Published:Updated:

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் ஈரோடு கதிர்ஓவியம்: பாரதிராஜா

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் ஈரோடு கதிர்ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
##~##

'பெண் இல்லாமல் ஆண் இல்லை; ஆண் இல்லாமல் பெண் இல்லை’ என்று நிறையப் பேசினாலும், நிஜத்தில் ஆண்களோடு ஒப்பிடு கையில் பெண்களுக்கான வாய்ப்புகளும் சவால்களும் வித்தியாசமானவை. உடல் ரீதியாக வலிமை குறைந்து இருக்கும் பெண், பெரும்பாலான சூழல்களில் வெறும்  உடலாகவே உற்றுநோக்கப்படும் நிலை இருக்கிறது. பெண்கள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கவே இயலாது. தாயாகவோ, தாரமாகவோ, மகளாகவோ, உடன் பிறந்தவளாகவோ, ஒன்றுவிட்ட உறவாகவோ, நட்பாகவோ... ஏதோ ஒரு வகையில் பெண், ஆண் மகனை முழு மனிதனாக மாற்றிக்கொண்டே இருக் கிறாள்.

நான் கடந்துவந்த பாதையில் சில பெண்கள் எனக்குள் விதைத்த ஆச்சர்யங்கள் அசாத்தியமானவை. அதிலும் என் தூரத்து உறவுப் பெண்ணான பூங்கொடியும், எனக்குக் கற்றுக்கொடுத்த மலர்க்கொடியும் நிகழ்த்திய ஆச்சர்யங்கள் என்னை இன்றும் பிரமிக்கவைப்பவை. ஏனோ, என் விருப்பத்துக்கு என அவர்களுடைய பெயர்களை இங்கே மாற்றியே குறிப்பிடுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ளடங்கிய கிராமத்தைச் சேர்ந்த பெண் பூங்கொடி. அவள் காலத்தில் பெண்களுக்குக் கல்வி என்பது எட்டிக்காய். அதனால், அவள் எட்டாம் வகுப்பு எட்டியதே அதிசயம்தான். நகர்ப்புறத்தில் இருந்து மாப்பிள்ளைவந்து 18 வயதில் அவளைக் கைப்பற்றிப்போனார். அழகான ஒரு பெண் பிள்ளை அப்பா சாயலில் பிறந்தாள். கொடுமையான முன்னிரவுப் பொழுதில், திடீரென பூங்கொடி கைக்குழந்தையோடு விதவையாக நின்றாள்.

பெண்மை போற்றுவோம் !

கணவன் பணிபுரிந்த அரசு சார் நிறுவனத்தில், கருணை அடிப்படையில் அவளுக்குப் பணி ஒதுக்க முன்வந்தனர். தகுதியாகக் குறைந்தது 10-ம் வகுப்புக் கல்வி தேவை. தளராமல் தனி வகுப்பில் படித்துத் தேர்ந்தாள். பணியில் இணைந்து, கைக்குழந்தையோடு அலுவலகத்துக்கு அருகிலேயே குடியமர்ந்தாள். இரவுகளில் பாதுகாப்புக்கு அம்மாவின் உதவி, மாமியார் குடும்ப உதவி எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை வலுப்படுத்தினாள். அடுத்த அதிர்ச்சியாக, உற்ற துணையாய்த் தன்னை எப்போதும் காப்பான் என நம்பிய அண்ணன் விபத்தில் இறந்துபோனான்.

எல்லா இன்னல்களையும் மௌனமாகக் கொன்று புதைத்தாள். தன்னை வலுப்படுத்துவதில் சற்றும் தளராமல் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு, சுயமாகச் சிந்திக்கும், சுயமாக நிற்கும் மனுஷியாகத் தன்னைக் கட்டமைத்தாள். விவசாயம், வேலை, மகளின் கல்வி, சேர்ந்துகிடந்த கடனைச் சிறுகச் சிறுக அடைத்தல் என ஒவ்வொரு நாட்களும் அவளை உலுக்கி  நகர்ந்தன. ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால், தன் வேலையையும் துறந்தாள். எனினும் எல்லாம் கடந்து, இன்று உற்று அவதானித்த ஒவ்வொருவரும் அசந்துபோகும் வண்ணம் நிமிர்ந்து நிற்கின்றாள்.

கிராமத்தில் இருந்து பெரு நகருக்குப் புலம்பெயர்ந்தவள் மலர்க்கொடி. சொந்த பந்தங்களில் முதல் பொறியியல் பட்டதாரி. குடும்பத்தினரின் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே தனக்குப் பொருத்தமில்லா வாழ்க்கை எனப் புரிந்துகொள்கிறாள். தவிர்க்கமுடியாத சூழலில் புகுந்தகம் பிரிந்து சில மாதக் கருவோடு பிறந்தகம் புகுகிறாள். விவரிக்கமுடியாப் போராட்ட காலகட்டம் அது. மகள் பிறந்தாள். ஏதாவது செய்யவேண்டும் எனும் வேட்கையோடு பொறியியல் பட்டத்தை வைத்துக்கொண்டு வேலை தேடினாள்.

ஒரு கல்லூரியில் தன்னைப் பணியில் இணைத்துக்கொண்ட மலர்க்கொடி, பணியாற்றிக்கொண்டே அஞ்சல்வழிக் கல்வியில் முதுகலைப் படிப்பு படித்தாள். தான் சார்ந்த கல்வி தொடர்பான அனைத்து வேலைகளிலும் தன்னை முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டாள். பயிற்சி, கருத்தரங்கு, தேர்வுத்தாள்

பெண்மை போற்றுவோம் !

திருத்தல் எனப் பல ஊர்களுக்குப் பயணப்பட்டாள். மகள், குடும்பம், வீடு எனப் பல பணிகளுக்கிடையே மிகுந்த முனைப்போடு படித்து பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றாள். ஈரோடு மாவட்டத்தில் தலைசிறந்த பொறியியல் கல்லூரி ஒன்றில்  பெருமை நிறைந்த ஒரு பேராசிரியையாக இன்று நிமிர்ந்து நிற்கிறாள்.

இவர்கள் மட்டுமல்ல... உங்கள் அருகில் பார்வையைக் கொஞ்சம் ஆழச் செலுத்திப் பார்த்தால், அங்கேயும் ஒரு பொற்கொடி, பவளக்கொடி, அன்னக்கொடி, அருள்கொடி இருப்பார்கள்.  பூங்கொடியும் மலர்க்கொடியும் தங்களுக்கு இடப்பட்ட சவால்களைக் கண்டு சற்றும் அஞ்சாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அந்தச் சவால்கள் அவர்களுக்குள் ஊட்டிய அயர்ச்சி, வலி, வேதனை, பயம், சுமை, ரணம், அவநம்பிக்கை, திகைப்பு ஆகியவற்றை, அனுபவித்திராத எவராலும் புரிந்திட முடியாது.  

ஆனால், சவால்கள் முன் மண்டியிட்டு இவர்கள் தங்களை வீழ்த்திக்கொள்ளாததற்கு, அவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். மனதில் அவர்கள் நிழலாடும்போது எல்லாம் 'பெண் பலவீனமானவள்’ எனும் ஒப்பீட்டு வார்த்தைகளைப் புறந்தள்ளுகிறேன். சதைகளின் வாயிலாக, பாலினம் வாயிலாக, பொருளாதாரம் வாயிலாக, சமூக ஒழுக்கம் எனும் மாயை வாயிலாக, 'நீ பெண்’ எனும் மனோபாவத்தின் வாயிலாக இந்தச் சமூகத்தின் ஒரு பாதி எந்த அளவுக்கு அவர்களை முடக்கிப்போட முனைந்திருக்குமோ, அதே அளவுக்குச் சமூகத்தின் மறுபாதி அவர்களைக் கைபிடித்துத் தூக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தன் மேல் தளரா நம்பிக்கைக் கொண்டோர் வெல்வார்கள்; வாழ்வார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism