கஜுரஹோ தொடர்ச்சி...
படம் பார்த்துக் காதல் கொள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கஜுரஹோ கோயில்கள் கண்டறியப்பட்ட கால கட்டத்தில் அரியணையில் அமர்ந்திருந்தது பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா. கண்டிப்பான, கட்டுப் பெட்டியான அரசி. அவருடைய ஆட்சிக் காலத்தில் நாற்காலிகளின் கால்கள்கூட மறைக்கப்பட வேண்டும் என்று ஆணை இருந்தது (நிஜம்!). பெண்கள் 'பாரசூட்’ மாதிரி பெரிய பாவாடைகளை அணிந்தார்கள் (கிட்டே நெருங்க முடியாது!). ஆண்-பெண் எழுதிய புத்தகங்களை நூலகங்களில் பக்கத்துப் பக்கத்தில் ஒட்டியவாறு வைக்க அனுமதி கிடையாது. (ராபர்ட் ப்ரௌனிங் தம்பதிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. இருவரும் கவிஞர்கள்!)
இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் கஜுரஹோவை நேரில் பார்த்த வெள்ளைக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளலாம்.
நடுங்கிப்போனார்கள்! தகவல் பரவ, 'இந்தியர்கள் எக்கேடாவது கெட்டுப்போகட்டும். வெள்ளையர்கள் அந்தப் பக்கமே தலைகாட்டக் கூடாது’ என்று அரசு ஆணையிட்டது. ஆனால், நல்ல காலமாக கோயில் களை இடிக்கச் சொல்லவில்லை!
##~## |
கஜுரஹோவை உருவாக்கிய சண்டேள (ராஜபுத்திர) மன்னர்களின் அரசவையில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் ஆறு 'உபாதங்க’ளையும் (தேர்வு!) கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற கண்டிப்பான சம்பிரதாயம் இருந்தது. அதில் ஒன்று, காமக் கலை (காம வெறி என்று தப்பாகப் புரிந்துகொள்ள வேண்டாம்; காமசூத்திரக் கலை என்று எடுத்துக்கொள்க!). அதெல்லாம் சரி, 'கிறுக்குத்தனமான’ - பர்வெர்ஷன் என்று கருதப்படுகிற சிற்பங்கள் ஏன்? இது பற்றி பல ஆராய்ச்சி யாளர்கள் புத்தகங்கள் மூலம் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். 'காமசூத்திர’த்தில் வாத்ஸாயனர் இப்படிப்பட்ட செக்ஸைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்யாமல் இல்லை. மேலை நாடுகளில் ஓரல் செக்ஸ் குறித்து இன்று பயன்படுத்தப்படும் ஃபெல்லாஷியோ (fellatio) என்கிற வார்த்தைக்கு எப்போதோ - பண்டைய இந்தியர்கள் சம்ஸ்கிருதத்தில் 'ஒளபரிஷ்தஹா’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்!
செக்ஸில் தவிர்க்கப்பட வேண்டியது எதுவென்று எப்படித் தெரிந்துகொள்வது? சொன்னால்தானே புரியும்! வெளிப் பிராகாரங்களில், அடித் தளத்தில் இந்த வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஒதுக்கி, ஆண்-பெண் உடலுறவைக் கொண்டாடி முடித்து, பிறகு இந்த ஜீவாத்மா - சந்நிதிக்கு உள்ளே சென்று - பரமாத்மாவுடன் கலக்க வேண்டும்! கஜுரஹோ சிற்பங்கள் தங்கள் நகைச்சுவை உணர்வையும் காட்ட மறக்கவில்லை. அதோ... ஒரு யானை, தரையில் கழுத்து வரை புதையுண்டு இருக்கும் குற்றவாளியை நசுக்க, காலைத் தூக்குகிறது. சற்றுத் தொலைவில் காதலனும் காதலியும் உடலுறவில் ஈடுபட்டு மெய்சிலிர்க்கிறார்கள். அதைப் பார்க்கும் யானையின் முகத்தில் புன்னகை... தூக்கிய காலால் அவனை இடறாமல்... அப்படியே கால் அந்தரத்தில் நிற்கிறது. 'ஐயோ! அந்த ஜோடி தொடர்ந்து உறவில் ஈடுபடக்கூடாதா..?!’ என்று குற்றவாளி மரண பயத்தோடு நினைத்திருப்பானோ... என்னதொரு ப்ளாக் ஹ்யூமர்!
இப்படி ஒவ்வொரு சிற்பமாக நாம் தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். பார்க்க வேண்டிய சிற்பங்களைப் பற்றிச் சும்மா எழுதிக்கொண்டு... போதுமே வாசகர்களே... என்ன நான் சொல்வது?!
(முற்றும்)
மு.அழகரசன், சேலம்.

'பொண்ணு கிளி மாதிரி இருக்கா. விட்டா, யாராவது கொத்திக்கிட்டுப் போயிடுவாங்க’னு ஒரு சொலவடை இருக்கு. கிளிதானே பழத்தைக் கொத்தும்... கிளியையே கொத்துவாங்களா?
நல்லாக் கேட்டீங்க! - 'கிளி மாதிரி இருக்கா’ என்று சொல்லணும். அல்லது 'கொத்திக்கிட்டுப் போயிடுவாங்க’னு சொல்லணும். ஏன் சேர்த்துச் சொல்றாங்க? ஏன்னா, கிளியும் அவளே, பழமும் அவளே!
புஷ்பராஜ், கடலூர்.
காமெடி - ஆக்ஷன்... நடிப்பதற்கு எது கஷ்டம்?
ஆக்ஷன் காட்சிகள் என்றால், முக்கால்வாசி 'ஆக்ஷன்’ பண்ணுபவர்கள் ஸ்டன்ட் வீரர்கள் தான். மாடியில் இருந்து கீழே விழுபவர் 'டூப்’தான். உதட்டில் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்து நிற்பவர்தான் ஹீரோ. காமெடியில் அத்தனையும் 'க்ளோசப்’. டெலிவரி, டைமிங், பாடி லாங்குவேஜ் என்று அத்தனை நுணுக்கங்களையும் காமெடியன் தான் செய்ய வேண்டும். ஆகவே, அதுவே கஷ்டமான விஷயம்!
எஸ்.ராஜேஸ்வரி, வைத்தீஸ்வரன்கோவில்.
உண்மை எப்போது உறங்குகிறது?
அதைக் குறிப்பாகச் சொல்ல முடியாது! சில சமயம் உண்மை குட்டித் தூக்கம் போடும். சில சமயம் 10 மணி நேரம் தூங்கும். சில சமயம் 'கோமா’வில் இருப்பதும் உண்டு. செத்துப்போகவில்லை என்பதுதான் நம்பிக்கைக்கு உரிய விஷயம்!
வண்ணை கணேசன், சென்னை.
ஒருவன் தன்னை இந்தியன் என்று எப்போது கூறிக்கொள்ள வேண்டும்... தமிழன் என்று எப்போது கூறிக்கொள்ள வேண்டும்?
'லப்’ என்றால் இந்தியன். 'டப்’ என்றால் தமிழன். நான் குறிப்பிடுவது இதயத் துடிப்பை!
எஸ்.சண்முகசுந்தரன், வைத்தீஸ்வரன்கோவில்.
மதன் சார்... உமக்குத் துறவியாகும் ஆசை உண்டா?
துறவியாக ஆசைப்பட்டால்... நான் துறவி அல்ல!