Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:

  தோத்தவன்டா !

பெயர் செந்தில் குமார். 'ஆரூர் மூனா செந்தில்’ என்ற பெயரில் 2009 முதல் 'தோத்தவன்டா’ என்ற வலைப் பூ எழுதிவருகிறார். தற்போது அம்பத்தூர்வாசி. தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர், ரயில்வே தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணி ஆணைக்காகக் காத்திருக்கிறார்.

வலையோசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

www.amsenthil.com  என்ற இவருடைய வலைப்பூ திரைப்பட விமர்சனங்கள், தொடர் கட்டுரைகள் என பல்சுவை வலைப்பூ. அவருடைய வலைப்பூவில் இருந்து...

நான் அடிமை இல்லை!

வலையோசை

 கம்ப்யூட்டரில் வைரஸ் பிராப்ளம். சில நாட்களாக வலைப்பூ பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால், கடந்த ஆறு மாதங்களாகத் தீவிரமாகப் பதிவு எழுதி வந்தேன். அதன் பாதிப்பு அதனைவிட்டு சில நாட்கள் விலகி இருந்தால்தான் தெரிகிறது. ஒருநாள் எழுதாவிட்டால்கூட ஏதோ ஒன்றை இழந்த அளவுக்கு மனம் பாதிப்படைகிறது. தூங்கும்போதும் பதிவு, ஒட்டு, பின்னூட்டம், சர்ச்சை, பதிவர் சந்திப்பு என வலைப்பூ சம்பந்தப்பட்ட கனவுகளே வருகின்றன. இனிமேல் இணையத்தில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். முன்பு காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இணையத்தில் இருப்பேன். சாப்பிடுவதும் கம்ப்யூட்டர் முன்புதான். இந்த ஐந்து நாட்களாகத் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறேன். மாற்றம் தெரிகிறது. புதிதாக வாங்கி பல நாட்களாகப் படிக்காமல் வைத்து இருந்த புத்தகங்களை இந்த ஐந்து நாட்களுக்குள் படித்து முடித்துவிட்டேன். இணையம் இல்லா உலகம் வேண்டும்!

 மக்கள் நாயகன் ராமராஜன்!

வலையோசை
##~##

ராமராஜன், மிகச் சில வருடங்களே தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அந்த உச்சத்தைவைத்து ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர். என் 10, 15 வயது காலத்தில் திருவாரூர் போன்ற சிறு நகரங்களில் ரசிகர் மன்றங்கள் திறப்பது ரசிகர்கள் இடையே மிகப் பிரபலமான விஷயம். 'எங்க ஊரு பாட்டுக்காரன்’ வந்தவுடனேயே எங்கள் தெரு அண்ணன்கள் எல்லாம் ராமராஜனுக்கு ரசிகர் மன்றம் திறக்க முடிவெடுத்தனர். எனக்கும் ராமராஜனைப் பிடிக்கும் என்பதால் அந்த வயதிலேயே மன்றத்தில் சேர்ந்தேன். பேனர் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற வேலைகளைச் செய்ததால் எனக்குத் துணைச் செயலாளர் பதவியும் கொடுத்தார்கள். 'எங்க ஊரு பாட்டுக்காரன்’ ராமராஜன் ரசிகர் மன்ற துணைச் செயலாளர் - எப்படியிருக்கு என் பதவியின் பெயர்?

அதன் பிறகு வந்த ஒவ்வொரு படங்களும் எங்களுக்குத் திருவிழாதான். ராமராஜனுக்குப் படங்கள் தோல்வியடையத் தொடங்கி அத்துடன் ராமராஜன் காலம் முடிவடைந்தாலும் எனக்கு வெகு நாட்களுக்கு அவருடைய படங்கள் மற்றும் பாடல்கள் நினைவில் இருந்தன. இப்போதும் ராமராஜன் படங்கள் டி.வி-யில் போட்டால் படம் முடியும் வரை வேறு சேனல்கள் மாற்றாமல் பார்ப்பது என் வழக்கம். 'காலம் மாறிவிட்டது அஜீத், விஜய், தனுஷ், சிம்பு வந்துவிட்டனர். ஆனால், நீங்கள் இன்னும் ராமராஜனின் ரசிகராகவே இருக்கீங்க. ராமராஜன் ரசிகர்னு சொன்னால் உங்களை எல்லாரும் ஊர்நாட்டான்னு கிண்டலடிப்பாங்க’ என்பாள் மனைவி. ஆனால், அந்தப் பால்ய வயதில் இருந்து பதின் வயதுக்குட்பட்ட காலங்களில் மனதைக் கொள்ளையடித்த ராமராஜன் மீதான ரசிப்புத் தன்மையை என்னால் மாற்ற முடியவில்லையே!

 ஸ்பானியப் பெண்ணுடன் 15 நாட்கள்!

வலையோசை

சத்தியமாப் பொய் சொல்லலை. இது கில்மாவும் இல்ல. 2006-ல் நான் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சென்னை மண்டல அலுவலக நிர்வாக அதிகாரி. சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்காக ஒரு ஸ்பெயின் கம்பெனியுடன் ஜாயின்ட் வென்ச்சர் போட்டோம். அந்த ஸ்பெயின் நிறுவனத்தின் திட்டப் பிரிவு பொறுப்பாளர் இளம் பெண். புராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிக்க அவர் சென்னை வந்தார். 'விமான நிலையத்தில் வரவேற்பது தொடங்கி, ரிப்போர்ட் தயாரித்து அவரைத் திரும்ப அனுப்பி வைப்பது வரை நான் உடன் இருக்க வேண்டும்’ என்பது எனக்கு இடப்பட்ட ஆணை. அந்த அம்மணியுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்வது முதல், அந்த அம்மணி நன்றாக இருந்ததால் பிக்-அப் செய்து ஸ்பெயினில் செட்டிலாகிவிட வேண்டும் என்பது வரை கற்பனை பறந்தது. அந்த நாளும் வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தேன். சில மணித் துளிகளுக்குப் பிறகு அவர் வந்தார். அடடா என்னா கலரு... என்னா ஃபிகரு! பார்த்ததும் மெய்மறந்து நின்றேன்.

ஆனால், அதன் பிறகு நடந்தது எல்லாம் டெரர்தான். வந்து காருக்குள் நுழைந்ததும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார். அப்போது அவள் வருவதற்கு முதல்நாள் இரவு, ஓர் அழகான வெள்ளைக்காரப் பெண் புடவை கட்டி, பொட்டிட்டு, பூச்சூடி வந்து என்னிடம், 'அத்தான் காபி சாப்பிடுங்க’ என்று சொல்வதுபோல் வந்த கனவு கலைந்தது. இரண்டாவது நாள் காலையில் அவளை அழைக்க அவள் தங்கி இருந்த அறைக்குச் சென்றேன். வின்டேஜ் கட்டிங் அடித்துக்கொண்டு இருந்தாள். மிச்சம்

இருந்த நம்பிக்கையும் கரைந்தது. நமக்கெல்லாம் நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமத்தில் இருந்து 'மாமா இதுதான் அண்ணா சமாதியா?’ என்று வியக்கும் பெண்ணே சிறந்தது என்று முடிவுசெய்தேன். ஒருவழியாக புராஜெக்ட் ரிப்போர்ட் தயாரானது. அவளை வழியனுப்ப ஏர்ப்போர்ட் சென்றபோது, 'தாங்க்யூ ஃபார் எவ்ரிதிங்’ என்று சொல்லி ஓர் அழுத்தமான முத்தம் கொடுத்து டாட்டா காட்டினாள். என்னென்னமோ எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்குக் கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஓர் உதட்டு முத்தம்தான். அன்று இரவு என் கனவில் அதே பெண். புடவை கட்டி, பொட்டிட்டுப் பூச்சூடி வந்து என்னிடம் கேட்டாள் 'மச்சி நெருப்பு இருக்கா’?

 'நண்பன்’ படத்தில் நடந்த தில்லுமுல்லு!

வலையோசை

எல்லாருக்கும் வணக்கமுங்க. எல்லாரும் என்னை மன்னிக்கணும். நான் நேர்மையாத்தான் செய்யணும்னு நெனைச்சேன். நடந்தது என்னன்னா எங்க ஏரியாவுல நேத்து 'நண்பன்’ படம் அம்பத்தூர், ஆவடி, பாடி எங்கேயும் வெளியாகலை. காலையில 7 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி 'ராக்கி’ வந்தேன். அங்கேயும் படம் இல்லை. அடுத்ததா 'முருகன்’ வந்தேன். அங்கேயும் இல்லை. அப்புறம் கொளத்தூர் கங்கா. அங்கேயும் டிக்கெட் கிடைக்கலை. பொறுமை இழக்க ஆரம்பிச்சேன். கோயம்பேடு ரோகிணியில ஹவுஸ்ஃபுல். கொலவெறியோட வீட்டுக்கு வந்தேன். படம்

பார்க்காமலேயே விமர்சனம் எழுதுறதுனு முடிவு பண்ணினேன். 'த்ரீ இடியட்ஸ்’ஐ  மனசுல ஓட்டிக்கிட்டு யூ டியூப்ல டிரெய்லர் டவுன்லோட் பண்ணி விவரங்கள் எடுத்துக்கிட்டேன். த்ரீ இடியட்ஸை அப்படியே தமிழ்ப் பெயர்களுடன் விமர்சனம் எழுதினேன். மதியம் மோகன்குமார் அண்ணன் போன் செய்து 'உன் விமர்சனத்தை யாரோ காப்பியடிச்சுப் போட்டிருக்காங்க’ன்னார். 'நானே பொய்யா விமர்சனம் போட்டா’ அதையும் ஒரு நாதாரி காப்பியடிச்சிருக்கு’னு நினைச்சுக்கிட்டேன். இப்ப உண்மையிலேயே 'நண்பன்’ படத்துக்குப் போறேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism