Published:Updated:

"பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை!”

"பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை!”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை!”
##~##

காலை 7 மணி. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள ஜெயராஜ் மீன் கடையில் ஏகக் கூட்டம். ''சாலை, ஊளி, சீலா, தெலா, விலைமீன்... மீன்... மீனேய்ய்!'' என்ற கணீர்க் குரல், கடைக்குள் ஒலிக்கிறது. கடைக்குள் எட்டிப் பார்த்தால், மூன்றரை அடி உயரமே இருக்கும் மாற்றுத் திறனாளி ஜெயராஜ், உற்சாகமாக மீன்களைத் துண்டுபோட்டு மசாலாத் தடவிக்கொண்டு இருக்கிறார்.  சுறுசுறு உழைப்பில் ஈர்க்கும் ஜெயராஜின் வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருக்கிறது சில பாடங்கள்.  

''பொறக்கும்போதே குள்ளமாத்தான் பொறந்தேன். அம்மா, அப்பா என்னைப் பற்றிக் கவலைப்படாம வளர்த்தாங்க. ஸ்கூல்ல நல்லாவே படிச்சேன். ஆனா, உடம்பு குச்சிக் குச்சியா இருந்ததால அடிக்கடி கீழ விழுந்து கை, கால் முறிஞ்சுடும். 30, 40 தடவை கட்டுப்போட்டு படிச்சேன். அதுக்கு மேல முடியலை. படிப்பை நிறுத்திட்டேன். அப்பா சின்னதா ஒரு மளிகைக் கடைவெச்சுத் தந்தார். காலையில மார்க்கெட் போய் காய்கறி வாங்கி, மூணு சக்கர வண்டியில ஏத்தி கடையில இறக்கி யாவாரம் பண்ணணும். கஷ்டமா இருந்தது. ஆனா, விடலை. தனியாளா போராடினதுல உடம்புல வலு கூடுச்சு. கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லாமத் திரிஞ்சேன். அத்தை பொண்ணு நட்சத்திரம் பெரிய மனசு பண்ணி என்னைக் கட்டிக்கிட்டா. எந்தப் பிரச்னையும் இல்லாம மூணு பிள்ளைங்க பொறந்துச்சு. என் மனைவி யோசனைப்படிதான் மீன் கடை ஆரம்பிச்சேன். காலையில விக்காத மீனை மதியம் எடுத்துட்டுப் போய் சுத்தம் செஞ்சு சாயந்தரம் 5 மணி ஆச்சுன்னா, தள்ளு வண்டியில வெச்சு சுடச்சுட மீன் பொரியல் போடுவேன். சுவையா கொடுக்கிறதால கூட்டம் கூடி கேட்டு வாங்கிச் சாப்பிடும். மீன் வியாபாரம் பண்ணியே வீடு கட்டிட்டேன். டாக்டருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா, முடியலை. என் பிள்ளைங்களையாவது அதுங்க ஆசைப்பட்ட மாதிரி படிக்கவைக்கணும். எனக்கு மத்தவங்க தயவுல வாழப் பிடிக்காது. ஊனமாப் பொறந்தா என்ன? சிலர் ரோட்டுலயும் பஸ் ஸ்டாண்ட்லயும் ஊனத்தைக் காமிச்சு பிச்சை எடுக்குறப்போ சங்கடமா இருக்கும். எங்களுக்கு ஊனம்ங்கிறது ஒரு பிரச்னைதான் இல்லைங்கலை. ஆனா, நல்லா இருக்கிறவங்களும் ஆயிரம் பிரச்னையோடத்தானே இருக்காங்க. எல்லாத்தையும் அடிச்சு தூக்கிப் போட்டுட்டுப் போகணும் சார்!'' உறுதியோடு சிரிக்கிறார் ஜெயராஜ்.

"பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை!”

-இ.கார்த்திகேயன்,
படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு