Published:Updated:

திரையரங்கமும் சமத்துவபுரம்தான் !

ந.வினோத்குமார் படங்கள்: என்.விவேக்

திரையரங்கமும் சமத்துவபுரம்தான் !

ந.வினோத்குமார் படங்கள்: என்.விவேக்

Published:Updated:
##~##

''கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்கிற படங்களைப் பார்க்கலைனா நாம எல்லாம் வாழத் தகுதியே இல்லாதவங்கனு சொல்ற நிலைமை உருவாகிடுச்சு!'' - இது வெற்றிமாறனின் வருத்தம். ''குடும்பமே ஒருவரைத் திருநங்கையாக மாற்ற முயற்சி செய்யுதுனு சொல்றது தவறான செய்தி!'' - இது திருநங்கை ப்ரியாபாபுவின் கோபம்.

''ஏன்யா... உன் ஊரு படங்களை மட்டும்தான் வாயப்பொளந்து பாக்கணுமா? எந்த வகையில் நாம இரான் படங்களுக்குக் குறைந்துபோயிட்டோம். என் ஊரு படங்களை இனி நீயும் வாயப்பொளந்து பாருய்யா!'' - இது பாலுமகேந்திராவின் ஆதங்கத்துடன் கூடிய கோபம். ''லாஜிக் என்பது சினிமாவில் கெட்ட வார்த்தை!'' - இது பாஸ்கர்சக்தியின் காமெடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தமிழின் முதல் டிஜிட்டல் படம்னு 'மும்பை எக்ஸ்பிரஸ்’-ஐச் சொல்றாங்க,  அது தவறு. அந்தப் படம் மூன்றாவது படம். முதல் டிஜிட்டல் படம், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'முத்தம்’!'' - இது 'நிழல்’ திருநாவுக்கரசு தந்த தகவல். ''விடுதலைப் புலிகள் சரியானவர்கள்னு காட்டாட்டியும் பரவாயில்லை. அவர்கள் தவறானவர்கள் இல்லைனு காட்டுறதுக்காகவாவது ஈழம் சார்ந்த படங்களை எடுக்க வேண்டாமா?'' - இது இயக்குநர் மணிவண்ணனின் ஏக்கம்.

இந்தக் கலகல கதம்பம், லயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக் கலைகள் துறை '21-ம் நூற்றாண்டில் தமிழ்த் திரையுலகின் போக்குகளும் புதிய முயற்சிகளும்’ என்ற தலைப்பில் நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் கேட்டவை. இனி கருத்தரங்கில் இருந்து...

திரையரங்கமும் சமத்துவபுரம்தான் !

பேராசிரியர் பர்வீன் சுல்தானா எடுத்துக்கொண்ட தலைப்பு, 'அதிகார வன்முறையும் கௌரவக் கொலையும்’. 'சுப்ரமணியபுரம்’ படத்தில் மறைமுகமாக இழையோடிய, 'அடியாட்கள் எப்படி உருவாகிறார்கள்?’ என்னும் தளத்தில் அந்தப் படத்தை விமர்சனம் செய்தது சிறப்பு. அடுத்து பேராசிரியர் திருவாசகம், 'சொல்ல மறுக்கும் கதைகள்’ எனும் தலைப்பில் தமிழ் சினிமாவில் தலித்துகள் எப்படி சித்திரிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் விளக்கினார். அவர் சுட்டிக்காட்டிய உதாரணங்களுக்கு அரங்கத்தில் விசில் பறந்தது.

முதல் அமர்வின் முடிவில் நிறைவுரை ஆற்றிய இயக்குநர் வெற்றிமாறன், ''இனி கார்ப்பரேட்களின் கைகளில் தமிழ் சினிமா சிக்கிக் கொள்ளப்போகிறது. அவர்கள் அளவுக்கு நம் தயாரிப்பாளர்களால் முதலீடு செய்ய முடியாது. முதலீடு செய்வது அவர்கள் என்பதால், இனி அவர்கள் சொல்வதுபோல்தான் படம் எடுக்க முடியும். நம் அடையாளங்களைத் தெரிந்தே தொலைக்கப்போகிறோம்!'' என்று சொன்னவரின் குரலில் வருத்தம் வழிந்தோடியது.

அடுத்துப் பேசிய பாலுமகேந்திரா, ''உங்கள் படங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுங்கள். அதற்கு மட்டும் செலவு செய்யுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் சினிமாவுக்கு பட்ஜெட் குறையும். குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் படம் எடுக்க முன் வந்தால்தான் நீங்கள் நினைக்கிற கதையை எடுக்க முடியும். இன்றைக்கு உலக சினிமா என்று சொல்லப்படுவது எல்லாம், அந்தந்த நாடுகளின் உள்ளூர் படங்கள்தான். அவை எல்லாம் குறைந்த பட்ஜெட்டில்தான் எடுக்கப்படுகின்றன'' என்றவர், ''வெற்றி உனக்கும்தான் சொல்றேன், பட்ஜெட்டைக் குறைச்சுக்கோ!'' என்று தன் மாணவனுக்கும் அறிவுரை கூறினார். மேடைக்குக் கீழே அமர்ந்து இருந்த வெற்றிமாறன், மைக்கை வாங்கி, ''ஐ சைண்ட் மை சோல் டு தி டெவில் சார் (நான் என் ஆன்மாவை சாத்தான்களிடத்தில் விற்றுவிட்டேன்)'' என்று வருத்தத்துடன் உண்மையைச் சொன்னார்.

இரண்டாம் அமர்வில், 'யார் இந்த அந்நியன்?’, 'தமிழ்த் திரைப்படங்களின் பெயர் சூட்டல்: போக்கும் புரிதலும்’, 'தமிழ்த் திரைப்படங்களில் சமகால இலக்கியவாதிகளின் பங்களிப்பு’, 'கதைத் தேர்வில் இயக்குநர் பாரதிராஜா’, 'தமிழ்த் திரைப்படங்களில் ஈழதேசம்’, 'குடிகாரத் தமிழ் சினிமா’ போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றை எழுத்தாளர் பாஸ்கர்சக்தியும், 'நிழல்’ பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசும் மதிப்பீடு செய்ய வந்தார்கள்.

திரையரங்கமும் சமத்துவபுரம்தான் !

முதலில் பாஸ்கர் சக்தி. ''உலகப் போரின்போது சென்னைக்கு வந்த 'எம்டன்’ என்ற போர்க் கப்பல் மக்களை அதிர்வுக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஓர் அதிகார அதிர்வை உண்டாக்கும் தந்தை. அவருடைய மகன். இந்த இருவருக்குமான சம்பவங்கள்தான் 'எம்டன் மகன்’. அப்போதுதான், 'தமிழில் பெயர் சூட்டினால் வரிவிலக்கு’ என்ற திட்டம் வந்தது. 'தலைப்பை மாற்றலாம்’ என்ற தயாரிப்பாளர், அவரே 'எம் மகன்’ என்ற தலைப்பையும் கொடுத்தார். ஆனால், அப்படியும் வைக்க முடியாது. காரணம், தலைப்பே இலக்கணப் பிழை. அதனால் பழைய தலைப்புடன் வரிவிலக்குக் கேட்டபோது, 'இந்தப் பெயர் தமிழ் அகராதியில் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். இது தென் தமிழகத்தில் விளிக்கப்படுகிற ஒரு வட்டாரச் சொல். பொதுவாக வட்டாரச் சொற்கள் தமிழ் அகராதியில் இடம்பிடிப்பது இல்லை. இறுதியில் 'எம்டன்’ என்கிற பெயர் தமிழ் அகராதியில் இல்லை என்பதால் வரிவிலக்கு மறுக்கப்பட்டது. 'எம் மகன்’ என்ற தலைப்பிலேயே படம் வெளியானது'' என்று சூழலை விளக்கியவர் ''என்னைப் பொறுத்தவரை அரைகுறை புரிதலுடன் ஈழம்பற்றி படம் எடுப்பதைவிட, எடுக்காமல் இருப்பதே நல்லது!'' என்றார்.

''1965-ல் லயோலாவில்தான் தமிழகத்தில் முதல்முதலில் ஊடகத் துறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதே கல்லூரியில்தான் ஜான் ஆப்ரகாம், 'அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தை எடுத்தார். இங்கே நிறையப் பேர் கட்டுரை வாசித்தார்கள். எல்லாம் சரிதான். பெருமுதலாளிகளால், சிறிய அளவில் பணம்போட்டுப் படம் எடுத்த பலருடைய படங்கள் வெளி வராமல் முடங்கிக்கிடக்கின்றன. அதைப் பற்றி யாராவது கட்டுரை சமர்ப்பிப்பார்கள் என்று நினைத்து ஏமாந்துபோனேன். வடிவேலுவை ஒரு காமெடி நடிகராகத் தெரியும். ஆனால், அவருடைய 'மாடுலேஷனை’ மட்டும் ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு வந்து தமிழ் கற்றுக்கொண்டு, ஆய்வையும் செய்து முடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கர். அவர் மண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நடிகர். ஆனால், அந்தப் பெருமை அவருக்கு முன்பே காளி என்.ரத்தினம் என்ற நடிகருக்கு உண்டு.

அப்போது எல்லாம் சினிமா என்பதையோ, சினிமா தியேட்டர்களையோ மேல் சாதியினர் மதித்ததே இல்லை. சினிமா என்பது கீழ்ச் சாதிக்காரர்களுடையதாக இருந்தது. அவர்கள் இதை மதிக்காமல் போனதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'எல்லா சாதிக்காரனும் ஒன்னா ஒக்காந்து பாக்குறதா?’ என்பதுதான். கோயில், மருத்துவமனை ஆகியவற்றுக்கு அடுத்து அனைத்து சாதிக்காரர்களையும் ஒன்றிணைத்தது திரையரங்கம் என்றால், அது மிகையில்லை!!'' என்றார் 'நிழல்’ திருநாவுக்கரசு.

இறுதியாக மேடை ஏறிய இயக்குநர் மணிவண்ணன், ''தமிழ்ச் சமூகமே முகம் பார்த்து வளர்ந்த சமூகம்தான். அப்படி முகங்களைப் பார்ப்பதில் இருந்து விடுதலையைப் பெற்றுத் தந்தது சினிமாதான். அதனால்தான் மதுரையில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை ஹீரோவாக்கினார் பாரதிராஜா. உலக சினிமாவைப் பற்றி இன்று நிறையப் பேர் பேசுகிறார்கள். அதில் இருந்து திருடி படம் எடுக்கிறார்கள். நாங்கள் இருந்த காலத்தில் எந்த மண்ணும் இல்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு இங்கிலீஷ§ம் தெரியாது. அதனால எனக்குத் திருடவும் தெரியாமப் போச்சு. அப்புறம், தமிழ் சினிமாவுல இலக்கியவாதிகளோட பங்கு பற்றி சிலர் பேசினாங்க. மிஷ்கின் படத்துல சாருநிவேதிதா பட்டப் பாட்டை பார்க்கணுமே. ஓர் இலக்கியவாதிக்கு இப்படி ஒரு சோதனை வர வேண்டாம்.

திரையரங்கமும் சமத்துவபுரம்தான் !

சமீபத்தில் படம் ஒண்ணு பார்த்தேன். ஒரு ஸ்கூல் பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணுது. அவனும் லவ் பண்றான். இதுக்கு இடையில ரெண்டு டூயட் வேற வந்துபோகுது. அப்புறம் இன்டர்வெல் சமயத்துல அந்தப் பொண்ணு வயசுக்கு வர்றதா காமிக்கிறானுவ. உங்களுக்கு எல்லாம் எப்ப லவ் வரும்னே தெரியாதா? இதை எல்லாம் இளைய தலைமுறை நீங்க வந்துதான் மாத்தணும். ஏன் உனக்கு அந்தப் பொறுப்பில்லையானு கேட்கலாம்... ஐ யாம் எ ரிட்டையர்டு மேன்!'' என்று கொஞ்சம் கோபம் கொஞ்சம் கலகலப்புடன் அரங்கத்தின் மனநிலையை மாற்றி அமைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் ஞானபாரதி இயக்கிய 'மறைந்துபோன படச் சுருளும் ஆல்ஃப்ரடோவின் வாழ்வும்!’ என்ற இரண்டு நிமிட குறும்படம் திரையிடப்பட்டது.

தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் 80 ஆண்டு கால வரலாறு உடைய, தமிழ் சினிமாவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம் பார்வைக்குவைத்தது இந்தக் கருத்தரங்கு. 'சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க’ என்கிற வழக்கமான குரலுக்கு மாற்றாக, 'சினிமா என்பது சினிமா மட்டுமே அல்ல’ என்கிற புரிதலைப் பார்வையாளர்களுக்கு அளித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism