Published:Updated:

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் கார்த்திக் பாண்டியன்

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் கார்த்திக் பாண்டியன்

Published:Updated:
##~##

''நான் எதற்கும் அஞ்சவில்லை; மாறாக, இதற்கெனவே நான் பிறந்ததாக உணர்கிறேன்'-ஜோன் ஆஃப் ஆர்க்.

என் வாழ்க்கை, பெண்களால் ஆனது. நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். கண்ணுக்குள்வைத்து பார்த்துக்கொண்ட அம்மா, வறுமையில் எனக்கான ஸ்கூல் ஃபீஸைக் கட்டிய மாட் மிஸ், தோள் சாய்ந்து அழும் பால்ய சிநேகிதி மீனாட்சி, வாழக் கற்றுத்தந்த தோழி சரோ... எத்தனை எத்தனை பெண்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான், இன்று இருக்கும் நானாக இருப்பதில் இவர்கள் எல்லோருக்குமே பங்கு உண்டு. உடைந்து போகும் தருணங்களில் நம்பிக்கை எனும் வார்த்தைக்கு அர்த்தமாக நான் அடையாளம் காணும் இரு பெண்களைப் பற்றி இங்கே பேச ஆசைப்படுகிறேன். அதில் முதலாவது என் தோழி சக்தி. கடலூர்தான் சக்தியின் சொந்த ஊர். அவளை முதல்முதலில் அவள் அப்பா இறந்த வீட்டில்தான் பார்த்தேன். சக்தியின் அப்பா திடீரென ஓர் இரவில் நெஞ்சு வலியால் இறந்துபோனார். இரண்டு பெண் பிள்ளைகளில் சக்திதான் இளையவள். தெரிந்தவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பக்கூட ஆள் இல்லை. தவிப்புக்கு இடையே சக்தி, வீட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். நண்பர்களை உதவிக்கு அழைத்து நிலைமையைச் சொன்னாள். அந்த சங்கடமான நேரத்தில்தான் நண்பன் மூலம் எனக்கு அவள் அறிமுகமானாள்.

பெண்மை போற்றுவோம் !

தகவல் சொல்வதில் ஆரம்பித்து காரியம் வரை அவளே செய்து முடித்தாள். எல்லோரையும் எதிர்த்துத் தன் அப்பாவுக்குத் தானே கொள்ளிவைத்தாள். காரியம் முடிந்து வந்தபோது, உறவினர் யாரையும் காணவில்லை. ஆண்பிள்ளை இல்லாத வீட்டின் பொறுப்பு தங்கள் மீது வந்துவிடுமோ என்கிற பயம். கலங்கி நின்ற அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தது சக்திதான். அலைந்துதிரிந்து அப்பாவின் வேலையை அக்காவுக்கு வாங்கிக்கொடுத்தாள். லோன் வாங்கிக் கட்டிய வீட்டின் மீதான கடன் அவர்களைத் துரத்தியது. சக்தி பயப்படவில்லை. சென்னைக்கு வண்டி ஏறினாள். ஆறு மாதம் அலைந்து பேங்க் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். இரண்டு வருட கடும் உழைப்பில் கடனை அடைத்தாள். அக்காவுக்குத் திருமணமும் செய்துவைத்தாள்.

இன்றைக்கு சக்தி சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அம்மாவோடு நிம்மதியாக வாழ்கிறாள். புதுவீடு புகும் நிகழ்வன்று சக்தியின் அம்மா அழுதபடி சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. 'அவர் போனதோட என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுனு நினைச்சேன். ரொம்பப் பெருமையா இருக்குடி!'

சக்தியைப் போலவே நான் பார்த்து ஆச்சர்யம் கொள்ளும் இன்னொரு மனுஷி ரம்யா அக்கா. விதி தன் மீது வீசிய விமர்சனங்களை எல்லாம் நம்பிக்கை என்னும் ஆயுதம்கொண்டு சிரித்தபடி எதிர்கொண்ட அற்புதமான ஜீவன்.

பெண்மை போற்றுவோம் !

அவருக்குச் சொந்த ஊர் ஹைதராபாத். படித்துக்கொண்டு இருந்த காலத்தில் ஒருமுறை மும்பையில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே பம்ப் ஸ்டவ்வைப் பற்றவைக்கப் போய், அது வெடித்து உடல் எல்லாம் தீக்காயம். முகம் மொத்தமாகக் கருகி விட்டது. 46 நாட்கள் மருத்துவமனையில் நரக வேதனைக்குப் பிறகு அக்கா இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். போஸ்ட்மார்ட்டம் ரூமில் கணுக்காலில் லேசாகத் துடிப்பு இருப்பதைப் பார்த்து வார்டுக்குக் கொண்டுவந்து பிழைக்க வைத்து இருக்கிறார்கள். 'என்னுடைய போஸ்ட்மார்ட்டம் பேட்ஜ் நம்பர் 13 தெரியுமா?’ என அடிக்கடி ரம்யா சிரித்தபடி சொல்வது உண்டு.

உயிர் பிழைத்தாயிற்று. ஆனால், இனி..? மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முகத்தில் சர்ஜரி செய்யவேண்டும். அதற்கு அதிகப் பணம் வேண்டும். சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் புரொகிரமராக வேலைக்குச் சேர்ந்தார். உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்றைக்கு அந்த கம்பெனிக்கு ரம்யாதான் புராஜெக்ட் மேனேஜர்.

'நாம சந்தோஷமா இருக்கணும். நம்மளச் சுத்தி இருக்கிற மக்களைச் சந்தோஷமா வெச்சுக்கணும். முடிந்த அளவு, இல்லாதவங்களுக்கு உதவணும்' இது ரம்யா அக்காவின் கனவு. வலைப் பதிவின் மூலமாக மட்டுமே அறிந்த ரம்யா அக்காவைச் சந்திக்கவேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. அவரைச் சந்திப்பதற்காக, சென்னை சென்றிருந்தேன். அவர் வீட்டுக்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஒரு காய்ச்சல். இரண்டு நாட்களாகப் படுத்துக்கிடந்தேன். என் அருகிலேயே இருந்து என் அம்மாவைப் போலக் கவனித்துக்கொண்டார் அக்கா. ஒரு கணத்தில் அந்த அன்பின் வேகம் தாங்காமல் பொல பொலவென அழுதுவிட்டேன். ஆதரவாகத் தோள் சாய்த்துக்கொண்டவர், அன்பாகச் சொன்னார். ''இதுக்கு எல்லாமா அழுவாங்க... அக்கா அக்கானு வாய் நிறையக் கூப்பிடுற... உனக்காக இதுகூடச்

பெண்மை போற்றுவோம் !

செய்யலைன்னா நான் என்னப்பா மனுஷி...' அந்த அன்புதான் ரம்யா அக்கா. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தாய்மை உண்டு என்பதை நான் உணர்ந்த கணம் அது. அன்றைய தினத்தையும் அவருடைய அன்பையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.

எல்லாக் கணங்களிலும் அன்பு, நம்பிக்கை என ஏதோவொரு பெண் நம் நினைவுகளில் இடறிப் போகிறார். சமூகம் தனக்கான இடத்தை வழங்க மறுத்தாலும் தன் தேடலைத் தொடர்ந்தபடி உற்சாகமாகத் தன் இருப்பை உறுதிசெய்துகொள்ள முனையும் பெண்களின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism