Published:Updated:

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

Published:Updated:
##~##

''ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது'' என்பது ஒரு மேலைநாட்டுப் பொன்மொழி. இந்தப் பொன்மொழிக்குத் தன் செயலால் அர்த்தம் சேர்த்து இருக்கிறார் அன்பழகன்.

 விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் நூலகத்தில் நூலகராகப் பணிபுரிபவர்தான் அன்பழகன். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட நல்நூலகர் விருதைப் பெற்றிருக்கிறார். சிறுவயதில் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாகத் தன் ஊரான மேலந்தல் கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தூரம் நடந்துவந்து மணலூர்பேட்டையில் உள்ள நூலகத்தில் படித்துவிட்டுத் திரும்புவாராம். வாசிப்புக்கான இந்த வலி, அடுத்த தலைமுறைக்குத் தொடரக்கூடாது என்று முடிவுசெய்து, தன் ஊரில் நூலகம் அமைக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

''சின்ன வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கிறதுதான் எனக்குப் பொழுதுபோக்கு. அதனால்தான் வறுமையின் காரணமா ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையிலும், 12 கி.மீ. தூரம் உள்ள நூலகத்துக்கு நடந்தே போய்ப் படிச்சேன். நான் பட்ட இந்தச் சிரமம்தான், நம்ம ஊருலயே ஏன் ஒரு நூலகத்தைத் திறக்கக் கூடாதுங்கிற சிந்தனையை எனக்குள்ள உருவாக்குச்சு. ஒரு நூலகம் திறக்க, 100 உறுப்பினர்களும், ஒரு புரவலரும் தேவை. பல மாதங்கள் அங்கே இங்கே அலைஞ்சு திரிஞ்சு, 100 உறுப்பினர்களை ஏற்பாடு செய்தேன். அவங்களுக்கான உறுப்பினர் கட்டணத்தையும் நானே கட்டினேன். கையில சுத்தமாப் பணம் இல்லைனாலும், எப்படியாவது நூலகத்தைத் திறந்துடணும்கிற ஆசை மட்டும் விடலை. நானும் முதுநிலை நூலகத் தகவல் அறிவியல் படிச்சிருந்தேன். என் அக்காக்கிட்டே போய்,  'இந்த நூலகத்தைத் திறந்தா எனக்கு அரசு வேலை கிடைச்சுடும்’னு பொய் சொல்லிப் பணம் கேட்டேன். அக்கா படிக்காதவங்க. தன்னோட தாலியில் இருந்த தங்கத்தை எடுத்துக் கொடுத்தாங்க. அதுதான் நூலகம் திறக்க உதவுச்சு'' என்று சொல்லிவிட்டு மௌனம் காத்தார்.

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

சில விநாடிகளில் மௌன முட்டை உடைத்துத் தொடர்ந்தார். ''95-ம் ஆண்டு பகுதி நேர ஊழியரா நூலகத்தில் பணியில் சேர்ந்தேன். இதுவரை 4 ஆயிரம் உறுப்பினர்களையும், 84 புரவலர்களையும் சேர்த்து இருக்கேன். என் சொந்த முயற்சியில் பல இலக்கிய விழாக்களையும் தொடர்ச்சியா நடத்தி இருக்கேன். நூலகத்தின் சார்பாகப் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்துறேன். மத்தவங்களைப் போல நூலகத்துக்கு வரும் புத்தகங்களை அப்படியே வெச்சுடறது இல்லை. அந்தப் புத்தகங்களை சுமார் 300 தலைப்புகளில் பிரிச்சுவெச்சு இருக்கேன்.

இப்போ 'நூலக வரலாறு’ங்கிற  தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதிக்கிட்டு இருக்கேன்'' என்கிறார் இந்தப் புத்தகங்களின் காதலர்.

-அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்

இலக்கியக் குடும்பத்தில் துளிர்விடும் தூரிகை

அக்காவின் தாலியில் ஒரு நூலகம்!

திருவண்ணாமலையைச் சேர்ந்த பவா செல்லதுரை, தமிழகம் அறிந்த எழுத்தாளர். இவருடைய மனைவி சைலஜா, தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர். இந்தக் குடும்பத்தில் இப்போது இன்னொரு படைப்பாளி உருவாகி இருக்கிறார். இவருடைய மகன்  ஏழாம் வகுப்பு மாணவர் வம்சிதான் அவர். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் இருந்த வம்சியைச் சந்தித்தேன்.

''ஒரு ஆலமரம். கூகுள், யாகூ, ஃபேஸ்புக், யூ-டியூப் மாதிரியான வலைத்தளங்கள்தான் அந்த ஆலமரத்தோட விழுதுகள். இதுதான் நான் வரைஞ்ச ஓவியம். இன்றைக்கு கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் தவிர்க்கவே முடியாம வளர்ந்திருக்குனு உணர்த்தறதுதான் அந்த ஓவியம். அப்பாவும் அம்மாவும், 'நாம எதை உருவாக்கினாலும் அதில் சமூகத்துக்குச் சொல்றதுக்கு ஒரு நல்ல கருத்து இருக்கணும்’னு எப்பவும் சொல்வாங்க. ரெண்டு பேரோட புத்தகங்கள் மட்டும் இல்லாம நிறையப் புத்தகம் படிப்பேன். 'விற்பனைக்கு ஆக்ஜிஸன்’னு அம்மாவோட மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒண்ணைக் குறும்படமாக்கணும்னு ஆசை இருக்கு. அப்புறம் பாவண்ணனோட 'பயணம்’னு ஒரு சிறுகதையை அப்பா குறும்படமா எடுக்கப் போறார். நானும் டைரக்டர் மிஷ்கினும் இந்தக் குறும்படத்தில் நடிக்கிறோம். இப்போ இந்த ஓவியப் போட்டி மூலமாக் கிடைச்ச பரிசுத் தொகை 3 ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கித் தரச்சொல்லி அம்மாக்கிட்ட கேட்டு இருக்கேன்'' என்கிறார்!

வாழ்த்துகள் வம்சி!

ரா.ராபின் மார்லர்