Published:Updated:

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

Seeman

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

Published:Updated:
Seeman
”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

முன்பு ஒன்றுபட்ட ராமநாதபுரத்தில் இருந்த, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் இடம்பிடித்து இருக்கும் தன் சொந்தக் கிராமம்  அரணையூர் பற்றியும் தன்னுடைய பால்ய கால நினைவுகளைப் பற்றியும் இங்கே பேசுகிறார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கரிசல் பூமி, கருவேல மரங்கள், கண்மாய்ப் பாசனம், பனைமரங்கள் இவைதான் அரணையூரின் அடையாளங்கள். சிறுவயதில் நாடகம், கரகாட்டம் மற்றும் விளையாட்டுகள் மீது அடங்காத ஆர்வம்கொண்டு திரிந்தேன். இறந்தவர்களைக் குளிப்பாட்ட உறவினர்கள் நீர்மாலை எடுத்துவரும் போது, அவர்களுக்கு முன் இளைஞர்கள் சிலம்பம் ஆடிவருவார்கள். அதைப் பார்த்த எனக்குச் சிலம்பத்தின் மீது ஆர்வம் பிறக்க, சிலம்பம் கற்கச் சென்றேன். நான் சிறுவன் என்பதால் என்னைச் சேர்க்க மறுத்தனர்; ஆனாலும் அடம்பிடித்து சிலம்ப வகுப்பில் சேர்ந்தேன். எல்லோருக்கும் கம்பு கொடுத்துக் கற்றுத்தந்தார்கள். என்னிடம் கயிற்றுக் கட்டிலின் கால் ஒன்றைக்  கொடுத்து பழகச் சொன்னார்கள். ஆர்வ மிகுதியால் அதைக்கொண்டே சிலம்பம் பழகினேன். கபடிப் போட்டிகளின்போது, ஆட்டக்காரர்களின் பொருள்களைப் பாதுகாப்பேன். ஒருமுறை ஆட்டக்காரர் ஒருவர் வராததால் சப்ஸ்டியூட்டாகச் சேர்க்கப்பட்டேன். அந்த ஆட்டத்தில் எல்லோரும் அவுட்டாகிவிட, நான் மட்டும் எஞ்சியிருந்து அணியின் வெற்றிக்கு உதவினேன். அதன் மூலம் கபடி அணியில் நிரந்தர இடம் கிடைத்தது.

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

விவசாயம், ஆடு, மாடு வளர்த்தல் எனப் பெரிய சம்சாரிக் குடும்பம் எங்கள் குடும்பம். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆடு மேய்க்கச் செல்வோம். பாசத்தோடு வளர்க்கும் ஆடுகள், கூட்டம் கூட்டமாக நோய்வந்து செத்துப்போகும். அந்த அதிர்ச்சியில் எங்கள் கிராமமே சோகமாகிவிடும். தீபாவளி நேரங்களில் பட்டாசு வாங்குவதற்குக் காசு கிடைக்காது. இதனால் பாம்பு வேட்டைக்குச் செல்வோம். சாரைப் பாம்புகளைச் சுருக்குவைத்துப் பிடித்து, அதன் தோலை உரித்து விற்போம். சாரையின் கொழுப்பெடுத்து, உப்புத் தடவி, 'உடம்பு வலித் தைலம்’ என்று விற்போம். அதில் கிடைக்கும் பணத்தில் துப்பாக்கியும், கேப் வெடியும்

வாங்கிக்கொண்டு முள்காட்டுக்குள் சென்று விடுவோம். அங்கு ஜேம்ஸ்பாண்ட் போல ஒளிந்து, மறைந்து சுட்டு விளையாடுவோம்.

என் குடும்பத்து குலதெய்வம் கொள்ளங்குடி காளி. ஒரு முறை எங்களுக்கும் சித்தப்பாவுக்கும் தகராறு வர, ஒருவரை ஒருவர் தண்டிப்பதற்காகக் காளி கோயிலில் காசு வெட்டிப் போட்டார்கள்.இரண்டு குடும்பத்துக்குமே குலதெய்வம் ஒரே காளிதான். அப்படி இருக்க, 'காளி யாரைத் தண்டிக்கும்’ என்று எனக்குள் எழுந்த கேள்வி தான் என்னைப் பகுத்தறிவுப் பாதைக்குத் திருப்பியது. சுற்றுப்பட்டு கிராமங்களில் பஞ்சம் வரும்போதெல்லாம் திருட்டு அதிகரிக்கும். பட்டியில் இருக்கும் மாட்டை அவிழ்த்து மறைத்துவைப்பது, கிணற்று மோட்டாரைத் திருடிப் புதைப்பது என்று விதம்விதமாகத் திருடுவார்கள். திருட்டுக்கொடுத்தவர்கள், திருடியவர்களிடமே குறி கேட்பதும், தட்சணை வாங்கிக்கொண்டு தாங்கள் ஒளித்துவைத்த இடத்தை அவர்களே 'மந்திரம் போட்டு’ காட்டிக் கொடுப்பதும் நிறைய நடக்கும். கிராமத்தில் எதுவும் காணாமல் போகலாம் என்று மக்கள் பயந்து வாழும் நிலை இருந்தது. ஒரு கட்டத்தில் ஊருக்கே காவலாக விளங்கும் அய்யனார் சிலை திருட்டுப்போனால் என்ன செய்வது? என்கிற கவலையில், தினமும் வீட்டுக்கு ஒருவர் காவல் காத்தனர். இந்தச் சம்பவமும் அதைத் தொடர்ந்து கல்லூரிக் காலங்களில் படித்த பெரியாரின் சிந்தனைகளும் என்னைப் பகுத்தறிவாளனாக மாற்றியது.

எனக்கு அன்வர், தஸ்கந்த், தஸ்தகீர், ஷாநவாஸ், பிஸ்மி, ரவி என ஏராளமான நண்பர்கள் உண்டு. இதில் ஷாநவாஸ் ஒவ்வொரு ரம்ஜானுக்கும் எனக்குப் புதுத் துணி எடுத்துத் தருவார். பிஸ்மி பல நேரங்களில் எனக்கு உணவு கொடுத்தவர். அண்ணன் ஸ்தானத்தில் இருப்பவர் ரவி. சிறு வயது நண்பர்கள் பலரையும் சந்தித்தபோதும், ஷாநவாஸையும் பிஸ்மியையும் மட்டும் இன்னும் சந்திக்க முடியவில்லை. ரவி அண்ணன் இன்றும் என்னுடன் இருக்கிறார்.

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

இயக்கப் பணிகளுக்காகத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றித் திரிந்தாலும், பால்யத்தின் மகிழ்ச்சியையும், நட்பின் ஆழத்தையும், பகுத்தறிவின் பாதையையும் எனக்குக் காட்டிய அரணையூரை எப்படி மறக்க முடியும்?''  

”அய்யனாரைக் காத்த அரணையூர் மக்கள்!”

-இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism