Published:Updated:

என் ஊர்

கோயில் கொடையும் ஏணிப்படி மிட்டாயும் !ஆ.கோமதிநாயகம் படங்கள்: ஏ.சிதம்பரம்

என் ஊர்

கோயில் கொடையும் ஏணிப்படி மிட்டாயும் !ஆ.கோமதிநாயகம் படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:

ஜாகுவார்தங்கம்

##~##
என் ஊர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாகுவார் தங்கத்தின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள கொம்மடிக்கோட்டை. தன் சொந்த கிராமம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.

''வீட்டில் நான் கடைசிப் பையன். அதனால் செல்லம் அதிகம். டி.டி.டி.ஏ. துவக்கப் பள்ளியில அஞ்சாம் வகுப்பு வரை படிச்சேன். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நானும் அக்கா வள்ளியும் மெகதேஸ்வரர் கோயிலுக்கு விளக்கு போடப் போவோம். சித்திரைப்பாண்டி, முருகன், அமிர்தலிங்கம், வசந்தா தில்லைக்கனியோட சேர்ந்து 15 பேர் ஒரு குரூப்பா அலைஞ்சோம். ஊர்க்காரங்க அதிகாலைல மாட்டு வண்டி பூட்டி திசையன்விளை சந்தைக்குப் போவாங்க. அந்த மாடு ஓடுற டொக்... டொக் சத்தம் கேட்டு கண் விழிச்சதும், வாசல்ல உள்ள சாமிக்குப் பூப்பறிச்சுப் போடுவேன். எங்க வீட்டுல வேல்கம்பு, வெட்டருவா உண்டு. நான் எப்பவும் ஒரு வெட்டருவாளை இடுப்புல சொருகிக்கிட்டே அலைவேன். அடிக்கடி ஊர்ல யார் கூடயாவது வம்பிழுத்து அடிப்பேன். ஒருபக்கம் அடிதடினு திரிஞ்சாலும் இன்னொரு பக்கம் ஆன்மிகத்துல ஈடுபாடோடவும் இருந்தேன். ஸ்கூல் லீவுல நாங்க எல்லாம் முத்தாரம்மன் கோயிலுக்குப் போய் பூசாரிகூட சேர்ந்து கோயிலைத் தூத்து தண்ணி தெளிச்சு, சாமிக்குப் பொங்கச் சோறு படைப்போம். உடம்புக்குச் சரி இல்லைனா வேப்பம்பட்டை, முருங்கப்பட்டை, சுக்கு, சாரணைவேர் எல்லாம் சேர்த்து இடிச்சுக் கசாயம் போட்டுத் தருவாங்க. பின் வாசலுக்குப் போய் கண்ணை மூடிட்டு குடிக்குறேன்னு சொல்லி பாதியைக் கீழே ஊத்திட்டு மீதியைக் குடிப்பேன்.

என் ஊர்

முத்தாரம்மன் கோயில் கொடையில ஏணிப்படி மிட்டாய் விப்பாங்க. அப்பா நல்லாத் தூங்கும்போது, அவரோட சுருக்குப் பையில இருந்து காசு எடுத்து மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவேன். எங்க ஊர் ஜனங்க திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழாவுக்கு நடந்தே போவாங்க. வழியில பதநீர்ல பனம்பழம் போட்டு குடிக்கத் தருவாங்க. அப்படி ஒரு ருசியா இருக்கும். எங்க வயல்ல தட்டப் பயறு, வத்தப் பழம் செழிப்பாக் காய்க்கும். மழைக் காலத்துல பக்கத்து ஊர்ல இருக்கிற தருவைக் குளத்துல தண்ணி அதிகமா இருக்கும். குளத்துத் தண்ணி வத்தும்போது பெருசுப் பெருசா மீன் கிடைக்கும். ஸ்டவ், எண்ணெய், மசாலானு ஆளாளுக்கு வீட்டுல இருந்து பொருள் கொண்டுவந்து மீன் பிடிச்சு தேரிக் காட்டுல சமைச்சுச் சாப்பிடுவோம்.  

என் ஊர்

பொங்கலுக்கு ஊரே களைகட்டும். முந்தைய நாள் வீட்டு வாசல்ல, அடுப்புக்கட்டுல காவி அடிப்பேன்.  ஊர் முழுக்க வீட்டுச் சுவர்கள்ல, தார் ரோட்டுல 'பொங்கல் வாழ்த்துக்கள்’னு பெருசா எழுதிப் போடுவோம். இட்லி, தோசை ரெண்டுமே பொங்கல் அன்னைக்குத்தான் கிடைக்கும். அதனால, அன்னைக்கு முழுக்க ஆசை தீர இட்லி, தோசை சாப்பிடுவோம். மார்கழி மாசம் சந்தோஷ் நாடார் பின்னாடியே போய் பஜனைப் பாட்டு பாடுவோம். சந்தோஷ் நாடார் பையன் கந்தசாமி நாடார்தான் எங்க ஊருக்கு ஸ்கூல், பேங்க், போஸ்ட் ஆபீஸ் கொண்டு வர ஏற்பாடு பண்ணினார். எங்க வீட்டு முன்னாடி இருக்கிற தண்ணி டேங்க்ல சினிமா போஸ்டர் ஒட்டுவாங்க. அதுல, எம்.ஜி.ஆர். சண்டைபோடுற மாதிரி ஒட்டியிருந்த ஒரு போஸ்டரைப் பார்த்து சண்டை கத்துக்க ஆசைப் பட்டேன். ஒரு நாள் எம்.ஜி.ஆர். வர்றார்னு சிலம்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தாங்க. அதில் நானும் கலந்துக்கிட்டேன். நான் கம்பு சுத்துறதைப் பார்த்துட்டு எம்.ஜி.ஆர். என்னை சென்னைக்குக் கூப்பிட்டார். சென்னை வந்ததும் சினிமாவில் சேர்த்து விட்டார். சென்னையில செட்டில் ஆகிவிட்டாலும் ஊர் மண்ணை மிதிச்சதும் பழைய விஷயங்கள் அலை அலையா ஞாபகத்துக்குவரும். சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வரும்!' என்றபடியே கண்கள் கலங்க, நெகிழ்ச்சியாய்ச் சிரிக்கிறார் ஜாகுவார் தங்கம்!

என் ஊர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism