Published:Updated:

சிவமணி கலக்கிய சிவராத்திரி!

சிவமணி கலக்கிய சிவராத்திரி!

'சிவனுக்கு உகந்தது சிவராத்திரி’ என்பார்கள். அதுவும் சிவத் தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் சிவராத்திரித் திருவிழா, சிவ பக்தர்களுக்கு ரொம்பவே உகந்தது. இந்த ஆண்டும் திருவண்ணாமலை சிவராத்திரித் திருவிழா ஜெகஜ்ஜோதித் திருவிழாதான்!

சிவமணி கலக்கிய சிவராத்திரி!
##~##

அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற, உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் வாழும் அண்ணாமலையார் பக்தர்களும் கலந்துகொண்டதைப் பார்த்தபோது உலக மானுடத்தையே ஒன்றாகப் பார்த்தது போல ஓர் உணர்வு!

கோயில் முழுவதும் உப்புக் கற்களில் வண்ணம் கலந்து விதவிதமான சிவலிங்கம், ரமணர் என ஆன்மிக ஓவியங்களைத் தீட்டி இருந்தனர். மாலை 6 மணி அளவில் கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. இருள்கவ்வத் தொடங்கிய வேளையில், கோயில் வளாகத்தில் உள்ள கலை அரங்கில் தேவாரப் பாடலுடன் ஆரம்பமானது விழா.

சென்னையைச் சேர்ந்த நாட்டியக் குழு வினரின் பரதநாட்டியம்,  திருவண்ணாமலை ரத்தின செல்வி குழுவினரின் குழந்தைகளின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, திருவண்ணாமலை கலைச் செல்வி குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெற்றன. கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபாவின் பொம்மலாட்ட நிகழ்ச்சியும் இருந்தது.  பொம்மலாட்டம் என்றால் என்னவென்று தெரியாத இந்தத் தலைமுறையினருக்குப் பொம்ம லாட்டத்தின் வரலாற்றை அழகாக விளக்கியது ரொம்பவே சிறப்பு. பொம்ம லாட்டத்தில் சிவபெருமான் முனிவர் வேடத்தில் வந்து பிள்ளைக் கறி கேட்கும் சிறுத்தொண்ட நாயனாரின் கதையை அனைவருக்கும் புரியும்படி அற்புதமாக விளக்கினர்.

சிவமணி கலக்கிய சிவராத்திரி!

பொம்மலாட்டம் முடிந்ததும் நடிகர் சிங்கமுத்து மேடை ஏறினார். 'சிவபூஜையில் காமெடியா?’ என்று எல்லோருக்கும் குறுகுறுப்புக் கலந்த எதிர்பார்ப்பு. ஆனால், மனிதர் தேர்ந்த சொற்பொழிவாளரைப் போல பக்திச் சொற்பொழிவு நடத்தி எல்லோரையும் அசத்தினார். தொடர்ச்சியாக நடந்த நிகழ்ச்சிகள், கோயிலுக்குள் கூடி இருந்த பக்தர்களை கண நேரமும் இமைக்கவிடவில்லை. நிகழ்ச்சிகளின் உச்சமாக டிரம்ஸ் சிவமணியின் கச்சேரி. முதலில் விநாயகர் பாடல் பாடி வாசிக்க ஆரம்பித்த சிவமணியின் கச்சேரி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. மும்பையில் இருந்து வந்திருந்த பாடகி 'ஜனனி... ஜனனி’ என்று பாட ஆரம்பிக்க, அரங்கில் இருந்தவர்களும் சேர்ந்து பாட அரங்கம் முழுவதும் இசைத் தூறல்கள்.

சிவமணி கலக்கிய சிவராத்திரி!

நிகழ்ச்சியின் இறுதியில் தன் தாயை மேடை ஏற்றிய சிவமணி, அவருக்கு மாலை அணிவித்து கன்னத்தில் முத்தமிட்டது கூட ஒரு ஆன்மிகச் செயல்பாடுதான்.  மொத்தத்தில் சிவராத்திரி... இறை இரவு!

சிவமணி கலக்கிய சிவராத்திரி!

-கோ.செந்தில்குமார்,
படங்கள்: பா.கந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு