Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை

அக்குண்டு!

வலையோசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் குடும்பங்களில், குழந்தைகளுக்கு அழகான பெயர் ஒன்றை வைத்துவிட்டு, அதைச் சொல்லி கூப்பிடாமல் ஒரு செல்லப் பெயர்வைத்து கூப்பிடுவார்கள். 'வெங்கட்ராமன்’ வெங்கி ஆவதும், 'பிச்சுமணி’ பிச்சை ஆவதும், 'கிருஷ்ணமூர்த்தி’ கிட்டு ஆவதும்கூட பொறுத்துக்கொள்ளக் கூடியதுதான். ஆனால், எனக்குத் தெரிந்த ஒருவருடைய மகனின் செல்லப் பெயர் 'அக்குண்டு!’ ஒருநாள் அவரைத் தேடி அவருடைய அலுவலகம் போக நேர்ந்தது. ரிசப்ஷனில் அமர்ந்து இருந்த பெண், ''யாரைப் பார்க்கவேண்டும்?'' என வினவ, அவருடைய உண்மைப் பெயர் மறந்துபோய், பழக்கதோஷத்தில் 'அக்குண்டு’ என்று சொல்லிவிட்டேன். அந்தப் பெண் பதறிப்போய், 'என்ன அணுகுண்டா?’ எனச் சீட்டைவிட்டு எழுந்துவிட்டாள். நல்லவேளையாக, அந்தப் பெண், போலீஸையோ, வெடிகுண்டு நிபுணரையோ கூப்பிடுவதற்குள் நிஜப்பெயர் ஞாபகம் வந்துவிட்டது. 'கிருஷ்ணமூர்த்தி!’

மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்கச் சில வழிகள்!

வலையோசை

மனைவியைச் சந்தோஷப்படுத்துவது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை. கீழ்க்கண்டவாறு இருக்க முயலுங்கள்.

1. நண்பனாக 2. சகாவாக 3. காதலனாக 4. சமையல்காரனாக 5. குழாய் ரிப்பேர்க்காரராக 6. மெக்கானிக்காக 7. ஆசிரியராக 8. எலெக்ட்ரீஷியனாக 9. தச்சராக 10. டாக்டராக 11. அலங்கரிப்பவராக 12. பொறுப்பேற்பவராக 13. ஜோசியராக 14. ஆறுதலும் தேறுதலும் அளிப்பவராக 15. சொல்வதை எல்லாம் கவனிப்பவராக 16. சைக்காலஜிஸ்டாக 17. பூச்சி மருந்து அடிப்பவராக 18. சுத்தமானவராக 19. நல்ல அமைப்பாளராக 20. நல்ல தகப்பனாக 21. நல்ல உடற்கட்டுள்ளவராக 22. அன்பானவராக 23. புத்திசாலியாக 24. வீரச் செயல்கள் புரிபவராக 25. அனைத்தையும் செய்யும் வல்லமை படைத்தவராக 26. உண்மையாக 27. நம்பிக்கைக்கு உரியவராக 28. மனைவி செய்யும் சமையல் எப்படி இருந்தாலும் புகழ்பவராக 29. டி.வி. ரிமோட்டினைக் கேளாதவராக 30. பொறுமையுள்ளவனாக...

டைப்ரைட்டர்களின் இறப்புக் காலம்!

வலையோசை

50-களிலும் 60-களிலும் பிறந்தவர்களுக்கு ஸ்கூல் முடித்துவிட்டு டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கிளாஸுக்குப் போவது என்பது, சாப்பிட்டுவிட்டு உடனே கையலம்புவதுபோல, இயல்பாகத் தொடர்ந்தாற்போலச் செய்யப்பட வேண்டிய ஒரு வேலை. பெரிய ஊர்களில் சில சமயம் அக்கவுன்டன்ஸியும் இந்தக் கூட்டணியில் சேரும். அந்தக் காலத்தில் நிலவிய 'தொழில்நுட்பப்’ படிப்பு இது. பட்டப் படிப்பு படிப்பவர்களும் கூட, இந்த இன்ஸ்டியூட்களில் படிப்பதைப் பார்த்து இருக்கிறேன். டைப்ரைட்டர் மிஷின்களைச் சுனாமி போல, கம்ப்யூட்டர்கள் துடைத்தெறிந்துவிட்டன. அதே நிலைதான் 'ஷார்ட் ஹேண்டுக்கும்’  இப்போது எல்லாம் ஸ்டெனோகிராஃபர் கில்டெல்லாம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

டைப்ரைட்டர்களை நேசிப்பவர்கள் லிஸ்ட்டில் வேறு யாரைக் காட்டிலும் பத்திரிகையாளர்கள்தான் முன் நிற்பார்கள். அவர்கள் செல்லும் இடம் எங்கும் செல்ல நாய்க் குட்டியினை அழைத்துச் செல்வதுபோல, ஒரு போர்ட்டபிள் டைப்ரைட்டரையும் உடன் அழைத்துச் செல்வர். அந்த மிஷினிடம் பேசுவார்கள், கொஞ்சுவார்கள். ஏன்? கோபம்கூட கொள்வார்கள். சென்டிமென்ட் எல்லாம் உண்டு. இந்த வாரம் 'ஹிண்டுவில்’ ஸ்ரீ வி.கங்காதர் அவர்கள் எழுதி இருக்கிறார். உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் கடந்த ஏப்ரலில், பூனே அருகில் மூடப்பட்டுவிட்டதாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்திப் பூ போல இருக்கும் ஓரிரண்டு டைப்ரைட்டர்களும் இன்னும் சில காலத்தில் மியூஸியத்துக்குப் போய்விடும். ஆனால், இந்த மிஷின் எழுப்பிய ஓசைகள், இசைபோல இன்னும் பல ஆண்டுகளுக்கு, காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கும்!

சஷ்டியப்த பூர்த்தி!

வலையோசை

இதுவரை சுமார் இருபது முறையாவது நண்பர்கள், உறவினர்கள் என திருக்கடையூரில் நடைபெற்ற சஷ்டியப்த பூர்த்திகளுக்குச் சென்று வந்துள்ளேன். எல்லா சஷ்டியப்த பூர்த்தியிலும் புரோகிதர்கள், மறக்காமல் ஒரு ஜோக்(!) அடிக்கின்றனர். 'சாருக்கு (ஆணுக்கு) இன்று முதல் 61. 61- ஐ திருப்பிப் போடுங்கள். 16 ஆகிறது. எனவே இன்று முதல் 16 வயது வாலிபர் ஆகிறார்' என்பதும், அதற்குத் தம்பதிகள் அசடு வழிந்துகொண்டு இளிப்பதும் மாறாது நடைபெறுகிறது. சென்றவாரம் இம்மாதிரியான ஒரு நிகழ்வுக்கு, அந்த ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு நடந்தவைகளைக் கண்டு அசந்துபோனேன். மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், தொண்டு நிறுவனங்கள் யாவும் வியாபாரத் தலமாகிவிட்டது என அலுத்துக் கொள்கிறோமே, இங்கு வந்து பாருங்கள். முழுமையான வியாபாரம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

முக்கிய மண்டபத்தில் விசேஷம் நடத்த உச்சகட்டணம். சுற்றுப் பிராகாரத்துக்கு வேறு வகையான கட்டணம். அம்மன் கோயிலில் கொஞ்சம் மலிவு. (சுவாமியாக இருந்தாலும்கூட, பெண் என்றால் மதிப்புக் குறைவுதான் போலும்). தங்குமிடம் உணவுக் கூடம் மாலை, வீடியோ என எல்லாவற்றையும் அதிக விலைக்கு விற்கிறார்கள். புரோகிதர்களின் சம்பளம் உட்பட எல்லாமே கான்ட்ராக்ட் பேசிஸ்தான்.

தம்பதிகளுக்கு, அபிஷேகம் ஆனபின் உடை மாற்ற வேண்டும் அல்லவா? அந்த உடைகளை அங்கேயே போட்டுவிடவேண்டுமாம். இது எந்த சாஸ்திரம் எனப் புரியவில்லை. ஒரே சமயத்தில் 30 தம்பதிகளுக்கு அபிஷேகம் ஆனாலும் சரி. கழுகுபோல உடைகளை எடுத்துக்கொள்ள ஆட்கள் காத்திருக்கிறார்கள். எங்கே இருந்து கவனிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவிழ்க்கப்பட்ட உடைகள், உடனடியாகக் கவர்ந்துகொள்ளப்படுகின்றன. கொஞ்சம் தாமதப் படுத்தினால் உருவிக்கொண்டுவிடுவார்கள் போல. நமது உடைகளை எடுத்துக்கொள்ள தட்சணை வேறு தனியாகக் கேட்கிறார்கள். அபிஷேகத்தின்போது, தம்பதிகள் கழுத்தில் போட்டு இருந்த மாலைகளை உடைமாற்றும்போது கழற்றிக்கொடுத்தனர். கொஞ்ச நேரம் அவற்றைக் கையில் வைத்திருந்தேன். பின், என்ன செய்வது எனத்தெரியாமல் மாலைகளைப் பிரகாரத்தில் ஓர் ஓரமாக வைத்தேன். 'விறுவிறு’வென வந்தார் ஒருவர். சரட்டென அந்த மாலைகளைக் கவர்ந்துகொண்டார். அது எங்களுடைய மாலை எனச் சொல்ல நினைத்தேன். என்னதான் செய்யப்போகிறார் என்ற ஆவல் தோன்ற, சற்று நிதானித்தேன். சற்றும் தயங்காமல் பக்கத்து மண்டபத்தில் வேறு யாருக்காகவோ வைக்கப்பட்டு இருந்த கலசங்களுக்கு இந்த மாலைகளை அணிவித்தார். அடப்பாவிகளா! இது மாத்திரமல்ல, தானமாக அளித்த பச்சரிசி, வாழைக் காய் மற்றும் கலச தேங்காய், என யாவும் ரீ-சைக்கிளிங் செய்யப்படுகின்றன. யாரோ ஒரு சூத்திரதாரி மறைவில் நின்று இயக்குவதுபோல, அனைத்து ரீ-சைக்கிளிங்கும் முறையாகத் திட்டமிட்டபடி ஒரு தவறும் குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றன. இது தவிர, நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகைக்கு மேலாக 'உங்கள் இஷ்டப்படி போட்டுக்கொடுங்கள்’ என்ற கோரிக்கை வந்தவண்ணம் இருக்கும்!

வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த வலைப் பதிவரா நீங்கள்..? 'வாரம் ஒரு வலைப் பதிவர்’ பகுதியில் நீங்களும் உங்கள் பிளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப் பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை (www.orbekv.blogspot.in) மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism