Published:Updated:

வலையோசை: தருமி

வலையோசை: தருமி

வலையோசை: தருமி

வலையோசை: தருமி

Published:Updated:
வலையோசை: தருமி

ருமி (http://dharumi.blogspot.in/) என்ற பெயரில் வலைப்பக்கங்களில் எழுதும் சாம் ஜார்ஜ், மதுரையைச் சேர்ந்தவர். 1970 முதல் 2003 - வரை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சாதி, மதம், கடவுள் மறுப்பு, அரசியல், சமூகம், அறிவியல் எனப் பல துறைகளும் இவருடைய பதிவுக் களங்கள். அவருடைய வலைப்பூவில் இருந்து...

வலையோசை: தருமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் பெர்ஃபெக்ஷனிஸ்ட்?

''யூ ஆர் எ டெட்லி பெர்ஃபெக்ஷனிஸ்ட்''

''இல்லண்ணே!'

'ஏம்பா இல்லைனு சொல்றே?'

'என்னைப் பொறுத்தவரை பெர்ஃபெக்ஷனிஸ்ட் அப்படினா, அவர் ராத்திரி சரியா 12 மணிக்கு எழுந்திருச்சி.. டெய்லி கேலண்டரில் அன்றையத் தேதியைக் கிழிக்கணும்ணே. நான் அந்த அளவு பெர்ஃபெக்ஷனிஸ்ட் இல்லை!'

நியாய உணர்ச்சி!

தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு மதுரை மக்களின் மனம், வாய் இரண்டிலும் பணம் விளையாடுச்சு. காசு கொடுக்கிறதுக்குக் கட்சிகளுக்குள் ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டது மாதிரி, சில ஏரியாக்களை ஆளுங்கட்சி எடுத்துக்கொண்டதாகவும் வேறு சில ஏரியாக்களை அடுத்த கட்சி தத்து எடுத்துக்கொண்டதாகவும் பேச்சு இருந்தது.

தேர்தலுக்கு முதல்நாள் ஆட்டோக்காரர் ஒருவர் தன் குடும்பத்துக்கு மொத்தமா 1,500 ரூபாய் வந்ததாகச் சொன்னார். நான் ரொம்ப மேதாவித்தனமா, ''கொடுத்ததை வாங்கிட்டு ஓட்டை மாற்றிப் போட்ற வேண்டியதுதானே?'' என்றேன். ''அது சரியில்லை'' என்றார். ''காசு கொடுக்கிறவங்களை அப்படித்தான் தண்டிக்கணும்; அப்பதான் அடுத்த தடவை காசு யாரும் கொடுக்க மாட்டாங்க'- இது நான்.

'இல்ல சார், அது தப்பு!'

'காசு கொடுக்கிறது தப்பு இல்லையா?' என்றேன்.

'காசு வாங்குறதும் தப்புதானே!' என்றார் பதிலடியாக.

அவரின் நியாய உணர்ச்சியும், அதனால் வாங்கின காசுக்கு ஓட்டுப் போட்டே ஆகணும் என்கிற உணர்ச்சியையும் பார்த்து, பேசாமல் இருந்தேன். அதன் பிறகு அவரே சொன்னார்: 'நீங்க சொல்றது மாதிரியும் சில பேர் சொல்றாங்க. அந்த மாதிரி சொல்றவங்க, 'அவங்களும் வேண்டாம், இவங்களும் வேண்டாம். விஜயகாந்த் கட்சிக்குப் போடலாம்’னு சொல்றாங்க. பார்ப்போம் என்ன ஆகுதுனு' என்றார்.

இந்த நியாய உணர்வின் தாக்கமே 75 விழுக்காடு ஓட்டு விழுந்ததற்கும், விஜயகாந்த் கட்சிக்கு இந்த அளவு ஓட்டு விழுந்ததற்கும் உரிய காரணங்களாக இருக்கலாம். என்னென்னமோ நடக்குதுங்க அரசியலில்!

என்று மாறும் இது?

மதுரையில் போன வாரத்தில் செய்தித்தாளில் வந்த செய்தி: 'வண்டிகளில் நம்பர் பிளேட்கள் சரியான முறையில் எழுதப்பட்டு இருக்கவேண்டும். இல்லையேல் தண்டனை’ என்று செய்தி. சட்டம் என்று சொல்லிவிட்டார்களே என்று யாராவது சரியாக எழுதாத தங்கள் வண்டி எண்களை மாற்றுகிறார்களா என்று பார்த்தால்... அப்படி யாரும் இல்லை. அரசு சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தால் மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. 'அடப்போங்கய்யா... நாலைஞ்சு நாளைக்கு போலீஸ் தேடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டால் பிறகு என்ன?’ என்ற மனப்பான்மை நம்மில் அநேகருக்கு.

நம்ம ஊர்  மக்களை நான் நல்லாவே பார்த்துவிட்டேன். சட்டம் என்றால் மதிக்கும் மனப்பான்மையே கிடையாது. ஆனால், அரசு கொஞ்சம் 'கையை ஓங்கினால்’ அனைத்தும் சரண்டர். சில சான்றுகள்: இந்திராவின் அவசர காலச் சட்டத்தில் நம் தமிழ் மக்கள் அடைந்திருந்த முட்டாள்தனமான அடிமைத்தனத்தைக் கண்கூடாகக் கண்டு இருக்கிறேன். உதாரணமாக, 'மூன்று முறை வேலைக்குத் தாமதமாக வந்தால் தண்டனை’ என்று ஒரு வதந்தி. அடேயப்பா... மக்கள் பதறிப்போய் சரியான காலத்துக்கு அலுவலகம் வந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

மதுரையிலேயே இன்றும் நடக்கும் ஒரு வழக்கம். சாலையில் ஒரு சண்டை என்று வைத்துக்கொள்ளுங்கள். 'ஏய்.. ஆள் தெரியாம விளையாடாதே!’ என்று அடுத்தவனைப் பார்த்து முதலில் எவன் சொல்கிறானோ அவனே வின்னர்!

இரண்டாவது சான்று: ஜெயலலிதா மழைநீர் வடிகால் திட்டம் நல்ல ஒரு 'பய முறுத்தலில்’ அழகாக நடந்தேறியது. நமக்கு எது சரி, அதன்படி நடக்கவேண்டும். கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது. சட்டம் என்று ஒன்று இருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்... இப்படி எல்லாம் நமக்கு எப்போது தோன்றும்?

அமைச்சரே! மாதம் மும்மாரி பெய்கிறதா? அப்டினு ராசா கேட்கிறது மாதிரி நிறைய நாடகங்களில்.. சினிமாக்களில்.. கதைகளில் வரும் ராசா என்ன கூட்டுப் புழுவாகவா இருந்திருப்பார். ஊர்ல நாட்ல மழைப் பெய்ஞ்சா ராசாவுக்குத் தெரியாமலாப் போய்விடும்? யாரோ எப்பவோ எழுதி அது இன்னமும் தொடருதோ? என்ன கொடுமை சரவணன் இது?

எல்லோருக்கும் மதுரை எப்படியோ, எங்க வைகை நதினாலே ஒரு இளக்காரம். அதில் தண்ணியே ஓடாது என்கிற மாதிரி ஒரு நினைப்பு. ஆனா, கடந்த நாலஞ்சு நாளா வெள்ளம் எப்படிப் போகுது தெரியுமா? பாக்கிறதுக்கே எப்படி இருக்குது தெரியுமா? எவ்வளவு தண்ணி போகுதுன்னு கேக்கிறீங்களா? நல்ல வெள்ளம். அநேகமா ஆளு உள்ள இறங்கினா கழுத்து, இல்ல... இல்ல... கண் புருவம் மறைஞ்சிடும்னு நினைக்கிறேன். ஆனா, ஒரே ஒரு கண்டிஷன்... உள்ளே இறங்கி தலைகீழா நிக்கணும்; அவ்வளவுதான்!

வலையோசை: தருமி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism