Published:Updated:

வலையோசை

கல்விக்கான சிறப்பு வலை

வலையோசை

கல்விக்கான சிறப்பு வலை

Published:Updated:
வலையோசை
வலையோசை
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் சிறுவனாக இருக்கும்போது, விளக்கு ஒளியில் தெரியும் நிழலைப் பார்த்துப் பேசுவது பழக்கம். அப்போது என் பாட்டி, 'டேய் சுவத்து நிழலைப் பார்த்துப் பேசாத... ஆயுசு குறைஞ்சு போயிடும்' என, அதட்டுவார். என் தம்பிக்கு, பிறக்கும்போது ஆறு விரல்கள் இருந்தன. உடனே பக்கத்து வீட்டு அத்தை 'அதிர்ஷ்டக்காரன்’ என்றார். இன்றும் மதுரை சந்தைப்பேட்டை சிங்கிடம் மந்திரிக்க ஒரு கூட்டமே நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. அனைத்தும் பச்சிளம் குழந்தைகள். 'உறை விழுந்துடுச்சு’ என்று என் மூத்த தம்பி, போன வாரம் தன் ஒரு வயது பையனை சிங்கிடம் அழைத்துச்சென்றான். என் மாமியார் என் தம்பியின் துணைவியாரிடம் போனில் இதுக்கு ஒரு வைத்தியம் சொன்னார். ''தாய் மாமன் வேட்டியை எடுத்து வாசப்படியில நின்னு தொட்டியில போடுற மாதிரி குழந்தையைப் போட்டு, வேட்டி முனையை உயர்த்தியும் தாழ்த்தியும் பிடிச்சு உருள விடு. மூணு நாளையில உறை விழுந்தது சரியாகிடும்'' என்றார். மூட நம்பிக்கை என்பதைவிட இதைப் பழக்கவழக்கம் என்று சொல்வதுதான் முறை என்றுபடுகிறது. இவை  மட்டுமே நம் பண்பாட்டையும் மரபையும் புரிந்துவைத்துக்கொள்ள உதவும் எச்சங்கள் ஆகும் என, நம்புகிறேன்!

வலையோசை

ஆசிரியை உமா மகேஸ்வரியின் இறப்பு என்னை மட்டுமல்ல; இந்தியாவையே உலுக்கி உள்ளது. ஆனால், ஒரு கொலையைவைத்து 'ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் அதிகாரம் வேண்டும்’ எனக் கேட்பது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அற்ற நிலையையே குறிப்பதாக அர்த்தம்கொள்ளவேண்டி இருக்கிறது. 'பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், அவன் நன்றாகப் படிக்க வேண்டும்' அன்று மட்டுமல்ல, இன்றும் இப்படித்தான் சொல்கிறார்கள் பெற்றோர். இன்று மதிப்பெண்களைக் குறிவைத்து இயங்கும் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டன. மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஆசிரியர்களும் வகுப்பறையில் செயல்படத் தொடங்கிவிட்டனர். இயந்திரத்தனமான திணிப்பு மாணவனுக்கு மன உளைச்சலைத் தருவதுடன், அவனை ஆசிரியரிடம் இருந்து தனிமைப்படுத்திவிடுகிறது. ஆசிரியரும் மாணவனுடைய மன நிலையை எப்போதும் புறக்கணிப்பவராகவே செயல்பட்டுவருகிறார். மாதத் தேர்வு, அதன் முன் வகுப்புத் தேர்வு, பிறகு யூனிட் தேர்வு, அதன் தொடர்ச்சியாக ரிவிஷன் டெஸ்ட் என அனைத்தும் திணித்தல்.

அவன் மனரீதியாக ஒன்றியுள்ள ஒரே தளம், சினிமா. அவன் தேடும் அத்தனை மகிழ்ச்சியும் கொட்டிக்கிடக்கிறது. அவனுக்குக் கிடைக்காத சுதந்திரம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால், கதாநாயகனாகவே உருமாறுகிறான். சண்டைகளும் வன்முறைகளும் நிரம்பி வழியும் சினிமாவில், மன உளைச்சல், மன அழுத்தத்துக்கு உள்ளான அவன், எதிரி தாக்கப்படும்போது எல்லாம் தானே தாக்குவதாகக் கற்பனை செய்கிறான். அதுவே அவனுடைய சொந்த வாழ்வில் தொடரும்போது, நிஜமாக்கிப் பார்ப்பது இயற்கையே. மாணவன் செயலுக்கு நான் நியாயம் கற்பிக்கவில்லை. எங்கு தவறு தொடங்குகிறது? தயவுசெய்து உற்று நோக்குங்கள்; ஆராயுங்கள்!

வலையோசை

நம் வழக்கு மொழியில் 'கல் பொறுக்கி’ என அழைக்கப்படும் கோல்டன் ப்ளோவர் என்ற பறவைதான் உலகிலேயே அதிக மைல்கள் (சுமார் 4,800 கி.மீ.) ஓரே மூச்சில் நிற்காமல் பறந்து செல்பவை. இதற்குக் 'கல் பொறுக்கி’ என்ற பெயர் எப்படி வந்தது என்று சொன்னால், ஆச்சர்யப்படுவீர்கள். இந்தப் பறவை கடற்கரையில் உள்ள சிறு கற்களைத் தள்ளி அதற்கு அடியில் வாழும் புழுக்களைப் பிடித்து உண்பதால்தான். மனிதர்களில் பல சமயம் பலரைத் தள்ளி, வாழும் நபர்களைப் பார்க்கும்போது, கல் பொறுக்கியின் நினைவு வந்துபோவதில் தவறு எதுவும் இல்லை!

வலையோசை

சுதந்திர இந்தியாவில் டெல்லியில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி, தமிழகத்தில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பெரிய போராட்டங்கள் மட்டுமின்றி நுட்பமான விஷயங்களில்கூட தமிழகம் அதன் பங்களிப்பைப் பெரிதும் வழங்கி உள்ளது. அதில் ஒன்றுதான் தேசியக் கொடி. ஸ்க்ரீன் பிரின்டிங் என்ற தொழில்நுட்பம் அவ்வளவாகப் பரவாத காலம் அது. அப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆர். வெங்கடாசலம் என்பவர், வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தில் பட்டுத் துணியில் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் காலம் நெருங்கிவந்தது. சுதந்திரம் பெற்றதும் நாடு முழுவதும் கொடி ஏற்ற வேண்டும். அதற்கு ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகள் தேவைப்பட்டன. இதற்காகக் கொடி தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலை குடியாத்தம் வெங்கடாசலம் அவர்களுக்கு அகமதாபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜசானி என்பவர் தெரிவித்தார். 'தனக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை’ என்று அந்தக் கொடி தயாரிப்பு ஆர்டரை வெங்கடாசலம் ஏற்றுக்கொண்டார். சுதந்திர தினம் அன்று நாடு எங்கும் பறக்கவிட ஒரு கோடி கொடிகளை வெங்கடாசலம் தயாரித்துக்கொடுத்தார். டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா கேட் முன்பு ஆயிரக்கணக்கான மக்களின் உணர்ச்சிகரமான கரகோஷங்களுக்கு இடையே பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, குடியாத்தத்தில் தயாரான இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது!

தெக்கத்தி மண்டலத்தைச் சேர்ந்த வலைப் பதிவரா நீங்கள்..? 'வாரம் ஒரு வலைப் பதிவர்’ பகுதியில் நீங்களும் உங்கள் பிளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப்பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை madurai@vikatan.com மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism