Published:Updated:

வலையோசை

ஈரம் மகி

வலையோசை

ஈரம் மகி

Published:Updated:
##~##

இன்று காலை (17.02.2012) எனக்கு அலைபேசியில் ஓர் அழைப்பு. கோவை பி-9 காவல் நிலையத்தில் இருந்து ஏட்டு சங்கரபாண்டியன், தனக்கு  உதவி வேண்டும் எனக் கேட்டார். நானும் 'என்னால் முடிந்தது செய்கிறேன்’ என்றேன்.

''நேற்று காலையில் இருந்து நல்லாம்பாளையத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் சற்றுப் புத்தி சுவாதீனம் இல்லாத நிலையில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். கீழே விழுந்து மூக்கில் காயம்பட்டு மயங்கிக்கிடக்கிறார். நாங்களும் பல இடங்களில் விசாரித்துவிட்டோம். சரியான இடத்தில் சேர்ப்பிக்க முடியவில்லை. பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர் பேசுவதும் புரியவில்லை. ஏதாவது செய்யுங்கள்...'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். பரிதாபமாகத் தெருவில்கிடந்தார் அந்த மூதாட்டி. அவரிடம் விவரம் கேட்க, சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு திக்கித் திணறி... 'பச்சம்மா, ராஜேந்திரன், புஷ்பா, சாய்பாபா’ என்று முனகினார். அவரைக் கோவை அன்னை தெரசா இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று முடிவுசெய்தோம். முன்னதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்திட்டுவிட்டு,  அன்னை தெரசா இல்லத்துக்குக் கிளம்பும்போது ஒரு யோசனை... சாய்பாபா என்றாரே சாய்பாபா கோயில் அருகில் அழைத்துப் போனால் என்ன என்று தோன்றியது.

அவரை அழைத்துக்கொண்டு சாய்பாபா கோயில் பகுதியில் சுற்றிவந்தோம். ஆனால், யாரும் அடையாளம் காணவில்லை. பாட்டியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. வேறு வழி இல்லாமல் காப்பகத்துக்கு வாகனத்தைத் திருப்பினோம். சற்றுத் தூரத்தில் கண்ணப்ப நகர் வழியாக வந்துகொண்டு இருந்தோம். திடீர் என்று அந்தப் பாட்டி 'இங்கே என்னுடைய வீடு இருக்கிறது’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி. வாகனத்தை நிறுத்தி, அவர் சொன்ன வீட்டுக்குள் மூதாட்டியை அழைத்துச்சென்றேன்.

வலையோசை

உள்ளே ஒரு பெண்மணி (மருமகள் புஷ்பா என்று பிறகு தெரிந்தது) 'பாட்டி... நீ எங்க போயிட்ட? உன்னைக் காணாம மூணு நாளா தேடிட்டு இருக்கோம்...’ என்று சொல்லிக்கொண்டே உடைந்து அழுதுவிட்டார். இந்தக் கோயில் பகுதிக்கு அழைத்துப் போகலாம் என்ற யோசனை வராவிட்டால் பாட்டி இந்நேரம் ஆதரவு இல்லாதவர்கள் என்ற கணக்கில் சேர்ந்து இருப்பார்!

நண்பர்களே, இதுபோல இன்னும் எத்தனையோ பேர் ஆதரவைப் பறிகொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் சற்று முயற்சித்தால் ஏதோ ஒருவிதத்தில் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கும்!

ஆறுதல் தரும் அவஸ்தை!

ஒரு முற்றுப்புள்ளி கூட
அழகான கவிதையாய் இருக்கிறது...
உன் நெற்றிப் பொட்டை படித்ததில்
அதில் அர்த்தம் புரிந்தது!

வலையோசை

தலைமுறை தலைமுறைக்கா
சேர்த்துவைக்கப் போகிறாய்?
கொஞ்சம் சிந்திவிட்டுப் போ
உன் புன்னகைப் பூக்களை!

என் கண்ணே எனக்குப்
பட்டுவிடும் போலிருக்கிறது!
உன் கண்ணில் என் பிம்பம்!

நீ வரும் செய்தி அறிந்ததும்
இதயம் விழிவரை
வந்து எட்டிப் பார்க்கிறது!

எல்லா நிழலிலும் இருள்தான்
இருக்கும்.
உன் நிழலில் மட்டுமே இருக்கிறது
வெளிச்சம்!

 மகி என்கிற மகேந்திரனுக்குக் கோவை காந்திபுரத்தில் மோட்டார் உதிரி பாகங்கள் தொழில் செய்கிறார். www.eerammagi.blogspot.com  என்ற பெயரில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இணையத்தில் எழுதிவரும் இவருடைய வலைப்பூ முழுவதும் பன்னீர் மற்றும் கண்ணீர்த் தீ பூக்களாகச் சிதறிக்கிடக்கின்றன காதல் கவிதைகளும் நூற்றுக்கணக்கான ஆதரவற்றோரின் கதைகளும். அவருடைய வலைப்பூவில் இருந்து...

வலையோசை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism