Published:Updated:

பேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்!

காளிப்பட்டி கலகல

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாவட்டம் காளிப்பட்டியில் சமீபத்தில் தேர்த் திருவிழா. சுற்று வட்டாரம் எட்டுப்பட்டியில் உள்ள பெரும்பான்மை வீடுகளில், இந்த விழா நடக்கும்  ஐந்து நாட்களும் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள்; எல்லோருக்கும் திருவிழா சோறுதான். மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை, பேய் ஓட்டுவது, காவடி ஆட்டம் எனக் களைகட்டும் விழா இது. ஐந்து நாட்களில் தோராயமாக இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்வார்களாம்!

பேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்!
##~##

காளிப்பட்டியில் காலடிவைத்தேன். மரத்தடியில் காவடி பூஜை போட்டுக்கொண்டு இருந்தார் பெருமாள். ''காளிப்பட்டித் திருவிழாவுக்கு ஒவ்வொரு வருஷமும் சுத்துவட்டாரக் கிராமங்களில் இருக்கிற இளம்பிள்ளைக காவடி எடுத்துக்கிட்டு வருவாங்க. அப்படித்தான் நாங்க 40 பேரும் நடந்தே வந்து இருக்கோம். இங்கேயே சமைச்சு, படையல் போட்டு காவடிக்குப் பூஜை செய்வோம். இப்படி காவடி எடுத்து வர்றவங்களுக்காகப் பேய் பிடிச்சவங்களைக் கொண்டுவந்து காத்திருப்பாங்க.

யாருக்கு எல்லாம் பேய் பிடிச்சு இருக்கோ, அவங்க தாலியைக் கழற்றிட்டு வெள்ளைச் சீலைக் கட்டிக் கூட்டிட்டு வருவாங்க. அவ்வளவு சீக்கிரம் போகாத முனியே பிடிச்சு இருந்தாலும், இங்க வந்து நாங்க ஓட்டினா போயிடும். பேய் பிடிச்சவங்களை நாங்க அடிச்சு துன் புறுத்த மாட்டோம். அவங்க எங்ககிட்ட வந்து மடிப்பிச்சை கேட்டு, சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவாங்க. அப்புறம் நாங்க கந்தசஷ்டிக் கவசம் படிச்சு, பேய்கிட்ட பொறுமையா அறிவுரை சொல்வோம். அந்தப் பேயும் எங்க அன்புக்குக் கட்டுப்பட்டு கண்ணீரோட விடைபெற்றுப் போயிடும்...'' என்று சொல்ல கிறுகிறுத்தது நமக்கு!

பேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்!

பக்கத்திலேயே குரூப் குரூப்பாக நவீன கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கிளி யாருக்கு எந்த நம்பர் எடுத்துத் தருகிறதோ. அந்த எண்ணுக்கு ஆடியோவில் உடுக்கைச் சத்தத்தோடு ஜோசியம் சொல்லிக்கொண்டு இருந்தார் ஜோசியர்.

பக்கத்திலேயே ஆட்டுச் சந்தை. ''பட்டிக்காட்டுக்கு வந்த பாகிஸ்தான் ஆடுகளைப் பார்க்கலையோ!'' என்று கூவிக்கொண்டு இருந்தார் பூபாலன். ''இந்த ஆடுகள் பேர் முஸ்ரப்நகரி. பாகிஸ்தானில் கம்பளிக்காகவும், அழகுக்காகவும் வளர்க்குறாங்க. ஜோடி 75 ஆயிரம். வருஷம் ரெண்டு முறை குட்டிப் போடும். நம்ம நாட்டு ஆடுகளுக்குப் போடுற தீனியே இதுகளுக்கும் போதும்'' என்று ஆட்டு பயோடேட்டா வாசித்தார்.

மாட்டுச் சந்தையில் ஆலாம்புளி, செவலை, காங்கேயம் காளை, மேற்கத்தி மாடுகள், மைசூர் மாடுகள் என, ரகம்ரகமாக மாடுகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

பேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்!

சிகப்பு கலர் ஜிங்குச்சா... மஞ்ச கலர் ஜிங்குச்சா எனத் தேர் மிட்டாய்களை அடுக்கிவைத்து இருந்தார்கள். மிட்டாய் வியாபாரி கோபால், ''நாங்க காவேரிப்பட்டினத்தில் இருந்து வர்றோம். இந்தத் தேர் மிட்டாயை வேறு எந்தத் திருவிழாவிலும் பார்க்க முடியாது. இங்க எவ்வளவு மிட்டாய் போட்டாலும் ஓடிடும். சர்க்கரையையும் தேங்காய்த் துருவலையும் வாணலியில போட்டுக் காய்ச்சி, கலர்ப் பொடி கலப்போம். சர்க்கரையும் தேங்காய்த் துருவலும் சூடா உருகிட்டு இருக்கிறப்பயே தேர் வடிவத்துல இருக்கிற அச்சுல ஊத்தி எடுத்துடுவோம். இதை எங்க ஊர்ல செஞ்சு இங்க எடுத்துட்டு வர முடியாதுங்கிறதால இங்கேயே இந்த மிட்டாய்களைச் சுடச்சுடத் தயாரிச்சு விக்கிறோம். ஒரு கிலோ 120 ரூபாய்தான். வாங்கிட்டுப் போங்க...'' என்கிறார் இனிப்பாக!

காளிப்பட்டி தேர்த் திருவிழாவுக்குப் போவது செமத்தியான அனுபவம்தான்!

பேய்க்கு அட்வைஸ்... ஆடியோவில் ஜோசியம்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு