Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

வைரமுத்துவைப் பார்த்து ''வணக்கம்'' என்றான் சின்னப்பாண்டி.

 ''வணக்கம். யார் நீங்கள்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் பெயர் சின்னப்பாண்டி. ஊர் அட்டணம்பட்டி. பல்கலைக்கழகத்து வேளாண்மை மாணவன்!''

''ஓ... கேள்விப்பட்டேன். ஊர் மாற்றம் செய்யும் அந்த இளைஞர் நீங்கள்தானா? வாழ்த்துக்கள்''

என்றவர், ''என் பெயர் வைரமுத்து. எழுதுவது என் வாழ்வு. நீங்கள் யார்?'' என்றார் இஷிமுராவை நோக்கி.

''என் பெயர் இஷிமுரா ஜப்பானி யன்.  இயற்கை விவசாயி மகன்!'' என்றவன், வழக்கம்போல் வணங்கினான் முப்பது டிகிரியில் வளைந்தபடி. அவனுக்கு ஒரு தமிழ்க் கும்பிடு போட்டுவிட்டு, ''நீங்கள்?'' என்றார் எமிலியை நோக்கி.

''என் பெயர் எமிலி. அமெரிக்கன். சுற்றுச்சூழல் பட்டதாரி. இயற்கையின் சேவகி!'' என்றவள் புன்னகையில் முற்றுப்புள்ளி வைத்தாள்.

மூன்றாம் உலகப் போர்

''உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் கற்றுக்கொள்ள உங்கள் மூவரிடமும் செய்திகள் உண்டு என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது!''

''நீங்கள் உட்காருங்கள்!'' என்றான் சின்னப்பாண்டி.

''உங்களை அமர்த்திவைக்க என்னிடம் நாற்காலிகள் இல்லாதபோது, நானும் நிற்பதே நாகரிகம். நிற்போம்!''

எழுதுகோலும் ஏடும் மூடிவைத்தவர், ''வேர்க்கடலையும் சுக்கு நீரும் வைத்திருக்கிறேன். விரும்பினால் பகிர்ந்துகொள்ளலாம்'' என்று கூடை கொடுத்தார் சின்னப்பாண்டியிடம்.

விருப்பத்தோடு வேர்க்கடலை தின்றவர்கள், தயக்கத்தோடு சுக்கு நீர், பருகி,

''காரமாய் உள்ளது. ஆனால் நன்று'' என்றார்கள்.

''நன்றி'' என்ற சின்னப்பாண்டி, ''இங்கே நீங்கள் அடிக்கடி வருவீர்களா?'' என்றான்.

வாய்விட்டுச் சிரித்த வைரமுத்து, ''கேள்வியே தவறு'' என்றார்.

மூன்றாம் உலகப் போர்

''இங்கிருந்துதான் அடிக்கடி சென்னைக்குச் செல்கிறேன். நான் புறப்பட்ட இடம் இதுதான். என் வாழ்வின் - படைப்பின் நதிமூலம் இதுதான். சென்னை என்பது எனக்கு மொழியின் தொழிற்சாலை. என் கிராமம்தான் பாடசாலை. அந்த மேற்குத் தொடர்ச்சி மலையை மாதம் ஒரு முறை வந்து நலம் கேட்காவிட்டால், பைத்தியம் பிடித்துவிடும் எனக்கு!''

''இயற்கையின் சௌந்தர்ய உபாசனைதான் கவிகளுக்கு மூலமா?'' என்றாள் எமிலி.

''இயற்கை என்பது வெறும் சௌந்தர்யம் மட்டுமில்லை எமிலி. இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறு வேறன்று. இயற்கையின் சிறு பிரதி தான் மனிதன். மனிதனின் பெரும் பிரதி தான் இயற்கை. இயற்கை என்பது மலை களும் நதிகளும் மரம் செடி கொடிகளும் மட்டுமல்ல. அந்தப் பருப்பொருள்களுக் குக் கீழே படிந்திருக்கும் ரகசியம்தான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக் குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை. இயற்கையின் மொழியைப் புரிந்துகொள்ளும் யுக முயற்சி யிலேதான் காலம் இறந்துகொண்டே இருக்கிறது. கலை இறவாமல் இருக்கிறது!''

''இயற்கை உங்களோடு எந்த மொழியில் பேசுகிறது? இயற்கையோடு நீங்கள் எந்த மொழியில் பேசுகிறீர்கள்?'' என்றான் இஷி.

''மௌனம் என்னும் உலக மொழியில் இயற்கை பேசுகிறது என்னோடு. என் தாய்மொழியில் பேசுகிறேன் இயற்கையோடு!''

''என்னதான் பேசுவீர்கள் அந்த மேற்குத் தொடர்ச்சி மலையோடு?''- எமிலியின் கண்களிலும் கேள்வியிலும் ஆர்வம் மின்னியது.

'' 'கோடிக் கோடி ஆண்டுகளாய்த் தாய்ப்பால் வற்றாத தாயே! உன் பாலகன் வந்திருக்கிறேன் பார்!’ என்பேன். 'மேகங்கள் உறங்கிப்போகத்தான் உன் மடியில் அந்த மேடு பள்ளத் தொட்டில்களா’ என்று ஒவ்வொரு முறையும் கேலி செய்வேன். 'உன்னை நம்பித்தான் ஒரு சமவெளி இருக்கிறது. எந்த நூற்றாண்டிலும் ஏமாற்றிவிடாதே’ என்று கெஞ்சுவேன். 'சில கோடி ஆண்டுகளாய் இந்தச் சமவெளியின் ஜனன மரணங்களை - யுத்தத்தின் ரத்தத்தை - வெற்றியின் புன்னகையை - தோல்வியின் கண்ணீரை - சரித்திரத்தின் அவமானங்களை - வாழ்வின் பெருமிதங்களை நின்று பார்த் துக்கொண்டு இருக்கும் நெடும் சாட்சியே... உன் நீலமணி வாய் திறந்து எங்கள் பூர்வ கதை சொல்வாயா’ என்று பாட்டியிடம் கதை கேட்கும் பேரனைப் போல் நச்சரிப் பேன். 'உன் சிகரத்தில் ஏறி மடியில் விழுந்து மடிந்துபோகட்டுமா’ என்று கிறுக்குத்தனமாகக் கேட்பேன்!''

''எப்படி வந்தது இத்துணைப் பாசம் மலை மீது உங்களுக்கு?'' என்றான் இஷி.

''முதியவர் மீதும் முதுபொருள் மீதும் எப்போதும் கூடுதல் பாசம் கொட்டும் எனக்கு, இந்த மேற்குத் தொடர்ச்சி மலை எங்கள் மண்ணின் முதுபொருள் மட்டும் அல்ல - முதற்பொருளும்கூட!''

''எப்படி... எப்படி?'' என்றாள் எமிலி.

''ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரோடு ஒட்டியிருந்த எங்கள் நிலப்பரப்பு 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிய்த்தெறியப்பட்டது. அதன் பிறகு புவியியல் கலகங்களால் நேர்ந்த எரிமலைப் பெருவெடிப்பில் எட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மலை உண்டானது!''

''முதுமையால் வருகிற பாசமும் மூடநம்பிக்கைதான்!'' என்றான் இஷி.

''இல்லை. பயன்பட்டதும் பயன்படுவதும்தான் பாசம். எத்துணையோ லட்சம் ஆண்டு களாய் எங்கள் உதிரத்தின் தொடர்ச்சியாய் இந்த நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் தோன்று முன்பே மலை தோன்றிவிட்டது. மலை தோன்றியபோதே நதி தோன்றிவிட்டது. சமூக நோக்கமுள்ள இளைஞனே... சின்னப்பாண்டி... எனக்கோர் ஆதங்கம்...''

''சொல்லுங்கள்...''

''இமயமலையின் வன வளம் பாதுகாக் கப்பட்ட அளவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் வன வளம் பாதுகாக்கப்படவில்லை. இது இந்திய அரசு மீது எனக்குள்ள ஆதங்கம்!''

''இமயமலை உங்கள் தேசத்தின் போர் எல்லை அல்லவா? அதனால் அது பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. தவிரவும் இமய மலை, கங்கையின் கருவறை; அது கூடுதல் கவனம் பெறுதல் தவறல்லவே!''- தன் வாதத்தை மெல்லிய மொழியில் எடுத்துவைத்தாள் எமிலி.

''உண்மை. இமயமலையை இங்கிருந்தே வணங்குகிறேன். ஆனால், இந்தியாவின் அறுபது சதவிகிதத்தை நனைக்கும் நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலேதான் ஊற்றெடுக்கின்றன என்ற உண்மையை அதிகார வர்க்கம் மறந்திருக்கலாம்; உழைக் கும் வர்க்கம் மறப்பதில்லை!''

''கேளாத தகவல் இது. எங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருமை சொல்லுங்கள்!'' - ஆர்வத்தில் வார்த்தைகள் துடித்தன சின்னப்பாண்டிக்கு.

மூன்றாம் உலகப் போர்

''இது வெறும் மலை அல்ல தம்பி! இந்தியாவின் மேற்கு எல்லையில் அரபிக் கடலுக்கு இணையாய் 1,600 கிலோ மீட்டர் நீண்டிருக்கும் ஒரு தேசம். நர்மதா, தபதி நதிகளைக் குஜராத்துக்குள் இறக்கிவிட்டது இந்த மலைதான். கிருஷ்ணா, கோதாவரியை ஆந்திரப்பிரதேசத்துக்குள் அனுப்புவதும் இந்த மலைதான். தமிழ்நாட்டுக்குள் காவிரியாய்ப் பெருக்கெடுக்கும் கபினியைக் கர்நாடகத்துக்கு ஈன்று புறம் தருவதும் இந்த மலைதான். தமிழ்நாட்டுக்குள் அமராவதியாய் வழியும் நொய்யாற்றையும் வைகையில் கலக்கும் பெரியாற்றையும் கேரளத்தில் உற்பத்தி செய்வதும் இந்த மலைதான். தமிழ்நாட்டுக்குள் பிறந்து, தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பரவிப் பாயும் தாமிரபரணியைத் தருவதும் இந்த மேற்கு மலைத் தொடர்தான். ஆனால், கங்கா, யமுனா நதிகளைப் போல் இவை கவனிக்கப் படவில்லை. அசோகச் சக்கரவர்த்திக்குள் ளும் அக்பருக்குள்ளும் எங்கள் சேர சோழ பாண்டியர்கள் மறைக்கப்பட்டதுபோல், இமயமலையின் இடுக்குகளில் எங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை புதைக்கப்பட்டு விட்டது!''

''உங்கள் சினம் அறிவுவசப்பட்டதா... உணர்ச்சிவசப்பட்டதா?''- மயிலிறகு வார்த் தைகளால் வாள் வீசினாள் எமிலி.

''முதலில் காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். பிறகு, என் சினம் எதன்வயப்பட்டது என்பதை நீங்களே வகைப்படுத்துங் கள். அரபிக் கடல் காற்றைத் தடுத்து, மேகத்தின் மடியில் செலுத்தி மழை கறப்பது இந்த மலைதான். மரங்களின் உயரம் குறைந்தால், மலையின் உயரம் குறையும். மலையின் உயரம் குறைந்தால் மழையின் அளவும் குறையும். இந்த மலை நதிகளையே நம்பியிருக்கும் எங்கள் தாகப்பட்ட சமூகம் என்னவாகும்? அதனால்தான் மேற்குத் தொடர்ச்சி மலை காக்கப்பட வேண்டும் என்கிறேன்!''

''இது மலை அல்ல; தேசம் என்றீர்களே... எப்படி?''

''மனிதர்கள் மட்டும்தான் தேசம் என்ற பழைய கருத்துக்கு நாம் பழகிவிட்டோம். ஆனால், மனித ராசிக்கு முன் பிறந்த உயிர்க் கோவைகளை மறந்துவிட்டோம். இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் 5,000 வகைத் தாவரங்கள், 520 வகைப் பறவைகள், 130 வகைப் பாலூட்டிகள், 65 வகைப் பாம்புகள், 160 வகை ஈருயிரிகள் உயிர்த் தொடர்ச்சியாய் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. அது தேசம் அல்லாமல் வேறென்ன? இந்த உயிரிகள் இல்லாமல் ஜீவ கூட்டத்துக்குப் பெருமை என்ன? இத்தனை வகை உயிர்கள் இருந்தும் மலையில் நான் மதிப்பது புல்லைத்தான்!''

''புல்லையா?'' - எள்ளல் தோய்ந்த ஆச்சர்யம் தொனித்தது சின்னப்பாண்டியின் குரலில்.

'' 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழி அறிவாய் அல்லவா சின்னப்பாண்டி? மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் புல்தான் ஆயுதம். 1,200 புல் வகைகள் மண்டிக்கிடக்கின்றன மலைத் தரையில். அவைதாம் மழை நீரை மடியில் வாங்கிவைக்கும் வங்கிகள். விழுந்த மழையை ஆவியாகவிடாத காப்புக் கவசங்கள்.அந்தப் புல்லின் அடி மண்ணில் சேமித்துவைக்கும் அமிர்த மழையைத்தான், சுனையாய் - ஓடையாய் - அருவியாய் - நதியாய் வடிகட்டி வடியவிடுகிறாள் மலை மாதா. மாதாவும் அவளே; மருத்துவச்சியும் அவளே!''

மூன்றாம் உலகப் போர்

''மருத்துவச்சி என்றால் எந்த அர்த்தத்தில்?'' என்றாள் எமிலி.

''அண்மையில் வந்தது பெண்ணே உங்கள் அலோபதி. அதற்கு முன் எங்கள் ஆதி குடிகளுக்கு உணவும் தாவரம்தான்; மருந்தும் தாவரம்தான். தொப்பூழ்க் கொடி அறுத்த எங்கள் சிசுக்களுக்குக் கிருமி நாசினியாய் நாங்கள் பூசித் தேய்ப்பது வேப்பமர வித்தான தாவர எண்ணெய்தான். இறப்புக்குப் பின் துர்நாற்றம் இல்லாமல் நாங்கள் பிணம் பேணுவது கருஞ்சந்தனம் என்ற தாவரத் தைலம் தெளித்துத்தான். இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை

எங்கள் வாழ்க்கை, தாவரங்களின் தாழ்வா

ரங்களிலேயே நடந்தது. இன்னும் கரு நெல்லி, கல்லுருக்கி, ஓந்தாழை, சரக்கொன்றை, நத்தைச்சூரி, ரத்த வேங்கை, ஆங்காரவல்லி, நீர்ப் பூண்டு, காட்டுச் சீரகம், கடுக்காய், நறுந்தாழி, நரிவிழி, மலை வேம்பு, கருந்துளசி, கரும் பூதாளம், கஸ்தூரி, கல் தாமரை, மலைச் சடையான், மலையன் கிழங்கு - இப்படிப் பெயர் அறிந்த மூலிகை வகைகளையும், அனாதைக் குழந்தைகளைப் போல் பெயர் தெரியாத ஆயிரமாயிரம் மூலிகைகளையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் மலை மாதா, மருத்துவச்சி அல்லாமல் வேறென்ன?''

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது.

தூரத்துத் தென்னங்கீற்றுகளோடு காற்றின் கனத்த உரையாடல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

'இலங்கைத் தமிழருக மாதிரி எங்க வீட்டையும் கூட்டையும் பிடுங்கிவிட்டுட்டீகளே’னு தலைக்கு மேல் கதறிக்கொண்டே புதுக் கூடு தேடிப் பறந்துகொண்டு இருந்தன, அந்தக் குளத்தில் பழகிப்போன பழைய பறவைகள்.

இஷிதான் உடைத்தான் இறுக்கமான மௌனத்தை.

''நம் இதயங்கள் ஒரே புள்ளியில் சிந்திக்கின்றன. உங்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்கிறோம். ஆனால் ஒன்று... எல்லோரை யும் போல, நீங்களும் பிரச்னைகளைத்தான் பேசுகிறீர்கள். தீர்வு என்ன?''

''மனிதா..! இயற்கையைக் கொல்லாதே என்கிறேன். சக மனிதனைக் கொல்வதற்கு எப்படி உரிமை இல்லையோ... அப்படி இயற்கையைக் கொல்வதற்கும் மனிதா... உனக்கு உரிமை இல்லை என்கிறேன்!''

''நீங்கள் மரங்களையும் மக்களையும் கொல்லாதே என்கிறீர்கள். மண்ணைக் கொல்லாதே என்கிறோம் நாங்கள்!''

''விரித்துச் சொன்னால் விளங்கும் எனக்கு!''

''இந்தியா கண்டடைந்த பெரிய தொழில்நுட்பம் இயற்கை விவசாயம். அதைத் தொலைத்துவிட்டது இந்தியா. இந்திய மண் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது!''

''சான்றோடு சொல்லுங்கள்.''

''மண் ஈன்று கொடுப்பதெல்லாம் உள்ளிருக்கும் உயிர்த்தன்மையால்தான். அந்த உயிர்த்தன்மைதான் கொல்லப்படுகிறது. ஜான் ஜீவன்ஸ் என்னும் பிரெஞ்சு விஞ்ஞானியை இந்தச் சத்தியத்தை நிறுவச் சாட்சிக்கு அழைக்கிறேன். அமெரிக்காவில் ரசாயன விவசாயம் ஆறு கிலோ மண்ணின் உயிர்த்தன்மையைக் கொன்றுவிட்டுத்தான் ஒரு கிலோ விளைவிக்கிறதாம். இந்தியாவில் பன்னிரண்டு கிலோ மண்ணின் உயிர்த்தன்மை கொல்லப்பட்ட பிறகுதான் ஒரு கிலோ விளைகிறதாம். சீனாவில் பதினெட்டு கிலோ மண்ணின் உயிர்த்தன்மையைத் தின்றுவிட்டுத்தான் ஒரு கிலோ உணவு விளைகிறதாம். மலைக் கொலை தடுக்கப்பார்க்கும் கவிஞரே.... மண் கொலை தடுக்க என்ன செய்யப்போகிறோம்?''

''இயற்கைக்குத் திரும்பு என்பது மனிதர்க்கு மட்டுமல்ல; மண்ணுக்கும் பொருந்தும். செயற்கை உரங்களை ஒழித்துவிட்டு மீண்டும் இயற்கை உரத்துக்கே திரும்ப வேண்டும்!''

எமிலி சிரித்தாள்.

''அது ஒரு நாளில் நிகழும் மாற்றம் அல்ல. அத்துணை இயற்கை உரத்துக்கு எங்கே போவது? ஜனத்தொகை குறைத்துக் கால் நடை பெருக்குவதற்குப் பதிலாக, ஜனத் தொகை பெருக்கிக் கால்நடை குறைத்துவிட்டது இந்தியா. விலங்குகள் இல்லாத தேசத்தில் மனிதர்கள் முழுமையுறுவது இல்லை!''

''நன்றி எமிலி. உன்னால் ஒரு புதுமொழி உருவாகட்டும். 'ஜனத்தொகை சுருக்கு; கால்நடை பெருக்கு’!''

''இயற்கை விவசாயத்தால் மனிதத் தேவை தீராது என்கிறார்களே...'' - சின்னப்பாண்டி இழுத்தான்.

இஷி குறுக்கிட்டான்... ''நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சொன்னால் நம்புவீர்களா? அவர் ஓர் இயற்கை விவசாயி. அவர் ஐ.நா-வில் சமர்ப்பித்த உணவு அறிக்கையில், இயற்கை விவசாயத்தால் ஆறு மடங்கு விளைச்சல் கூடியிருக்கிறது என்று சான்றறிக்கை வாசித்திருக்கிறார். இயற்கை விவசாயம் இயலாது என்பது உர கம்பெனிகள் பரப் பும் சர்வதேசப் பொய்!''

''இஷி... உன்னைப் பாராட்டுகிறேன். உன்னைப் போன்ற ஓர் அனைத்துலக இளைஞனுக்காகத்தான் சர்வதேசச் சமூகம் காத்திருக்கிறது'' - அவன் கை தொட்டுப் பாராட்டினார் வைரமுத்து.

''பாராட்டுகளை மதிக்க முடிகிறது. ஆனால், மகிழ முடியவில்லை. 700 கோடி மக்கள்தொகை கொண்ட உலகப் பரப்பில் 100 கோடிப் பேர் பட்டினியோடு படுக்கைக்குப் போகிறார்கள் என்று அறியும்போது, துயரப் பெருங்கடலில் நானும் ஒரு துளியாகிப்போகிறேன்!'' என்றான் இஷி.

''இன்னுமோர் உண்மை சொல்லட்டுமா?'' என்றாள் எமிலி.

''சொல்லுங்கள்!''

''உண்மைகளில் துயரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், துயரங்களெல்லாம் உண்மையானவை. இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண் ணிக்கை அனைத்து நாடுகளிலும் 60 லட்சம். இன்று உலகமெங்கும் பட்டினிச் சாவு எண்ணிக்கை 130 லட்சம். இந்தப் பூமியில் இப்போது ஒவ்வோர் ஆண்டும் இரண்டு உலகப் போர்கள் நடந்துமுடிகின்றன!''

''நெஞ்சை உடைக்கும் செய்தி நீங்கள் சொன்னது!'' - நீண்டதொரு பெருமூச்சுவிட்டார் வைரமுத்து.

''இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 10,000 பட்டினிச் சாவு. உணவு உற்பத்திப் பெருக்க வேண்டிய இந்தியா, ஆண்டுக்கு 7.5 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களை இழந்துவருகிறது!'' என்றான் சின்னப்பாண்டி.

''அப்படியா?''- அதிர்ச்சி காட்டினார் வைரமுத்து.

''இதைவிட அதிர்ச்சியாவீர்கள் இன்னொன்று சொன்னால்...''

''சொல் பெண்ணே...''

''மூன்றாம் உலக நாடுகள் விற்பனைக்கு வருகின்றன. விவசாயத்துக்கு வழியில்லாத வளைகுடா நாடுகள் வளைத்துப்போடுகின்றன, வளரும் நாடுகளை. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பண்ணை அமைப்பதற்கு 25,000 கிராமங்களை அழிக்கப்போகிறது கத்தார். இந்தோனேஷியாவில் 160 லட்சம் ஹெக்டேர்கள் வளைத்துத் தங்கள் ஊருக்கு உணவு விளைவித்து அனுப் பப்போகிறது சவுதி அரேபியா. உகாண்டா வில் 8 லட்சம் ஹெக்டேரில் பயிர் செய்யப் பார்க்கிறது எகிப்து. பணக்கார தேசங்களின் பயங்கரக் கைகள் நீண்டுகொண்டே வருகின்றன ஏழை நாடுகளின் குரல்வளை நோக்கி. ஒவ்வொரு நாட்டிலும் தான் விற்ற தன் நிலத்தில் கூலி வேலை செய்யப் போகிறான் விவசாயி. நீங்களே சொல்லுங்கள் - இது இந்திய மண்ணிலும் நேர வேண்டுமா?''

''தேவதைபோல் பேசுகிறாய் எமிலி. லோக குருவாய்ப் பேசுகிறாய் இஷி. உங்களிடம் நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் என் ஆசான்கள். சின்னப்பாண்டி... நீ கொடுத்துவைத்தவன். நீ செயல். காட்டுத் தீ. காட்டுத் தீயைத் துரிதப்படுத்தும் காற்றாகும் இவர் கள் அறிவாற்றல். திரட்டு மக்களை...செயல்படு.

விளை நிலங்களை விற்கவிடாதே
விவசாயத்தை இயற்கைப்படுத்து
காடு மலைகளைக் காவல்கொள்
கன்று மரங்கள் நாடெங்கும் நடு
போ. என் எளிய துணை தேவைப்பட்டால் எப்போதும் வா!''
- வலிமையோடு வைரமுத்து உச்சரிக்க உச்சரிக்க... கண்ணிலே ஒளியோடும் நெஞ்சிலே தெளிவோடும் நிமிர்ந்து நின்றான் சின்னப்பாண்டி.

விடைகொண்டார்கள்.

கரை முடிவில் அவர்கள் உருவம் கரைகிற வரை அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தார் வைரமுத்து!

- மூளும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism