Published:Updated:

மான்களும் நாங்களும் !

எஸ்.ஷக்தி படங்கள்: வி.ராஜேஷ்

மான்களும் நாங்களும் !

எஸ்.ஷக்தி படங்கள்: வி.ராஜேஷ்

Published:Updated:
##~##

அவிநாசி அருகே இருக்கும் கோதபாளையத்தில் ஓர் அதிசயம். அதிகாலையிலும் அந்தி மாலையிலும் இங்கு ஆடு மாடுகள் சாலையைக் கடப்பதுபோல், புள்ளிமான்கள் பாய்ந்து செல்கின்றன. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டு இருக்கின்றன. நீண்ட கொம்பு உடைய மான்கள் தங்களுக்குள் ஜாலியாகச் சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றன. இவ்வளவுக்கும் இது ஒன்றும் வனமும் அல்ல. பிறகு இங்கு நூற்றுக்கணக்கான மான்கள் சுற்றுவது எப்படி?

காரணம் குருசாமி, பாலசுந்தரம் என்கிற இருவர். இனி அவர்களே பேசட்டும். ''பொன்னூத்துமலையில இருந்து உற்பத்தி ஆகி வர்ற பெரும்பள்ளம் காட்டாறு எங்க கிராமத்தைக் கடந்துதானுங்க நொய்யல்ல போய் கலக்கும். 15 வருஷத்துக்கு முன்னாடி இந்தக் காட்டாறு தடம் வழியா ஒரு ஜோடி மானுங்க இங்க வந்து, ஆடு மாடுங்ககூட மேய்ஞ்சுதுங்க. நாங்க ரெண்டு பேரும் அந்த மான்களை நாய்கள் கடிச்சுப்போடாமப் பாதுகாப்பா ஒரு பகுதிக்குள்ளேயே இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம். இப்படியே வருஷங்கள் ஓட...  இனவிருத்தியாகி அம்பது, அறுபது மானுங்கனு ஆகிப்போச்சு. ஒருகட்டத்துல கூட்டம் பெருகினதாலே உணவு, தண்ணி தட்டுப்பாடு வர ஆரம்பிச்சுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மான்களும் நாங்களும் !
மான்களும் நாங்களும் !

ஒரே ராத்திரியில மொத்த தோட்டப் பயிரையும் சாப்பிட்டு முடிச்சுப்போட்டு வெளுக்குறதுக்குள்ளே புதருக்குள்ளே போயி பதுங்கிக்குமுங்க. கஷ்டப்பட்டு விதைச்ச வெள்ளாம வூடு வந்து சேரலேனா எந்த மனுஷனுக்குத்தான் ஆத்திரம் வராம இருக்கும்? ஆனாலும் என்ன பண்றதுங்ணா, நம்மூரை நம்பி வந்து குடும்பம் நடத்துற இந்த அஞ்சறிவு சீவன்களை அடிச்சு முடுக்கிவிட முடியுமுங்ளா? அதனால ஆத்திரப்பட்ட வெவசாயிங்களை எல்லாம் அடிக்கடி சாந்தப்படுத்துவோமுங்க.

இப்படியே 15 வருஷம் ஓடிப்போயிடுச்சு. ஒரு நாள் ராத்திரியில திருப்பூர் பக்கமிருந்து வந்த மூணு பேரு ஒரு மானைச் சுட்டுப்போட்டாங்க. துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடியாந்த நாங்க அவனுங்கள அமுக்கிப் பிடிச்சு, வனத் துறைகிட்ட ஒப்படைச்சோம். அதுக்கப்புறமாதான் வனத் துறையோட கவனம் இங்க திரும்ப ஆரம்பிச்சுதுங்க. தோராயமா இங்க 350 மானுங்க இருக்குமுங்க. தண்ணி கிடைக்காம ராத்திரியில இதுங்க அல்லாடுறதப் பார்த்துப்போட்டு நண்பர் வேலுச்சாமி உதவியோட ஒரு தண்ணீர் குட்¬டயை அமைச்சோம். அதுக்காகப் பக்கத்துல இருக்கிற புதுப்பாளையம் பஞ்சாயத்துல பேசி ஒரு தீர்மானத்தையும் போடவெச்சோம்.

ஒருநாள் யாரோ சிலர் குட்டைக்குத் தண்ணீர் வர்ற பைப்பை வெட்டிப்போட்டு மானுங்க வயித்துல அடிச்சுட்டாங்க. அப்ப இருந்து என் (குருசாமி) சொந்தக் கிணத்துல இருந்து தண்ணி எடுத்து, என் நிலத்துலேயே ஒரு குட்டைய அமைச்சு மான்களுக்குத் தண்ணீர் விட ஆரம்பிச்சாச்சு. தினமும் பயிர்களுக்குத் தண்ணீர் போகுதோ இல்லையோ... ஒரு மணி நேரம் மான் குட்டைக்குத் தண்ணீர் விட்டுப்போட்டுதான் அடுத்த வேலையே நடக்குதுங்க. வனத் துறை சார்பா ரெண்டு வனக் காவலர்கள் மான்களைப் பாதுகாக்கிறாங்க.  

மான்களும் நாங்களும் !

இதுக்கு நடுவுல விவசாயிகள் சிலர், 'இங்க இருந்து மான்களை அகற்றுங்கனு கலெக்டர்கிட்ட கோரிக்கை வெச்சுக்கிட்டே இருக்காங்க. யானை, சிறுத்தையைப் பிடிக்கிற மாதிரி மயக்க ஊசி போட்டோ, கூண்டு வெச்சோ புள்ளிமான்களைப் பிடிக்க முடியாது. ரொம்பப் பயந்த சுபாவமுள்ள அதுங்க சின்ன அதிர்ச்சி ஏற்பட்டாக்கூட செத்துடும். அதனால புதுப்பாளையம் குளத்தை மையமாவெச்சு மான் சரணாலயம் அமைச்சு இதுங்களை அரசாங்கம் காப்பாத்தணும். அதுக்கு வசதியா 100 ஏக்கர் பரப்புக்குப் பரந்து விரிஞ்சு கெடக்குதுங்க அந்தக் குளம். அப்படிப் பண்ணிப்போட்டா  வெவசாயிங்களுக்கும் தொல்லை இருக்காதுங்ணா...'' என்று நெகிழ்கிறார்கள்.

மான்களும் நாங்களும் !

வனத் துறை அதிகாரிகள் சிலரோ ''உணவும், தண்ணீரும், ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கிற பட்சத்துல மான்கள் எந்தப் பகுதியிலேயும் வாழ்றது சாத்தியமான விஷயம்தான். மான்களோட எண்ணிக்கை இன்னும் சில வருஷங்களில் ரொம்ப அதிகமாகிறப்ப பல சிக்கல்கள் வரும். மான்களோட உயிரிழப்பு அடிக்கடி நடக்க வாய்ப்பு இருக்குது. அதனால அரசாங்கம் இது சம்பந்தமா சீக்கிரம் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism