Published:Updated:

என் ஊர் !

இது புதிய பூம்புகார்பூ.கொ.சரவணன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

என் ஊர் !

இது புதிய பூம்புகார்பூ.கொ.சரவணன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

பர்வீன் சுல்தானா

##~##

தமிழ்ப் பேராசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா, தான் பிறந்து வளர்ந்த மீர்சாகிப்பேட்டை பற்றிய நினைவுகளை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'ராயப்பேட்டைக்கும் ஐஸ் ஹவுஸுக்கும் இடையில் 10 தெருக்களில் அடங்கிவிடும் பகுதிதான் மீர்சாகிப்பேட்டை. இங்கு வாழ்ந்த 'மீர்சாகிப்’ என்னும் பெரியவரின் நினைவாக இந்தப் பகுதிக்கு இந்தப் பெயர் வந்தது. நகரின் நடுவே இருந்தாலும் தன் சுயத்தை இழக்காமல் இருக்கும் பகுதி என்பதால் இதை ஒரு நகரக் கிராமம் என்றே சொல்லலாம். இரவு 1 மணிக்குக்கூட பர்தா அணிந்தபடி பெண்கள் கெட்டிலில் டீ வாங்க தெருவில் சாதாரணமாக நடந்து போவதை இன்னமும் நீங்கள் பார்க்கலாம். அதேபோல் பொங்கல், தீபாவளி, மொஹரம், ரம்ஜான் என எந்தப் பண்டிகையாக இருந்தாலும் தெருவே விழாக்கோலம் பூண்டுவிடும்.

இந்தத் தெரு மக்கள் காலை உணவை பெரும்பாலும் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். தெருஓரத்தில் ஏழைப் பெண்கள் சுடும் இட்லி, ஆப்பம்தான் இன்றுவரை இவர்களுடைய காலை உணவு. அதே பெண்கள் மாலையில் சுடச் சுட 50 காசுக்கு இரண்டு போண்டா விற்பது அன்றாட நிகழ்வு. மற்றப் பகுதிகளைப் போல் சிறுதொழில்கள் நசுக்கப்படாதது என் பகுதியின் இன்னும் ஒரு சிறப்பு. இன்னமும் காய்கறி, மீன், தேங்காய், பழம், பூ விற்கும் பெண்களை இங்கு பார்க்கலாம். மீன் விற்கும் பெண்கள் லாகவமாக அரிவாள் வீசுவதைப் புதிதாகப் பார்ப்பவர்கள் மலைத்துப்போவார்கள். பெற்றோரும் முன்னோரும் செய்த தொழில்களைக் கைவிடாமல் இளம் தலைமுறையினர் தொடர்வதை இங்கு நீங்கள் பார்க்கலாம். இது வீழ்ச்சி அல்ல. அவர்களுடைய வாழ்வு செம்மையாகவே உள்ளது. சொந்த வீடுகளில்தான் அவர்கள் வசிக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில் படித்தாலும் மாலை நேரங்களில் பெற்றோர் நடத்தும் கடையின் கல்லாப் பெட்டியில் அமர்ந்து வியாபாரத்தைக் கவனிக்கிற கிராமச் சூழல் சென்னையில் இங்கு மட்டுமே எஞ்சி உள்ளது.

என் ஊர் !

மூன்று மசூதிகள், பல்வேறு கோயில்கள், பிரசன்டேஷன் சர்ச் என, மூன்று மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் இங்கு உண்டு. ஆனால், மக்களிடையே ஒரு சின்ன சச்சரவுகூட ஏற்பட்டது இல்லை. மதங்களைக் கடந்த மனிதத்தால் இந்தத் தெருக்கள் பிணைக்கப்பட்டு உள்ளன. இங்கே உள்ள 10 தெருக்களில் ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு ஒண்டுக் குடித்தனங்கள் உண்டு. இந்தத் தெருவில் பல வருடம் பழக்கப்பட்ட முகங்களைக் காணலாம். 'பதி ஏழு அறியா பழங்குடி’ எனச் சங்க காலத்தில் பூம்புகாரைக் குறித்தார்கள். அதாவது அந்த ஊர் மக்கள் அந்த இடத்தைவிட்டு இடம்பெயர மாட்டார்கள் என அர்த்தம். என் பகுதியும் அப்படித்தான். அதேபோல் இங்கு இன்னமும் ஆடுகளையும் கோழிகளையும் மொத்தமாக வளர்ப்பது சிறப்பு.

என் ஊர் !
என் ஊர் !

இங்கே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி மறக்க முடியாதது. முழுக்க முழுக்க வீட்டில் உருது மட்டுமே பேசிக்கொண்டு இருந்த என்னைத் தமிழ் மீது காதல் கொள்ளவைத்தது இந்தப் பள்ளிதான். விசாரிப்புகள் ஓய்ந்துபோன இன்றைய நகரச் சூழலில் இந்தத் தெரு மக்கள் மட்டும் இன்னமும் ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக்கொள்வார்கள். ரம்ஜான் காலத்தில் இரண்டு பெரியவர்கள் அதிகாலை ஒன்றரை மணிக்கு சைக்கிளில் கவாலி மற்றும் கஜல் பாடல்களைப் பாடியபடி மக்களை நோன்பு நோற்க  எழுப்பிவிட்டபடி செல்வார்கள். தங்கள் பிள்ளைகளின் நோய் நீங்க எல்லா மதத்தினரும் மசூதி வாசலுக்கு வருகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கு மனமார்ந்த பிரார்த்தனையோடு மக்கள் முகத்தில் ஊதுவார்கள். ஊசிக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கும் அக்பர் ஹுசைன் எனும் மருத்துவ மாண்பாளர் இங்குதான் உள்ளார். தீரமிகு கவிதைகள் எழுதிய இன்குலாப், தமிழ் அறிஞர் கா.மு.ஷெரீஃப் ஆகியோர் இந்தப் பகுதியில் வசித்தவர்கள். எங்கள் தெரு மக்களுக்குக் கதவடைத்து சமைக்கிற பழக்கம் இல்லை. விழாக் காலங்களில் பக்கத்துக்கு வீட்டுக்கும் சேர்த்தே சமைப்பார்கள். இன்னமும் கைவண்டியில் உப்பும் புளியும் விற்கும் வியாபாரிகளை இங்கு பார்க்கலாம். சென்னையில் வாசனை உள்ள தார் ரோடு உண்டு என்றால் அது எங்கள் மீர்சாகிப்பேட்டை ரோடுதான். நெய்தல் நிலத்தின் பண்பை அப்படியே தாங்கி நிற்கும் பகுதி அல்லவா இது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism