Published:Updated:

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.15,2011

தமிழகத்தில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.##~~##

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், 'ஏப்ரல் 13 அன்று நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒருசில அசம்பாவிதங்கள் தவிர பொதுவாக அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்துள்ள போதிலும், வாக்கு எண்ணிக்கை மே 13 அன்றுதான் நடைபெறவுள்ளது. அதுவரை வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். 

தற்போது வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு மையங்களில் தமிழக காவல்துறையினர் பொறுப்பில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு போதுமானதாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவை பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது திமுகவினர் நடத்திய வன்முறைகள், முறைகேடுகள் ஆகியவற்றுக்கு தமிழக காவல்துறை இணக்கமாகவே இருந்துள்ளது.

எனவே, இதை கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் தமிழக காவல்துறையினரோடு கூடுதலாக மத்திய ரிசர்வ் படையினரையும் பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்,' என்று அந்தக் கடிதத்தில ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.