பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!
##~## |
''இதுநாள் வரை விகடனில் பேட்டிகளுக்காகப் பேசி இருக்கிறேன். முதல்முறையாக இப்போதுதான் எழுதுகிறேன். என்னை முதல் முறை பேனா பிடிக்கவைத்த பெருமை ஒரு பெரியவரையே சேரும். சமீபத்தில் சென்னைப் புத்தகக் காட்சிக்குப் போயிருந்தேன். நல்ல கூட்டம். விகடன் ஸ்டாலைக் கடக்கையில், வியர்க்க விறுவிறுக்க என்னை விரட்டியபடி வந்தார் ஒரு பெரியவர். கிராமத்துக்கே உரிய வெள்ளந்தி முகம். சட்டென என் கைகளைப் பற்றியவர், ''விகடன்ல நீங்க எப்போ சார் 'நானும் விகடனும்’ எழுதுவீங்க? அந்தப் பகுதியில் நீங்க இன்னும் எழுதவே இல்லையே!'' என்றார். விகடனுக்கும் எனக்கு மான பந்தம் கடைக்கோடி வாசகருக்கும் தெரிந்திருக்கிறது என்பதற்கு அந்தப் பெரியவரின் கேள்வியே சிறந்த உதாரணம். அந்தப் பெரியவருக்கு நன்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என் சிறு வயதில் வீட்டுக்கு விகடன் வருகிறது என்றால், கூடவே வம்பும் வருகிறது என்று அர்த்தம். எனக்கு, உனக்கு என ஆளாளுக்கு விகடனை முதலில் படிக்க அடித்துக்கொள்வோம். அப்போதிருந்தே என்னிடம் ஒரு கெட்ட பழக்கம். அதை நல்ல பழக்கம் என்றும் சொல்லலாம். வாசிக் கும் புத்தகம் லேசாகக் கசங்கிஇருந்தால்கூட எனக்குக் கெட்ட கோபம் வந்துவிடும். காற்று இலையசைப்பதைப் போல புத்தகத்தை மென்மையாகப் புரட்டிப் படிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். இப்பவும் விகடனை யாராவது சுருட்டி மடக்கிக் கையில் வைத்திருந்தால், மனசு பொறுக்காது!
விகடனில் என்னைப் பெரிதாக ஈர்க்கும் அம்சம் பக்கத்துக்குப் பக்கம் வசீகரிக்கும் அதன் அலங்காரம். அட்டகாச நேர்த்தி. ஒவ்வொரு வாரமும் புதுப் பெண்ணைப்போல் வாசகர்களை ஈர்க்கும் வரம் விகடனுக்கு மட்டுமே வாய்த்தது. சென்னைக்கு வந்து 'சேது’ ஷூட்டிங்கில் அண்ணன் பாலாவுக்குப் பக்கத்தில் நின்ற நேரம். 'ஆனந்த விகடன்ல இருந்து கண்ணன் வந்திருக்காருப்பா...’ என ஒரு குரல். 'பாஸு’ என்கிற ஒற்றை வார்த்தையில் மொத்தப் பாசத்தையும் இறக்கிவைக்கிற மனுஷன். அன்றைக்கு

ஆச்சர்யமாகப் பார்த்த கண்ணன், இன்றைக்கு எனக்கு அண்ணன்!
அமீர் அண்ணன் 'மௌனம் பேசியதே’, 'ராம்’ படங்களை இயக்கியபோது ஸ்டில்ஸ், சி.டி. என ஏதாவது கொடுத்து வரச்சொல்லி விகடன் அலுவலகத்துக்கு அனுப்புவார். வண்டியை எடுத்துக்கொண்டு மவுன்ட் ரோடு போவேன். சில நேரங்களில்
ரிசப்ஷனில் காத்திருக்கச் சொல்வார்கள். பாரம்பரியப் பெருமையைக் கம்பீரமாகச் சுமக்கும் அந்த அலுவலகத்தை ஆசையோடு பார்த்தபடி இருப்பேன். இரண்டாவது மாடிக்குப் போய் அண்ணன் கொடுத்ததைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து, விகடன் அலுவலகத்துக்கு எதிரே இருக்கும் டீக் கடையில் நிற்பேன். டீ குடித்தபடி விகடன் அலுவலகத்தை மீண்டும் பார்ப்பேன். விகடன் என்கிற பிரமாண்டத்தை மிடறு மிடறாக விழுங்கி ரசித்தவன் நான். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்துபோனதாலேயே அந்தக் கடைக்காரர் பெயர் ராமச்சந்திரன் என்பதும், அங்கே வரும் நிருபர்கள் யார் யார் என்பதும் எனக்கு அத்துப்படியானது. தற்போது மலையாளத்தில் 'மாஸ்டர்ஸ்’ என்கிற படத்தில் நிருபர் பாத்திரத்தில் நான் நடிப்பதற்கான 'பாடம்’ கற்ற இடம் ராமச்சந்திரன் டீக்கடைதான்!
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மதுரைக்குக் கிளம்பிவிடுவேன். அப்போது அங்கே எங்களுக்குச் சொந்தமான சிவலிங்கம் புக் ஷாப்பில்தான் பெரும்பாலான நேரம் கழியும். விகடன் பிரசுரத்தின் சிறப்பு வெளியீடுகளை எல்லோரும் பார்க்கும்விதமாக வைத்து, ஆசையும் ஆர்வமுமாக விற்பேன். விகடன் பிரசுர விற்பனையில் எந்தப் புத்தகம் அமோகம் என்பதைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன். 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’, 'இவன்தான் பாலா’, 'ஊருக்கு நல்லது சொல்வேன்’ போன்ற புத்தகங்களின் விற்பனை அப்போது களைகட்டும். விற்பனை நிலவரங்களை விசாரிக்க வரும் விகடன் நண்பர்கள், விகடன் புத்தகங்களை நாங்கள் ஸ்பெஷலாக அலங்கரித்திருப்பதைப் பார்த்துவிட்டு, 'சென்னைக்கு வந்தால் ஆபீஸ் பக்கம் வாங்களேன்!’ என்று பாசமாக அழைப்பார்கள். விகடனுக்கு வாசகனாக மட்டும் அல்லாமல், ஒரு விற்பனையாளனாகவும் இருந்த பெருமை எனக்கு உண்டு.
'சுப்ரமணியபுரம்’ ஷூட்டிங் முடிந்த நேரம். படத்தைப் பற்றி விகடனில் பேட்டி வந்தது. நான்கு பக்கம் ஒதுக்கி நாங்கள் ஆறு பேர் நிற்கும் புகைப்படத்தைப் பெரிதாகப் போட்டு அசத்தி இருந்தார்கள். ஒரு புதுமுக இயக்கு நருக்கு அவ்வளவு பெரிய முக்கியத் துவம் கொடுக்க விகடனால் மட்டுமே முடியும்!
2007-ம் வருடத்துக்கான 'டாப் - 10 நம்பிக்கை மனிதர்கள்’ பட்டியலில் எனக்கும் விகடன் இடம் கொடுத்தது. வாழ்வில் எதையோ சாதித்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திய திடுக் திருப்புமுனை அது. அடுத்த வருடம் அதைவிடப் பெரிய ஆச்சர்யம்... டாப் - 10 மனிதர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத் தது விகடன். என்னை நம்பிக்கைக்கு உரியவனாகப் பார்த்த விகடனின் எண்ணத்தைப் பூர்த்திசெய்த நிறைவு எனக்கு. நம்பிக்கையைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மகத்தான மனித குணம் வேறென்ன இருக்க முடியும்? அந்த வார விகடனின் அட்டைப் படத்தில் நான்... ஓர் இயக்குநராக என்னை அங்கீகரித்த விகடன், ஒரு நடிகனாகவும் என்னைக் கொஞ்சிக் குதூகலிக்கவைத்த நேரம்!
சினிமாவில் அடியெடுத்துவைக்கும் பலரும் படம் வெளியாகும்போது விகடன் விமர்சனக் குழு எத்தனை மதிப்பெண்கள் போடும் என்பதை ஆவலோடு பார்ப்பார்கள். ஆனால், நான் விகடன் மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படவே மாட்டேன். பள்ளி, கல்லூரிக்கு அப்பாலும் மதிப்பெண் துரத்தலுக்கு ஆளாக எனக்கு விருப்பம் இல்லை. விகடனின் மாணவப் பயிற்சியாளர் திட்ட விழாவுக்காக என்னை அழைத்தபோது, 'என் படத்துக்கு விகடன் மிகக் குறைவான மார்க் போட்டால்கூட, நான் வருத்தப்பட மாட்டேன். காரணம், என்னை முதன் முதலாக அங்கீகரித்தது விகடன்தான். அதற்காக எந்நாளும் கடமைப்பட்டவனாக இருக்கும் நான், ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்!’ என்றுதான் சொன்னேன். 'நாடோடிகள்’ ரிலீஸுக்குப் பின்னர்தான் 'சுப்ரமணியபுரம்’ படத்துக்கான விகடன் விமர்சனத்தைப் படித்தேன். 'ஈசன்’ படத்துக்கு விகடன் எழுதிய விமர்சனத்தை நான் படித்தது 'போராளி’ ஷூட்டிங்கின்போது! விமர்சனத்தையும் விகடனையும் எப்படிப் பகுத்துப் பார்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன்.
சினிமா செய்திகள் மட்டும் அல்லாது சமூக நடப்புகளைக் கண்ணுக்கு முன்னே நிறுத்துவதிலும் விகடனுக்கு நிகர் விகடன்தான். ஈழத் துயரங்களை தமிழ் மக்களின் இருதயக் குழியில் தைக்கிற மாதிரி எழுதி, மாநிலமே பொங்கி எழுகிற அளவுக்கு உணர்வுமிக்க எழுச்சிப் போராட்டமாக மாற்றியதில் விகடனுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

'போராளி’ ஷூட்டிங் சமயம் விகடனுக்குப் பேட்டி அளித்தபோது, நிருபர் ஈழம் தொடர்பான கேள்விகளைக் கேட்டபோது, மனதில் இருப்பவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பேசிவிட்டேன். 'இலங்கைக்கு படத்தின் எஃப்.எம்.எஸ். உரிமையைக் கொடுக்க மாட்டேன்!’ என நான் சொன்ன கருத்தைப் பரபரப்பு விவாதமாக்கி, 'கொழும்பை அடக்குமா கோடம்பாக்கம்?’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டு இருந்தார்கள். இல்லத்தில் மட்டுமே ஈழ ஆதரவாளனாக இருந்த என்னை ஈழ மக்களின் உள்ளத்தில் ஒருவனாக உயர்த்தியது அந்தக் கட்டுரை!
விகடனில் என்னை வாராவாரம் வசீகரிக்கும் படைப்புகள் அனேகம்... இயற்கையின் தலையில் ஏறி மிதிக்கும் ரசாயனக் குப்பைத்தனங்கள் மிகுதியாகிவிட்ட நிலையில், ஒரு கிராமத்தானின் வாழ்வியலை, இயற்கையோடு அவன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையைச் சொல்வதற்காக கவிஞர் வைரமுத்து படைக்கும் 'மூன்றாம் உலகப் போர்’ உள்ளத்தை உலுக்கும் உணர்வுப் போர்!
அடுத்து வாராவாரம் எனக்குள் புகுந்து உலுக்கும் ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்’. முதல் வாரம் பசியோடு ஆரம்பித்ததாலோ என்னவோ... அன்பு, ஆதங்கம், வாழ்வியல், வறுமை என வாராவாரம் பசி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பொக்கி ஷம் தொடங்கி லூஸுப் பையன் வரை விகடனின் முத்திரைப் பகுதிகளின் வாடிக்கை வாசகன் நான்.
சமீபத்தில் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 'தானே’ புயல் பாதிப்பு நிகழ்ந்தபோது, தன் வீட்டுத் துயரமாக எண்ணி பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க அறைகூவல் விடுத்தது விகடன். உடனே விகடனுக்கு போன் செய்து, 'என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்!’ என்றேன்.
'சிதம்பரம் அருகே உள்ள சாலியந்தோப்பு கிராமத்தையே 'தானே’ புயல் காவு வாங்கிவிட்டது. அந்தக் கிராம மக்களுக்குக் குடிசைகள் அமைத்துக்கொடுத்தால் நல்லது!’ என்றார்கள். சாலியந்தோப்புக்கு ஓடோடிப் போய் நின்றேன். மரங்களும் மக்களும் ஒருசேர முறிக்கப்பட்ட அந்தச் சோகத்தை இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கீற்று, பாளை, கயிறு என சாலியந்தோப்பு கிராம மக்களுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தபோது, என் கைகளைப் பற்றியபடி அவர்கள் வடித்த கண்ணீர் இப்போதும் வழிகிறது.

அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது, சாலை ஓரத்தில் முந்திரி விற்கும் சிறுமி, 'சார், முந்திரி வாங்கிட்டுப் போங்க...’ என்றாள். 'சாப்பிடுற மனநிலையில் இல்லம்மா’ என்றேன். 'அடுத்த வருஷம் நீங்களே கேட்டாலும் எங்களால கொடுக்க முடியாது சார்... வாங்கிட்டுப் போங்க...’ என அந்தச் சிறுமி சொன்னபோது, நான் துடிதுடித்துப்போனேன். அவர்கள் முகங்களில் சின்ன புன்னகை ஒளியேற்ற விகடன் எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்துகொண்டு இருக்கிறது என்பதை நேரடியாக உணர்ந்தேன்!
முதல் காதலின் நெகிழ்வுக்கு நிகரானது முதல் சாதிப்பும் அதற்கான அங்கீகாரமும். முதல் பேட்டி, முதல் புகைப்படம், முதல் அட்டைப் படம், முதல் விருது என என் வாழ்வில் பல 'முதல்’களைக் குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கிறது விகடன். அந்த வரிசையில் என் முதல் எழுத்தாக இந்த 'நானும் விகடனும்’... இதை வாசிக்கும் நீங்களும் நானும்!''