Published:Updated:

என் ஊர்!

மர்பி ரேடியோ போனது... சீரியல் டி.வி. வந்தது!

என் ஊர்!

மர்பி ரேடியோ போனது... சீரியல் டி.வி. வந்தது!

Published:Updated:
##~##

யக்குநரும் எழுத்தாளருமான ராசி.அழகப்பன், தன் ஊரான ராயம்பேட்டை நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 ''எங்க ஊர்!- இதைச் சொல்லும் போதே ஏ.ஆர்.ரஹ்மானின் புல்லாங்குழல் ஓசை என் ரத்த நாளங்களில் புகுந்து பயணிக்கிற உணர்வு. 1960-களில் எங்கள் ஊரில் வீடுகள், கோயில்கள் எனச் சொல்லிக்கொள்ளும்படியான பிரமாண்டங்கள் எதுவும் இல்லை. ஆனால், சென்னை நகரின் ஈர்ப்புகளைவிட அந்தச் சின்னஞ்சிறு ஊரில் ஓர் உயிர்ப்பு இருந்தது.

ராயம்பேட்டை - அதிகபட்சம் நூறு வீடுகள் கொண்ட...  கைத்தறியை மட்டுமே நம்பிய... ஊர். பால் மாறாத வயதில் ஜன்னி கண்டு இறந்துபோன அம்மா, மரத்தில் பேய் இருக்கிறது என்ற பயத்தில் கீழே விழுந்து இறந்துபோன அக்கா, இரண்டாம் வகுப்பு படிக்கும் முன்பே திருமணமாகிச் சென்ற மீதி இரு அக்காக்கள். இதுபோக எங்கள் கூரை வீட்டில் மிஞ்சியது நானும் என் அப்பாவும் இரண்டு தறிகளும்தான். அம்மா இல்லாததால் பள்ளிவிட்டுத் திரும்பியதும் பனை மர ஓடையில் சுள்ளி பொறுக்கி அடுப்பைப் பற்றவைத்து வெந்நீர்வைப்பதும் சமைப்பதும் எனக்கான பணியாகிப் போனது. வசதியின்மையால், எதிர்வீட்டுக் கொல்லையில் எள்ளுச் செடி பிடுங்கியும், கோடையில் மல்லாட்டை உதிர்த்தும் பணம் சேர்த்து, அதில் பலகை, நோட்டு, பல்பம் வாங்குவேன். ஏரிக்கரை உண்டு. ஏரி நிறைய நீருண்டு, சட்டைக் கழற்றி மீன் பிடிக்கிற சுகமே அலாதி. இப்போது வறண்டு... என்ன ஆச்சு இயற்கைக்கு?

என் ஊர்!

ஊர் தொடக்கத்தில் இருக்கிற சாமுண்டீஸ்வரி கோயில்தான் அப்போது நாட்டாமை தீர்ப்பு கூறும் இடம். துணி வெளுக்கும் பெரியவர்தான், தெருக்கூத்து நடக்கும்போது ஊரின் நாடகத் தந்தை. ஊரே ஒன்றுகூடி நிற்க, அவர் பயிற்சி அளிப்பார். விடிய விடிய நடக்கும் கூத்திலும் கட்டியங்காரன் சேட்டையிலும் வாய் பிளந்து நின்ற தும் விலா நோகச் சிரித்ததும் சுகம். மார்கழி அதிகாலையில் பஜனை பாடியபடித் தெருக்களில் வருவோம். அதில் தாளமிட்டபடி, பாடிவரும் எனக்கு லாபமும் இருந்தது, போனஸாகச் சில தேங்காய்ப் பத்தைகள் கிடைக்கும். அந்த வீதிகள் இன்னும் அப்படியே இருக்கின்றன; கலகலப்புதான் காணோம்.

மணிலாவுக்குக் காவல் இருந்த இரவுகளில் பனி, மழை பார்த்தது இல்லை; பயம் கொஞ்சமும் இல்லை. பேய்க்  கதைகள் பேசி... 'வேப்ப மர உச்சியில் நின்னு பேயண்ணு ஆடுதுன்னு’ என்ற பாடலைப் பாடி... கழித்த நாட்களில், ராஜகோபால் வாத்தியார் வீட்டில்தான் மர்பி ரேடியோ இருந்தது. அதில்தான் பேரறிஞர் அண்ணாவின் மறைவுச் செய்தி கேட்டு ஊரே அழுதது. ஒவ்வொரு வீட்டுத் தறிக் குழிக்கு எதிரிலும் இன்று டி.வி. இருக்கிறது. சீரியல் பார்த்தபடி நெய்கிறார்கள். வாயில் வேப்பங்குச்சியோடு கொல்லைக்குப் போனதும் பம்ப் செட் மீதேறி கிணற்றில் குதித்ததும் புஸ்வாணமாகிப் போனது. கார்த்திகை தீபத்தன்று 'திரிதிரி பந்தம் திருமால் பந்தம்’ என்று ஊரே கூடி சுற்றும் வண்ணப் பொறிகளின் அழகை பி.சி.ஸ்ரீராமின் கேமராவில் எடுத்தால் அடடா! இன்று அது அங்கொன்றும் இங்கொன்றுமாக...

என் ஊர்!

மூன்று கி.மீ. நடந்து போய் டென்ட் கொட்டகையில் மணல் குவித்து அமர இடம் பிடிப்போம். எட்டணாவுக்கு நாலு வடை வாங்கித் தின்றபடி படம் பார்த்த அந்த தியேட்டர், இன்று இல்லை. இப்படி எது மாறினாலும் இளைஞர்கள் ஒன்றுகூடி கோயில் விழா நடத்துகிற ஒற்றுமை, என் காலம் முதல் இன்றுவரை அந்த மண்ணில் இருக்கிறது. படிப்பதற்காக நான்கு கி.மீ. நடந்துபோகிற அவஸ்தை இந்தத் தலைமுறைக்கு இல்லை. புதுமணத் தம்பதிகளுக்குப் பால், பழம் கொடுத்து உண்ணவைத்து கிண்டல் செய்து மகிழவைத்து அனுப்புகிற சம்பிரதாயம் இன்றும் எங்கள் ஊரில் உண்டு.

இன்று பலருக்கு என்னைத் தெரிகிறது. ஆனால், என்னைத்தான் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது கிராமத்தில் வீடு இல்லை. ஆனால், என் சுவாசம் அங்கே இருக்கிறது. இதுபோதும் எனக்கும் - என் ஊருக்குமான உறவு! வேறு என்ன வேண்டும்?''

-படங்கள்: பா.கந்தகுமார்