Published:Updated:

என் ஊர் !

ஜோலார்பேட்டை என்றால் சோலையூர் !கே.ஏ.சசிகுமார், படங்கள்: வீ.நாகமணி, ச.வெங்கடேசன்

என் ஊர் !

ஜோலார்பேட்டை என்றால் சோலையூர் !கே.ஏ.சசிகுமார், படங்கள்: வீ.நாகமணி, ச.வெங்கடேசன்

Published:Updated:

அற்புதம் அம்மாள்

##~##

அற்புதம் அம்மாள் - தமிழகத்தின் போராளி அன்னைக்கான குறியீடு. தன் மகனின் உயிர் காக்க இவர் எடுத்த இடைவிடாத முயற்சிகள், இன்று இந்தியா முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான விவாதமாக மாறி உள்ளது. தன் ஊரான ஜோலார்பேட்டை பற்றி இங்கே சொல்கிறார் அவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சோலைகளும் வனங்களும் நிறைந்த பகுதிதான் சோலையூர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள், சோலையூர் என்ற பெயரை உச்சரிக்க இயலாமல் 'ஜாலார் பேட்’ என்று அழைத்தனர். அதுவே மருவி இப்போது ஜோலார் பேட்டை ஆகி இருக்கிறது. எங்கள் ஊரின் அருகில் உள்ள ஏலகிரி மலை, ஏழைகளின் ஊட்டி என்ற பெருமை படைத்தது. கடுமையான கோடைக்காலமான மே மாதத்தில் கூட, எங்களுடைய ஜோலார்பேட்டை இதமாகக் குளிர்ச்சி நிறைந்த பூமியாகத்தான் இருக்கும். விவசாயம்தான் எங்கள் மக்களின் பிரதானத் தொழில். அருகில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் பல இருந்தாலும் எங்கள் ஊர் மக்கள் மட்டும் இன்னமும் விவசாயத்தை ஆர்வமாகச் செய்துவருகின்றனர். ஏலகிரி மலையில் இருந்து எங்கள் பூமியைப் பார்த்தால் பசுமை போர்த்திய நிலப்பரப்பை நீங்கள் காணலாம். அதைக் காண்பதற்கென்றே பலமுறை ஏலகிரி மலைக்குச் சென்று இருக்கிறேன். ஆசியாவிலேயே மிகப் பெரிய யார்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.

என் ஊர் !

இப்போதும்கூட ஆங்கிலோ-இந்தியர்கள் பலர் ஜோலார்பேட்டையில் வசித்துவருகிறார்கள். ஏன் என்றால் எங்களுடைய பூமி, சொர்க்கம் என்று மதங்களில் சொல்லப்படுவதைவிடச் சிறப்பான பூமி. எங்கள் நிலத்தில் இருந்து வரும் குடிநீர் மருத்துவக் குணம் உடையது.

என் ஊர் !

ஊர் என்பது ஏதோ தெருக்களும் வீடுகளும் கொண்ட நிலப் பரப்பு அல்ல. அங்கு வாழும் மக்கள்தான் 'ஊர்’ என்ற வார்த்தைக்கே அர்த்தம்கொடுக்கின்றனர். எனவே, ஜோலார்பேட்டையைப் பற்றிப் பேசும்போது ஜோலார்பேட்டை மக்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். பல இடங்களில் சாதிக் கலவரம், மத மோதல்கள் போன்றவைகள் நடந்துவரும் வேளையில் எங்கள் ஊரில் அப்படி ஒரு பேச்சுக்கே இடம் இல்லை. மக்கள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம். இந்துக்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதும் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதையும் இங்கு பார்க்கலாம்.

என்னுடைய மகன் பேரறிவாளனுக்கு ஆதரவாக எனக்கே தெரியாமல் என் ஊர் மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அருகில் உள்ள திருப்பத்தூர் திரு இருதயக் கல்லூரி மாணவர்கள் முதல்முறையாக என் மகன் அறிவுக்கு ஆதரவாகக் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

என் ஊர் !

என்னுடைய கணவர், மகன், மகள்களோடு ஜோலார்பேட்டையில் வசித்த அந்தப் பொன்னான காலங்களை நினைத்தால் இப்போது நெஞ்சம் அடைக்கிறது. இயற்கை மிகுந்த சூழலில், மாசற்ற அன்பு கொண்ட கிராமத்து மக்களோடு மீண்டும் என் மகன் பேரறிவாளனோடு நான் வசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism