Published:Updated:

எனக்கு அதிகாரம் உண்டு:கே.வீ.தங்கபாலு

சென்னை, ஏப்.14,2011

கட்சிக்கு விரோதமாக நடப்பவர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு கூறினார். ##~~##

காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.வி. சேகர், கராத்தே தியாகராஜன் உள்பட 19 பேரை நீக்குவதாக கே.வீ.தங்கபாலு அறிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், "சொந்தக் கட்சியிலேயே உங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறதே? என்று கேட்கிறீர்கள். சில சமூக விரோதிகள் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதற்காக கட்சி பொறுப்பேற்காது. இருந்தாலும் என்னை விமர்சிப்பது பற்றி நான் பொறுத்துக் கொள்வேன். கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.
 
தமிழ்நாடு முழுவதும் கட்சிக்கு விரோதமாக யார் யார்? செயல்பட்டார்களோ, அவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கி இருக்கிறோம். 19 பேரை கட்சியில் இருந்து நீக்கினேன். அவர்களை நீங்குவதற்காக முழு அதிகாரம் எனக்கு உள்ளது.
 
கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் எனக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நீக்கி இருக்கிறேன். கட்சி கட்டுப்பாட்டை மீறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி டெல்லிக்கு தெரிவித்து விட்டுத்தான் நீக்கினேன்," என்றார்.

வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, "ஜனநாயக முற்போக்கு கூட்டணி சாதனையை பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் வெற்றி பெறுவோம். மயிலாப்பூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி," என்றார்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஓட்டு இல்லாதது பற்றி கேட்டதற்கு, "எனது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு சிலரின் சதி வேலை தான் காரணம். இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் தங்கபாலு.

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை இலைக்கு வாக்களித்தாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு உரிமை உண்டு," என்றார்.
 
மேலும், "தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிதான் அறிவுறுத்தியது," என்றார் தங்கபாலு.

அடுத்த கட்டுரைக்கு