Published:Updated:

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் ஜாக்கி சேகர் ஓவியங்கள் : செந்தமிழ்

பெண்மை போற்றுவோம் !

வலைப் பதிவர் ஜாக்கி சேகர் ஓவியங்கள் : செந்தமிழ்

Published:Updated:
##~##

''பெண் விடுதலை வேண்டும்... பெரிய கடவுள் காக்க வேண்டும்...'' என்று இந்தியாவில் 30 கோடி முகங்கள் இருந்தபோது, முண்டாசுக் கவி பாரதி புலம்பினான். இவை எல்லாம் நடந்திருந்தால், இந்தக் கட்டுரைக்கான தேவை இருந்திருக்காது.

ஒரு பெண் நன்கு படித்து, உயர் பொறுப்புக்கு வந்து பலரை நிர்வகித்தாலும் குடும்பத்தில் அவள் ஆணுக்கு அடங்கியே இருக்கவேண்டி உள்ளது. கூட்டுக் குடும்பத்தில் இன்னும் மோசம். என் உறவுக்காரப் பெண். பெயர் பரமேஸ்வரி என்று வைத்துக்கொள்வோம். தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில்  உள்ளார். அவருடைய மாமியாருக்கு நைட்டி போடுவது பிடிக்காது என்பதால், வீட்டுக்கு வெளியே, உள்ளே என... சகலநேரத்திலும் புடவையிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. சென்னை வெயிலையும் வியர்வையையும் மீறி எந்த நேரமும் புடவையில் இருப்பது கொடுமை அல்லவா? திருட்டு தம் அடிக்க ஒளித்துவைக்கும் சிகரெட் பெட்டியைப் போல்... படுக்கையறையில் நைட்டியை மறைத்துவைத்து இருக்கிறார் அவர். ''நடு இரவில் ஏதாவதொரு அவசரத்துக்கு உங்கள் மாமியார் அழைத்தால் என்ன செய்வீர்கள்?'' என்றேன். ''என்ன அவசரம் என்றாலும் புடவை மாற்றிக்கொண்டுதான் படுக்கையறைக் கதவைத் திறப்பேன்'' என்றார். ''மீறி நைட்டி போட்டால் உங்கள் மாமியாரால் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டேன். ''வாழ்க்கை நரகம் ஆகிவிடும்'' என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கப் போனவர், ஏதோ நினைத்தபடி, ''முன்பே சுருக் சுருக் என்று பேசுவார். இப்போது சீரியல்கள் வேறு பார்த்துத் தொலைக்கிறார். இது போதாதா திட்டிக் கொண்டே இருக்க? அதைக் கேட்பதைவிட இந்தக் கருமத்தைச் சுத்திக்கிட்டு அலையலாம்'' என்று சலித்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்மை போற்றுவோம் !

இன்னொரு பெண்ணின் கதை இது. எங்கள் ஏரியாவில் அந்தப் பெண் ரொம்பப் பிரபலம். பெயர் பாக்கியம் என்று வைத்துக்கொள்வோம். அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். விடியலில் டி.வி.எஸ். 50 சத்தம் கேட்டால், அது பாக்கியத்தின் வண்டி சத்தம்தான். காய்கறி, கீரை என ஆண்களையே தடுமாறவைக்கும் பெரிய பாரத்தை வண்டியில் ஏற்றிவருவார். காலையில் 6 மணியில் இருந்து  உழைத்துப் பின் 11 மணிக்குக் காலிக் கூடையோடு வீடு திரும்பும் பாக்கியத்தின் கழுத்து மற்றும் ஜாக்கெட்டில் அமீபா படம்போல, ஒழுங்கற்ற வியர்வை ஓவியம் பூத்து இருக்கும். பாக்கியத்துக்குத் 'தாவணிக் கனவுகள்’ பாக்யராஜ் போல, பாசமான நான்கு அண்ணன்கள். இரு பெண் குழந்தைகளும் 'பிரி.கே.ஜிக்கே

பெண்மை போற்றுவோம் !

40 ஆயிரம் வாங்கி, பெற்றோரின் வயிற்றெரிச்சலுடன் வளர்ந்த, புகழ்பெற்ற பள்ளி’ ஒன்றில் படிக்கின்றனர். சரி, பாக்கியத்தின் கணவன் எங்கே? இன்னும் ஃபிரேமில் வரவில்லையே என்று கேட்கிற உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது.

முதல் குழந்தை பிறந்து ஓர் ஆண்டில் ஒரு சுபயோக சுபதினத்தின் இரவில், 'மானாட மயிலாட’ கலா மாஸ்டர் சொல் வதுபோல, 'உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகலை’ என்று பாக்கியத்திடம் சொன்னவன், அடுத்த நாள் காணாமல் போய்விட்டான். தேடாத இடம்... சுற்றாத கோயில்... வேண்டாத தெய்வம் இல்லை. மலையாள மந்திரவாதியிடம் மை போட்டுப் பார்க்க, வடக்குத் திசையில் ஒரு பெண்ணோடு இருப்பதாகச் சொல்லி பாக்கியத்தின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டான். அன்று முதல் அதிகாலையில் எழுந்திருப்பது, டி.வி.எஸ். 50 மிதிப்பது, காய்கறி, கீரை, மீன் வியாபாரம் செய்வது எனப் பரபரப்பாக மாறிப்போனார் பாக்கியம்.

ஒரு வருடம் கழித்து பாக்கியத்தின் கணவன் வீடு திரும்பி காலில் விழுந்து கதற, மனம் இரங்கி மன்னித்தார். திரும்பவும் ஒரு பெண் குழந்தை. இந்த முறை, 'கெமிஸ்ட்ரி சரியில்லை’ என்று சொல்லிக்கொள்ளாமலேயே ஓடிப்போய்விட்டான். பாக்கியம் தன்  குழந்தைகளுக்காக,  முன்பைக் காட்டிலும் அயராது உழைக்கிறார். பெரிய மகளுக்கு எட்டு வயது. சின்னவளுக்கு ஆறு வயது. எங்கே போனான், என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவே இல்லை. இந்த முறை மை போட்டுப் பார்ப்பது வேஸ்ட் என்று கேரளாப் பேருந்தில் பாக்கியம் ஏறவே இல்லை.

பெண்மை போற்றுவோம் !

பாக்கியத்தின் வாழ்வில் திரும்பவும் ஒரு ட்விஸ்ட். ஒரு வாரத்துக்கு முன் அவருடைய கணவன் மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறான். தகவல் அறிந்த 'தாவணிக் கனவுகள்’ பாக்யராஜ் டைப் அண்ணன்கள், 'சின்னதம்பி’ குஷ்புவின் அண்ணன்களாக மாறிக் கையில் கத்தி எடுத்துக் கொண்டு வர... அண்ணன்களின் காலில் விழுந்து கதறித் தடுத்தவள், சாட்சாத் பாக்கியமேதான். அண்ணன்களின் கோபத்தைக் கண்டு பயந்து வீட்டுக்குள் போய் கதவைச் சாத்தியவன் இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளி வரவில்லை. பாக்கியம் திரும்பத் திரும்பக் கணவனை மன்னிக்கக் காரணம், குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்பதும், ஆண் துணையற்றவளை சமூகம் சுடு சொற்களால் படுத்தி எடுக்கும் என்பதும்தான்.

படித்த பெண்ணும் சரி... படிக்காத பெண்ணும் சரி.. சமூகத்துக்குப் பயந்தே வாழவேண்டி இருக்கிறது. தம், தண்ணி அடித்தபடி ஸ்டார் ஹோட்டல்களில் இரவில் லூட்டி அடிக்கும் ஐந்து சதவிகிதப் பெண்களைப் பார்த்துவிட்டு, பெண்கள் விடுதலை அடைந்துவிட்டதாக நம்மில் பலரும்  எண்ணிக்கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்!

பெண்மை போற்றுவோம் !

உங்கள் அக்கம்பக்கத்திலும் உற்றார் உறவினர்களிடமும் பேசிப் பாருங்கள். இதுபோல, சொல்லப்படாத கண்ணீர்க் கதைகள் நிறையவே இருக்கலாம். 120 கோடி மக்கள்கொண்ட இந்தத் தேசத்துக்கு இன்றைக்கும்கூட 'பெண் விடுதலை வேண்டும். பெரிய கடவுள் காக்க வேண்டும்’ என்கிற பாரதியின் வரிகள் பொருந்திவருவது ஒரு வரலாற்று சோகம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism