Published:Updated:

பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!

கவர் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!
பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!

அடுத்த சில நாட்களில் தாக்கலாக உள்ள பட்ஜெட் எப்படி இருக்கும்? பட்ஜெட் எப்படி வந்தால் எந்தெந்த கம்பெனிகளுக்குச் சாதகம், எப்படி வந்தால் எந்தெந்த கம்பெனிகளுக்கு பாதகம் என்கிற கேள்விகளே முதலீட்டாளர்களின் மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றன.  

இந்த கேள்விகளுக்கான பதிலைக் கண்டடையும் முன்பு, இன்றைக்கு நம் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் நிலையில் நம் அரசாங்கம் என்னென்ன செய்தாக வேண்டும் என்று பார்ப்போம்.  

என்ன செய்ய வேண்டும்?

##~##
ஒரு நாடு நன்றாக இருக்க வரவைவிட செலவு குறைவாக இருக்க வேண்டும். அரசாங்க இயந்திரம் மிகவும் சுறுசுறுப்பானதாகவும், தேவை அறிந்து இயங்குவதாகவும் இருக்க வேண்டும். இப்படி இயங்க கொள்கைகளும் சட்டங்களும் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மாற்றி அமைக்கப்பட வேண்டும். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்களில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.

பல முக்கியத் தொழில்கள் வளர சில சிக்கலான அடிப்படைத் தொழில்களில் முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும். மின்சாரம், சுரங்கங்கள், சில்லரை வணிகம், கட்டுமானம் போன்ற சிக்கலான தொழில்களில் செய்யப்படும் அதிகப்படியான முதலீடுகள் மற்ற தொழில்களின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்துபவை. இது தொடர்பாக  அரசாங்கம் எடுக்கும் கடுமையான மாற்றங்கள் குறித்த முடிவுகளே பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வதாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் செலவினங்களை குறைக்க அரசாங்கம் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி யிருக்கும். அரசாங்கம் அளிக்கும் பல்வேறு மானியங்கள் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.  உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் ஏற்கெனவே பட்ஜெட்டில் பெரிய அளவில் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. தவிர, உணவு பாதுகாப்பு மசோதா என உணவுக்கு உறுதி தரும் சட்டம் நடைமுறைக்கு வரும்போது அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கவே செய்யும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!

ஏற்கெனவே எகிறிக் கொண்டிருக்கும் குரூட் ஆயில் விலை, டீசலின் உபயோகம் ஆகிய இரண்டுமே அரசாங்கத்தின் செலவை குறைக்கவிடாதபோது, உணவு பாதுகாப்பிற்கான செலவை ஏற்று நடைமுறைப்படுத்துவது இன்னொரு தலைவலிதான்.  

சரி, செலவைக் குறைக்க வழி இல்லை. வரவை அதிகரிக்கவாவது வழி உண்டா?

அரசாங்கத்திற்கு வருவாய் அதிகரிக்க ஜி.டி.பி. வளர வேண்டும். 2006 முதல் 2008 வரை 9 சதவிகிதத்திற்கு மேல் இருந்த ஜி.டி.பி. வளர்ச்சி, தற்போது 6 சதவிகித ரேஞ்சிலேயே இருக்கிறது. ஜி.டி.பி.யின் அளவு வளர அரசாங்கம் பட்ஜெட்டில் சேமிப்பையும், முக்கியத் தொழில்களில் முதலீட்டையும் வளர்ப்பதற்கான கொள்கைகளை வரையறை செய்ய வேண்டியிருக்கும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!

ஆனால், இவற்றை செய்ய அரசாங்கம் பணத்திற்கு எங்கே போகும்? வளர்ச்சியை பெருக்க அரசின் கையில் இருக்கும் முதலீடுகளை காசாக்குவது ஒரு முக்கியமான வழி. செலவைக் குறைப்பதில் கடுமை காண்பிக்க வேண்டியிருக்கும். வரி வசூலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் முதலீடுகளை ஊக்குவிப் பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இன்றைக்கும் அரசாங்கம் கடன் வாங்கியாவது இலவசம் (மானியம்) கொடுக்கும் நிலைமையிலேயே இருக்கிறது. இது புதைகுழிப் பாதை. அதிலிருந்து தப்பிக்க அரசாங்கம் சீரியஸான பல விஷயங்களை செய்ய வேண்டும்.

குறிப்பாகச் சொன்னால், நிலக்கரி ஏலம், மாநில மின்சார வாரிய சீரமைப்பு, டீசல் மானியத்தை இல்லாமல் செய்வது/குறைப்பது, யூரியாவின் விலையைச் சந்தையின் போக்கில் விடுவது, தேசிய தொலைதொடர்பு கொள்கை, இன்ஷூரன்ஸில் அந்நிய முதலீடு, நிலத்தைக் கையகப்படுத்துதல், சுரங்கக் கொள்கை, ஜி.எஸ்.டி., டி.டி.சி. என மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய பட்டியல் இப்படி நீண்டு கொண்டே போகிறது.

சரி, இந்த மாற்றங்களை எல்லாம் கொண்டு வருகிற தைரியம் அரசாங்கத்திற்கு இருக்கிறதா? சமீபத்தில் வந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு உகந்ததாக இருக்கிறதா? என்று கேட்டால், சுரத்து கொஞ்சம் குறையத்தான் செய்கிறது.  

இப்படிப்பட்ட குழப்பமான மற்றும் சிக்கலான நிலையில், வரவிருக்கும் பட்ஜெட் என்ன மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்? என்ன வரும்? எப்படி வரும்? எவ்வளவு நன்மை தரும்? என்பது பற்றி  சந்தையில் நிபுணர்கள் மற்றும் அனலிஸ்ட்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

என்ன எதிர்பார்க்கலாம்?

நிதிப் பற்றாக்குறை (ஃபிஸ்கல் டெபிசிட்) 5.3 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்கலாம். 'கூடிய சீக்கிரமே இந்த பற்றாக்குறையை 5 சதவிகிதத்திற்கு கீழே கொண்டு வருவோம்’ என்று சொன்னால், அதை எப்படி அடையப் போகிறார்கள் என்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பார்த்த பின்னரே பட்ஜெட்டை கொண்டாட முடியும். இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் எவ்வாறு கடன் வாங்கப் போகிறது என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கும். கடனை வாங்க நேரடியாக சந்தைக்கு வந்தால் வட்டி விகிதம் ஏற ஆரம்பித்துவிடும். பற்றாக்குறையைக் குறைக்க அதிக வரி வரவுகளுக்கு வழிவகைச் செய்யும் வழியில், எக்ஸைஸ் மற்றும் சேவை வரியின் அளவு அதிகபட்சமாக இரண்டு சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம்.

செலவைக் குறைக்க மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான மக்கள் நலத் திட்டங்களில் கடுமையான ஒழுங்குமுறைகள் கொண்டு வரப்படலாம். பெட்ரோலியப் பொருட்கள் மானியத்தில் பெரியதொரு மாற்றம் தேவைப்படுகிறது.

சென்ற பட்ஜெட்டிலேயே மறைக்கப்பட்டு, மறக்கப்பட்ட ஒரு விஷயம், இந்த முறை நிச்சயமாக மானியம் எப்படி குறைக்கப்படுவதற்கான வழிவகைகள் சொல்லப் படலாம். அதேபோல் ஜி.எஸ்.டி., டி.டி.சி., நில ஆர்ஜிதம் செய்வதற்கான சட்டம், சுரங்கங்களுக்கான சட்டதிட்டம் போன்றவை எப்போது வரும் அல்லது செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் தரப்படலாம்.

மேலும், கார்ப்பரேட் உலகம் மிகவும் எதிர்பார்த்து அவ்வப்போது ஏமாந்திருக்கும் சில்லரை வர்த்தகம், விமானப் போக்குவரத்து, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடுகள் அனுமதி வழங்குவது குறித்த அரசாங்கத்தின் எண்ணங்கள் வெளிப்படலாம். விலைவாசி ஏற்றத்தில் நொந்து போயிருக்கும் சாமானியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் வரி வரம்பு சிறிதளவு உயர்த்தப்படலாம். அதுவும் போக ஹவுஸிங் லோனிற்கு உண்டான வரிச்சலுகை ஏதாவது ஒரு வகையில் சிறிய அளவில் உயர்த்தப்படலாம்.

உணவுக்கு உத்தரவாதம் கொடுக்க இருப்பதால், விளைச்சல் மற்றும் தானிய சேமிப்பை வளர்ப்பதற்காக விவசாயக் கடன் மற்றும் விளைபொருள் சேமிப்பு மற்றும் போக்குவரத்து கட்டுமானத்திற்கான கடன் தொகைகள் தருவது குறித்து தாராளம் காட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம்.

எதற்கு சாதகம்?    எதற்கு பாதகம்?

இனி, செக்டார் வாரியாக என்ன வரும், அதன் விளைவாக என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

ஆட்டோ: எக்ஸைஸ் டூட்டி அதிகப்படுத்தப்படலாம். அளவுக்குத் தகுந்தவாறு ரூபாய் 25,000 முதல் 75,000 வரை டீசல் வண்டிகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம். பெட்ரோல் வண்டிகளின் விலை ஏற்றத்தை கன்ஸ்யூமர்களுக்கு தள்ளிவிட முடியாமல் கம்பெனிகள் தடுமாறும். டீசல் வண்டிகளை அதிகமாக விற்றுத் தள்ளும் கம்பெனிகளின் லாபம் குறையும். குறிப்பாக, எம் அண்ட் எம் மற்றும் மாருதி சுசூகி நிறுவனங்கள் கொஞ்சம் பாதிப்படையும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!

மெட்டல்: இறக்குமதிக்கான வரி, ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு  தற்போதிருக்கும்  5 சதவிகிதத்திலிருந்து  8 சதவிகிதமாக அதிகப்படுத்தப் படலாம். டாடா ஸ்டீல், செயில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, நால்கோ போன்ற கம்பெனிகள் இதனால் பயனடையலாம்.

நிலக்கரி: தெர்மல் நிலக்கரிக்கான இறக்குமதி வரி முற்றிலுமாக நீக்கப்படலாம். சிமென்ட் மற்றும்  அலுமினியம் துறைக்கு இது லாபகரமானதாக அமையும். கோல் இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது.

சிமென்ட், இன்ஃப்ராஸ்ட்ரக்சர்: வீடுகளுக்கான சலுகைகள் வழங்கப்படலாம் என்பதால், வியாபாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது இருக்கிற மந்தநிலை மாறும். மெட்ராஸ் சிமென்ட் மற்றும் இந்தியா சிமென்ட் பலனடையும்.

வங்கிகள்: முதலீட்டு பற்றாக்குறை உள்ள அரசு வங்கி களுக்கு டயர்-1 கேப்பிட்டல் தரப்படலாம். நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளுக்கு இது நன்மை பயக்கும். விவசாயக் கடன் தள்ளுபடிகள் / வட்டி தள்ளுபடிகள் என ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படலாம்.

இது வங்கிகளின் வாராக் கடனை அதிகரிக்கும். இதைச் சரிக்கட்ட வங்கிகள் வாராக் கடன் என்று ஒதுக்கிய அனைத்தையுமே லாபத்தில் கழித்து அதற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்ற ஒரு சின்ன ஆறுதல் பரிசு தரப்படலாம்.

வருமான வரியில் செக்ஷன் 80சி-ன் கீழ் விலக்குப் பெற       5 ஆண்டுகளுக்கான டெபாசிட் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு, 3 வருடம் வைத்திருந்தால் போதும் என்ற நிலை கொண்டு வரப்படலாம். மொத்தத்தில் வங்கிகளை முன்னுக்கும் போக விடாமல், பின்னுக்கும் தள்ளாமல் வைக்கும் முயற்சிகள் நடக்கலாம்.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்: புதிய வங்கிகளுக்கான உரிமம் தரும் வழிகாட்டும் முறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டது. அவற்றை செயல்படுத்தும் நாட்கள் குறித்த அறிவிப்பு வரலாம். ஆதித்யா பிர்லா, ஹெச்.டி.எஃப்.சி., ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், பஜாஜ் ஃபின்சர்வ், எல்.ஐ.சி. ஹவுஸிங் போன்ற கம்பெனிகள் இதனால் பலன் பெறக்கூடும்.

இன்ஷூரன்ஸ்: தற்போதிருக்கும் அந்நிய முதலீட்டு அளவீடான 26 சதவிகிதம் என்பது 49 சதவிகிதமாக மாற்றப்படலாம். எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ் கேப்பிட்டல் போன்றவை இதனால் பயன் பெறும்.

எஃப்.எம்.சி.ஜி: எக்ஸைஸ் டூட்டி 2 சதவிகிதம் அதிகரிக் கப்படலாம். சர்வீஸ் டாக்ஸும் 2 சதவிகிதம் அதிகரிக்கப் படலாம். ஜி.எஸ்.டி. அறிமுகப் படுத்துவதற்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படலாம். சிகரெட்டிற்கு ஒரேயடியாக 10-13 சதவிகித வரி ஏற்றத்தை அமல்படுத்தலாம். ஹிந்த் யுனிலீவர், ஏசியன் பெயின்ட், ஜி.எஸ்.கே., கோல்கேட், ஐ.டி.சி. போன்ற கம்பெனிகளுக்கு இது பாதிப்பையே தரும்.

டெலிகாம்: டவர் கம்பெனிகளுக்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற ஸ்டேட்டஸ் தரப்படலாம். டேட்டா சர்வீஸ்களுக்கு சர்வீஸ் டாக்ஸ் விலக்கு அளிக்கப்படலாம். ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த தேதி வாரியான அறிவிப்புகள் வரலாம். பார்தி ஏர்டெல் இத்துறையில் நல்லதொரு பயனடைய வாய்ப்புள்ளது.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர்: கட்டுமானத் திட்டங்களுக்கான செலவுகள் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படலாம். பில்ட்-ஆப்ரேட்-டிரான்ஸ்பர் முறையில் தனித்தனி கம்பெனிகளாகச் செயல்படும் கம்பெனிகள், அதனுடைய பேரன்ட் கம்பெனிக்கு கொடுக்கும் டிவிடெண்டிற்கு டிவிடெண்ட் டாக்ஸ் கட்ட வேண்டியதில்லை என்று சொல்லப்படலாம்.

எஃப்.ஐ.ஐ.-கள் லாங் டேர்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டுகளில் முதலீடு செய்வதற்கான அளவீடுகளும், லாக் இன் பீரியட்களும் தளர்த்தப்படலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் ஜி.எம்.ஆர்., ஐ.ஆர்.பி., ஜி.வி.கே. போன்ற கம்பெனிகளுக்கு லாபம் தரும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! என்ன ஆகும் சந்தை!

டி.டி.ஹெச்.: யூனிட்களுக்கான கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் தீர்வைகள் குறைக்கப்படலாம். இது அனைத்து டி.டி.ஹெச். மற்றும் கேபிள் நிறுவனங்களுக்கும் லாபகரமாக அமையும். டிஷ் டிவி மற்றும் ஹாத்வே பயனடையும்.

ஐ.டி.: அரசாங்கம் மற்றும் பி.எஸ்.யூ.கள் அதிக அளவில் கணினிமயமாக்குதலுக்கான செலவினங்களை செய்யத் திட்டமிடலாம். ஏற்கெனவே அரசாங்கத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் டி.சி.எஸ்., சி.எம்.சி., ரெடிங்டன் போன்ற கம்பெனிகள் பலனடையலாம்.

ஆயில் மற்றும் கேஸ்: அரசாங்கத்தின் மானியம் எவ்வளவு, ஆயில் கம்பெனிகள் எவ்வளவு தரவேண்டும் என்ற கணக்குவழக்குகள் தெளிவுபடுத்தப்படலாம். எல்.என்.ஜி.யின் கஸ்டம்ஸ் டூட்டி மொத்தமாக எடுக்கப் படலாம். பெட்ரோ நெட் எல்.என்.ஜி. மற்றும் கெயில் இதனால் பலனடையும்.

பவர் மற்றும் கேப்பிட்டல் குட்ஸ்: டீசல் ஜெனரேட்டர்களுக்கு ஸ்பெஷல் டூட்டி போடப் படலாம். நிலக்கரிக்கான இறக்குமதி வரி முற்றிலுமாக நீக்கப்படலாம். இந்த மாறுதல்கள் பவர் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு நெகட்டிவ்வாகவே இருக்கும். பாதுகாப்புக்கான கேப்பிட்டல் குட்ஸிற்கு ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படலாம். தெர்மேக்ஸ், பி.ஹெச்.இ.எல்., ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா, பி.இ.எல். இதனால் பலனடையும்.

ஃபெர்டிலைஸர்: மானியங்கள் குறைக்கப்பட்டு  விலை அதிகரிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப் படலாம். அரசாங்கமும், யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் பயன் பெறக்கூடிய விஷயம் இது. சம்பல் ஃபெர்டிலைஸர் மீது கொஞ்சம் கவனம் வைக்கலாம்.

ரியல் எஸ்டேட்: இதுவரை    25 லட்சம் வரை வழங்கப்படும் கடன் தொகை மட்டுமே பிரையாரிட்டி செக்டார் லோனாக இருந்தது. இனி இந்த அளவு 30 லட்சமாக மாற்றப் படலாம். 1 சதவிகிதம் வட்டிக் குறைவு 30 லட்ச வீடுகளுக்கும் கிடைக்கலாம். யுனிடெக், ஜே.பி. இன்ஃப்ராடெக் போன்ற கம்பெனிகள் பலனடையலாம்.

மேலே குறிப்பிட்டுள்ளவை எல்லாம் கம்பெனிகள், அனலிஸ்ட்கள் மற்றும் முதலீட் டாளர்களின்  எதிர்பார்ப்பு.

பட்ஜெட்டில் இவை செயலாக்கப்படும் அளவு மற்றும் விதத்தினை வைத்தே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியும்.

எதற்கும் பட்ஜெட் தாக்கல் ஆகும்போது இந்தத் தகவல்களை கையில் வைத்துக் கொண்டு பட்ஜெட்டை கவனித்தால், நல்ல முதலீட்டு முடிவுகளை நீங்கள் நிச்சயமாக எடுக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு