு பார்த்தாலும் சமூக அநீதி, தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் இதை எல்லாம் களைய, களப்பணிதான் சிறந்த ஆயுதம்'' என்று கூறும் பழனியம்மாளைப் பற்றி வாசகர் ஒருவர் நமது வாய்ஸ் ஸ்நாப்பில் பதிவுசெய்து இருந்தார்.

சமூகப் போராளி!
##~##

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி சமீபத்தில் பழனியம்மாளின் தலைமையிலான குழு, உண்மை அறியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் பெரிதாக வரவேற்கப்பட்டது. சிறப்பான இந்தக் களப்பணிக்காக, லயோலா கல்லூரி மற்றும் துடி அமைப்பு இணைந்து பழனியம்மாளுக்குக் களப்பணிக்கான சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து இருக்கின்றன. சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் பழனியம்மாள், தன் அனுபவம் பற்றி இங்கே பேசுகிறார்.

''நான் ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தவள். ராசிபுரம்தான் என் சொந்த ஊர். பள்ளிப் படிப்பை முடித்த பின் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தேன். படிக்கும்போதே சமூக சேவையில் ஈடுபட்டேன். அப்போதுதான் பெண்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி தெரிந்துகொண்டேன். இந்தச் சமூக அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற வெறி பிறந்தது. அந்தச் சமயம் ராசிபுரத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குதான் என்னை சமூகத்துக்கு அடையாளம் காட்டியது. ராசிபுரத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களைச் சந்தித்து தலைமைப் பண்பைக் கற்றுக்கொடுத்தேன்.

சமூகப் போராளி!

பின்பு மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் மனித உரிமை அமைப்பில் சேர்ந்தேன். மக்கள் கண்காணிப்பகத்தின் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். என்னுடைய முதல் வழக்கே சமூக அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற என் தார்மீக அறச் சீற்றத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் பணிபுரியும் ஏழைப் பெண் மீது அபாண்டமாகப்  பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி, அந்தப் பெண்ணை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி இருந்தார்கள். அவமானம் தாங்க முடியாமல் அந்தப் பெண் தன் கைக்குழந்தையோடு தீக்குளித்துவிட்டார். ஏன் இந்த அவலம்? ஏன் இந்த அநீதி? மக்களைக் காக்க வேண்டிய அதிகாரிகளே இவ்வாறு செய்தால், சாதாரண மக்கள் எங்கே போவார்கள்? கோபமும் ஆவேசமுமாக அந்த வழக்கில் நீதிக்காகப் போராடினேன். நீண்ட போராட்டத்துக்குப் பின் நீதி கிடைத்தது.

தலித் மக்கள் மீதான சித்ரவதை, லாக்-அப் மரணங்கள், வரதட்சணைக் கொடுமை, பாலியல் கொடுமை எனப் பல கொடுமைகளை எதிர்த்து நீதிமன்றப் படியேறிக்கொண்டு இருக்கிறேன். சென்ற வருடம் மட்டும் 3 ஆயிரம் வழக்குகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளாகப் பதிவாகி உள்ளன. என் உயிரின் கடைசி மூச்சு இருக்கும் வரை நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடுவேன்!'' உறுதியாகப் பேசுகிறார் பழனியம்மாள்.

சமூகப் போராளி!

ரா.அண்ணாமலை
படங்கள்: பா.காளிமுத்து