Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

'நியூ சயின்டிஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த எமிலியின் சுற்றுச்சூழல் கட்டுரைக்கு மானுடம் மற்றும் பல்லுயிர்க் கோவைக்கான யுனெஸ்கோ மேப் (MAB) விருது கிடைத்த செய்தி பல்கலைக்கழகம் எல்லாம் பரவி, கடைசியில்தான் வந்து விழுந்தது சின்னப்பாண்டியின் செவிகளுக்கு!

 ஒரு மெல்லிய பரவசம் உடம்புக்குள் பரவுகிறதே... அது ஏன்? மனசின் மர்மப் பிரதேசத்திற்குள் ஒரு மயிலிறகு மழை பொழிகிறதே... அது எதனால்? அவளுக்கொரு மேன்மை என்றால் எனக்கேன் சிலிர்க்கிறது? என்னைக் கேலி செய்துகொண்டே என் மனசு நழுவுகிறதா? அவள் மீது நான் கொண்ட மதிப்பு பிரிய மாய்ப் பழுக்கிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளைக்காரி என்ற பேய் பிடித்து ஆட்டுவதாய் அம்பலக் கல்லில் சொன்னானே அண்ணன் முத்துமணி... இது வரைக்கும் பார்த்ததில்லையே இப்படி ஓர் அழகான பேயை. புரியவில்லையே... பிடிப்பதற்குப் பேய் தயார் என்றால், ஆடுவதற்கு நானும் தயாரா? இல்லை... பேய்க்கு என்னைப் பிடிக்காமலேயே பேய் பிடித்ததாய் ஆடுகிறேனா?

மூன்றாம் உலகப் போர்

வயதான சிலரைப் பார்க்கும்போது அவளுக்குள் சுரக்கும் 'ஆக்சிடோசின்’ என்னைப் பார்க்கும்போது கசிந்திருக்காதா எப்போதாவது?

அவள் மீது சற்றே சரியும் என் உணர்வு சரியா தவறா? எல்லா சரிகளும் முற்றும் சரியல்ல; எல்லாத் தவறுகளும் முற்றும் தவறல்ல. இது சரி போல் ஒரு தவறு; தவறு போல் ஒரு சரி.

சரி!

என் பங்குக்கு அவளை நானும் வாழ்த்திவிடுகிறேன்.

விருந்தினர் விடுதியில் தனித்திருந்தாள் எமிலி, பூங்கொத்துகள் புடைசூழ. வட இந்தியப் பயணம் முடித்து நேற்றுதான் திரும்பியிருந்தாள். சிவப்பாய் - செழிப்பாய் - கல்லொன்று மலர்ந்ததுபோல் திண்மையாய்த் திகழ்ந்த ஒற்றை ரோஜாவை நீட்டி ''வாழ்த்துக்கள் எமிலி!'' என்றான் சின்னப்பாண்டி.

ஒற்றை ரோஜா கண்டதும் நூறு ரோஜாக்கள் மலர்ந்தன அவள் உதட்டிலும் முகத்திலும்.

''நன்றி'' என்றாள் உடல் மலர்ந்து.

உள்ளங்கையில் பூவைத் தடவினாள்.

''அடியே என் அமெரிக்க ராஜாத்தி!

அந்த ரோஜா மலரின் அடியடுக்கில் என் இதயத்தை ஒளித்துவைத்திருக்கிறேன். பத்திரம்; பூவோடு என் இதயத்தையும் வாட விட்டுவிடாதே!''

சின்னப்பாண்டி கொடுத்த ஒற்றை ரோஜாவை மட்டும் அவள் கைப்பையில் இட்டுக்கொண்டாள்.

''ஏன்... இத்தனை பூக்கள் இருக்க என் பூவை மட்டும்?''

மூன்றாம் உலகப் போர்

''பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட பூக்களெல்லாம் சிறைக் கைதிகள். உங்கள் ஒற்றை ரோஜா மட்டும்தான் சுதந்திரப் பிரஜை. சுதந்திரம் பிடிக்கும் எனக்கு!'' - அவள் சிரித்துக்கொண்டே தன் தலை முடி கோதினாள்.

''சொல்லடி பெண்ணே... எப்போது கோதப் போகிறாய் கலைந்த என் மனசை?''

தொலைக்காட்சி கேமராக்கள் முற்றிலும் முற்றுகையிட்டிருந்தன எமிலியை. மெல்லிய ஒப்பனையோடு வீற்றிருந்தாள் அவள் வெண் தேவதையாய். சின்னப்பாண்டியின் கண்கள் எதேச்சையாய்ப் பார்ப்பது போல் அடிக்கடி இச்சையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தன அவள் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த கர்வ அலங்காரத்தை.

பேட்டி தொடங்கியது.

''யுனெஸ்கோ விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.''

''நன்றி.''

''மேடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!''- ஒரு வணிக சேனல் வழிந்தது.

''அழகு என்பது அவரவர் மனசில் உண்டாகிக்கிடக்கும் பிம்பத்தின் ஒப்பீடு. எது சிதைவற்றதோ -  அழிவற்றதோ அது தான் அழகு. என்னைப் பொறுத்தவரை உண்மைதான் அழகு!''

''இந்தப் பேட்டியில் நீங்கள் உண்மை மட்டும்தான் பேசுவீர்களா?''

''ஏன் பொய் சொல்ல வேண்டும்? பொய் என்பது அச்சம். நிறுவனங்களையும் நபர்களையும் சார்ந்திருப்பவர்கள்தாம் பொய் சொல்லுவார்கள். நான் உண்மையை மட்டுமே சார்ந்திருக்கிறேன். உண்மை என்று நம்புகிறவற்றை நான் பேசுகிறேன்!''

''இந்த விருதை யாருக்காவது காணிக்கை செலுத்த விரும்புகிறீர்களா?''

''தூக்கம் விழித்த என் இரவுகளுக்கு!''

''உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறார்கள் இந்தியர்கள்?''

''பணக்காரர்கள் செல்வத்தில் மன அழுத்தத்தோடு; ஏழைகள் வறுமையில் மகிழ்ச்சியோடு!''

''நீங்கள் மதிப்பது?''

''சட்டங்களைவிட தர்மங்களை மதிக்கும் கிராம மக்களை!''

''வருந்தியது?''

''அமிர்தம் போன்ற இளநீரை ஆறு ரூபாய்க்கு விற்றுவிட்டு, பன்னிரண்டு ரூபாய்க்கு கோக் குடிக்கும் கூட்டம் பார்த்து!''

''ஆச்சர்யப்பட்டது?''

''எங்கள் அமெரிக்கப் பணத்தில் மூன்று டாலருக்கு ஓர் ஆணும், இரண்டு டாலருக்கு ஒரு பெண்ணும் இன்னும் இந்தியாவில் கூலிக் குக் கிடைப்பதைப் பார்க்கும்போது!''

''எங்கள் தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்தது?''

''தூக்கணாங்குருவிக் கூடு. மனிதனுக்கு முன்னோடியாய்ப் பறவைகளின் முதல் தொழில்நுட்பம். கோடி ஆண்டுகளாய்அறுந்து போகாத மரபுத் தொழில் தொடர்ச்சி. ஒரு தூக்கணாங்குருவி தன் கூட்டை 18 நாட்களில் கட்டுகிறது. 500 முறை பறந்து பறந்து 5,000 புல் இழைகளைப் புதர்களில் சேகரிக்கிறது. குளத்துக் களிமண் திரட்டிக் கூட்டுக்குள் கட்டுகிறது விளக்கு மாடத்தை. சிறகொடித்த மின்மினிப் பூச்சிகளால் கூட்டுக்கு விடி விளக்கேற்றுகிறது. எண்ணிக்கையில் இன்று குறைகின்றனவாம் இந்த குருவிக் கூடுகள். பறவைகள் பாதுகாப்பு இயக்கம் இந்தியாவில் இன்னும் தீவிரமாக வேண்டும்!''

அவள் ஆங்கிலம் பேசும் அழகை ரசிப்பதா அல்லது அழகே ஆங்கிலம் பேசுகிறதே... அதை ரசிப்பதா?

அவள் உதட்டு மொழியிலும் உடல் மொழியிலும் காதலாகிக் கசிந்து கவிதை மல்கி நின்றான் சின்னப்பாண்டி.

''எங்கள் கலாசாரத்தில் நாங்கள் எதை விட்டுவிட வேண்டும்? எதை விட்டுவிடக் கூடாது?''

''சாதிக் கட்டமைப்பை விட்டுவிட வேண்டும்; குடும்பக் கட்டமைப்பை விட்டுவிடக் கூடாது!''

''இந்தியாவில் உங்களுக்குக் கவலை தரும் பொருள்கள் என்ன?''

''லஞ்சமும் கங்கையும்!

ஒன்று, கூடிக்கொண்டே போகிறது;

ஒன்று, குறைந்துகொண்டே வருகிறது.

மூன்றாம் உலகப் போர்

லஞ்சம் பெருகப் பெருக... இந்தியாவின் விழுமியங்கள் நொறுங்குகின்றன; கங்கை உருக உருக... சமவெளிகளில் வாழும் 40 கோடி இந்தியர்களின் உயிராதாரம் தீரப்போகிறது. இது உங்கள் துயரம் மட்டுமல்ல; உலகத் துயரம். கிரீன்லாந்தின் ஐஸ்லாந்து இன்னும் 100 ஆண்டுகளில் முற்றும் உருகி முடிந்து விடும் என்கிறார்கள். அதனால் அரை மீட்டர் உயருமாம் கடல் மட்டம். கங்கையை உண்டாக்கும் இமயப் பனி உருகி முடிக்க இருபத்தைந்தே ஆண்டுகள் போதுமாம். இயற்கைக்கு எதிராய்த் தொடுக்கும் போரில் மனிதன் அழியப்போகிறான். எல்லாம் புவி வெப்பமாதலின் அபாய அறிகுறி!''

''புவி வெப்பமாதலில் அமெரிக்காவின் பங்கு கணிசமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''

''தயக்கமில்லை. கரியமில வாயு வெளியேற்றத்தில் எங்கள் நாட்டின் பங்கு 22 சதவிகிதம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்!''

''உலக வெப்பத்தை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்துவிட்டு கியோட்டோ உடன்படிக்கையை நிராகரித்து உங்கள் நாடு வெளியேறியது உங்களுக்கு உடன்பாடா?''

''அது அரசியல். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. எண்ணெய் வள நிறுவனங்களின் தேர்தல் நிதிக்காகவும் தீராத வற்புறுத்தலுக்காகவும் எங்கள் அதிபர் இணங்கியிருக்கக்கூடும். அதே நிலைப்பாடு தொடர்ந்தால், நான் அமெரிக்காவையும் எதிர்த்தே எழுதுவேன்!''

''கிராம யாத்திரை போயிருந்தீர் கள். எப்படி உணருகிறீர்கள் இந்தியச் சமூகத்தை?''

''அடிப்படையில் இந்தியா வணிகச் சமூகமில்லை; விவசாயச் சமூகம். ஆனால், சிறுபான்மை வணிகம் பெரும்பான்மை விவசாயத்தை மென்று தின்றுகொண்டிருக்கிறது. சேவை, உற்பத்தி என்ற இரண்டு தளங்களில் சமமாக இயங்க வேண்டிய ஒரு தேசத்தில், சேவைத் துறை விரிந்துகொண்டே போகிறது; உற்பத்தித் துறை சுருங்கிக்கொண்டே வருகிறது. குழந்தை யின் பிறந்த நாளில் விருந்துக்கு வந்தவர்கள் உண்டுகளிக்க, கவனிக்கப்படாத குழந்தை பட்டினிகிடப்பது மாதிரி விவசாய நாடு என்று சொல்லப்படும் தேசத்தில் விவசாயி தான் பட்டினிகிடக்கிறான்; தற்கொலைக் கும் தள்ளப்படுகிறான்!''

''இந்த விவசாய விபத்துக்கு என்ன காரணம்?''

''என்ன காரணங்கள் என்று பன்மையில் கேளுங்கள். முக்கியமாய் மூன்று சொல்லு «வன்:

புவி வெப்பமாதல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல்!''

''விளக்க முடியுமா?''

''முதலில் தண்ணீர் வேண்டும். விவசாயத் துக்கல்ல; எனக்கு!'' - சைகை செய்தாள். சின்னப்பாண்டி ஓடிப் போய்க் குடி தண்ணீர் கொடுத்தான்.

அவள் ரோஜாப்பூ வாய் வழியே

நுழைந்த தண்ணீர், கழுத்தென்னும் சங்குக் கண்ணாடியில் இறங்குவது தெரிந்தது. ஒரு மல்லிகைக் கைக்குட்டையில் வாய் துடைத்தாள்; தொடர்ந்தாள்:

''புவி வெப்பமாதலில் பருவநிலை மாறிவிட்டது என்பது உலக உண்மை. மழை அற்றுப்போவது மட்டுமல்ல; பருவநிலை மாற்றம். பகிர்ந்து பெய்ய வேண்டிய மழை... ஒரே இடத்தில், ஒரே காலத்தில் கொட்டித் தீர்த்துக் குடி கெடுப்பதும் பருவநிலை மாற்றம்தான். உங்கள் சிரபுஞ்சியில் மழை குறைகிறது. மழையை ஒரு சொல்லாக மட்டுமே அறிந்திருந்த குவைத், திடீரென்று வெள்ளக்காடாகிறது. ஒரு பைத்தியக்காரனைப் போல முன்முடிவு இல்லாமல் நடந்துகொள்ளும் இந்தப் பருவநிலை மாற்றத்தால் இந்திய விவசாயத்தின் மரபு வழி நம்பிக்கை உடைந்துபோய்விட்டது. அடுத்த நூறாண்டுகளில் கணிப்புகளை மீறிய நிகழ்வுகள் நேரலாம் என்று கருதப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் இந்திய வெப்பநிலை 0.48 டிகிரி செல்சியஸ் கூடியிருக்கிறது. உலக வெப்பநிலை மட்டும் நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால், ஐரோப்பாவின் ஒரு பகுதியும் மத்தியக் கிழக்கின் பெரும் பகுதியும் வாழ் தகுதி இழந்துபோகும். ஆறு டிகிரி செல்சியஸும் அதற்கு மேலும் உயரும்பட்சத்தில், மனித இனத்தில் பாதி மரித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. இயற்கையைவிட்டு வெகு தூரம் போய்விட்ட மனித நாகரிகத்தை இயற்கையின் மடிக்கே மீண்டும் இயன்ற வரைக்கும் இழுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் நாம்!''

''வாதத்தை எப்படி எடுத்துவைக்கிறது பார் இந்த வசீகரப் பிசாசு!'' - சின்னப்பாண்டி எமிலியைச் செல்லமாய்த் திட்டித் திட்டி சிலாகித்துக்கொண்டான்.

''அடுத்து தாராளமயமாக்கலில் இடிந்துகிடக்கிறான் இந்திய விவசாயி. இந்திய விவசாயத்தின் திடீர் வீழ்ச்சி, சர்வதேச நிதியத்தின் கடன் வாயிலில் கொண்டுபோய் நிறுத்தியது இந்தியாவை. நிதியம் விதித்த நிபந்தனைகள் தாராளமயமாக்கலில் தொடங்கித் தனியார்மயத்தில் முடிந்தது. அரசு விதைப் பண்ணைகள் மூடப்பட்டதில் விதைகள் விலையேறிவிட்டன; போலி விதைகள் சந்தைக்கு வந்துவிட்டன. ஏக்கருக்கு 70 ரூபாய்க்கு விற்ற விதை, ஆயிரத்தைத் தொட்டது. விளைச்சலுக்கும் விதைக்குமான இடைவெளி ஆள் தாண்ட முடியாத அதலபாதாளமாய் விரிந்தது. என்ன செய்வார்கள் உங்கள் ஏழை விவசாயிகள்? உணவுப் பயிர் துறந்து பணப் பயிருக்குத் தாவினார்கள். நெல்லும் சோளமும் கோதுமையும் விளைந்த நிலத்தில்... கரும்பு, மிளகாய், பருத்தி, புகையிலை ஆக்கிரமித்தன. ராட்சசப் பசிகொண்ட அந்தப் பணப் பயிர்கள் 'உரம் போடு... உரம் போடு’ என்று ஏழை விவசாயிகளை எச்சரித்து நச்சரித்தன. உரத்துக்கான சர்வதேசச் சந்தை அந்தப் பற்றாக்குறையைப் பணமாக்கியது. உர விலையை முந்நூறு சதவிகிதம் உயர்த்தி உறிஞ்சியது. புவி வெப்பமாதலில் விவசாயி களின் வானம் மூடப்பட்டுவிட்டது. தனியார்மயமாக்கலில் விதை பிடுங்கப்பட்டுவிட்டது. உலகமயமாக்கல் என்ற பந்தயத்தில் அவன் கால்கள் வெட்டப்பட்டுவிட்டன. இவையெல்லாம் அறிந்தும் அறியாமலும் கிரிக்கெட் பார்த்துவிட்டுப் பின்னிரவில் தூங்கி நண்பகலில் விழிக்கிறார்கள் மதிப்புமிக்க தேசத்தின் தலைவர் கள்!''

''நாங்கள் சொன்னால் நம்ப மாட்ட£ர் கள் பெண்ணே... நீ சொல்; நிறையச் சொல்'' -’ ஓசையில்லாமல் கைதட்டிக்கொண்டான் சின்னப்பாண்டி.

''இந்தியாவில் உடனே களைய வேண்டிய பேதம் என்ன?''

''உணவு வித்தியாசம். இங்கே வெயிலில் உழைக்கும் வேர்வை வர்க்கம் ஊட்டச் சத்தில்லாத உணவைச் சாப்பிடுகிறது. வேர்வைக்கே வேலை இல்லாத ஏர்கண்டி ஷன் வர்க்கம் அளவுக்கு மீறிய ஊட்டச் சத்தை உட்கொள்ளுகிறது. இது ஒரு தேசத் துரோகம் என்று அறிவிக்கப்பட வேண்டும். இந்த உணவு பேதம் உலகம் முழுக்க நிலவுகிறது; ஒழிக்கப்பட வேண்டும். 410 கோடிப் பேர் உண்ணக் கூடிய உணவை எங்கள் 30 கோடி அமெரிக்கர்கள் தின்று தீர்க்கிறார்கள். 40 கோடி மக்கள் உண்ணக் கூடிய உணவைத்தான் உங்கள் இந்தியர்கள் 110 கோடிப் பேர் உண்ணுகிறார்கள். இது மனிதனுக்கு மனிதன் செய்யும் உலகத் துரோகமில்லையா? வாழிடத்தில் உணவு தீர்ந்த பறவைகள் வலசை போக வாய்ப்புஇருக்கிறது. ஆனால், வளமுள்ள இடம் தேடி வலசை போக மனிதனுக்குத்தான் வாய்ப்பில்லாமல்போகிறது. இந்தப் பூமியில், பிடித்த இடத்தில் வாழ உலக மனிதனுக்கு உரிமை வேண்டும்!''

''உங்கள் சிந்தனை உங்கள் வயதுக்கு மீறியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''

''உலகத்தில் பொறுப்புள்ள பெரியவர்கள் பலர் சிறுவர்கள்போல் சிந்திக்கும்போது, சில சிறுவர்கள் பெரியவர்கள் போல் சிந்திப்பதில் என்ன பிழை?''

''எல்லோரும் குறைகளைச் சொல்ல முடியும். தீர்வு சொல்ல முடியுமா?''

''இந்திய தேசத்தின் உயிர் எது என்று கருதப்படுகிறதோ அது - அந்த விவசாயம் - இந்தியாவில் லாபகரமானதாகவும் இல்லை; கௌரவமானதாகவும் இல்லை. விவசாய இழப்பை தேசிய இழப்பாகக் கருத வேண்டும். இடைத்தரகர்களின் லாபம் உற்பத்தியாளர்களைச் சேர வேண் டும். படித்த பட்டதாரிகள் விவசாயத்தில் புகுந்து அதை நவீனப்படுத்தினால்தான் கவலைக்கிடமான விவசாயம் கௌரவம் பெறும். ஆண்டுக்கு 41 ஆயிரம் மருத்துவர் களையும் 9 லட்சம் பொறியாளர்களையும் உண்டாக்கும் இந்தியா, எத்தனை வேளாண் மைப் பட்டதாரிகளை உருவாக்கி விவசாய வெளிகளில் விட்டிருக்கிறது? இந்தியாவை நான் நேசிக்கிறேன்; அதனால் இவ்வளவு சிந்திக்கிறேன்!''

''வேளாண்மை வளர்ச்சிக்கு வேறென்ன தீர்வு?''

''தண்ணீரும் மின்சாரமும் உபரியாய் உண்டாக்கப்படாத வரை இந்தியா

வல்லரசாவது கடிது. இந்த இரண்டும் பெருகிவிட்டால், இந்தியாவில் தரிசாய்க் கிடக்கும் 38 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் முப்போகம் காணும்!''

''தண்ணீருக்கு என்ன தீர்வு?''

''இந்திய நதிகளை இணைப்பது இருக்கட்டும்; முதலில் நதிகளை வாழவிடுங்கள். மலையைக் காப்பாற்றுங்கள்; மழையைக் காப்பாற்றலாம். ஒரு தேசத்தில் 33 விழுக்காடு காடுகள் வேண்டும். இருப்பது உங்கள் நாட்டில் 21 விழுக்காடுதான். உங்கள் அரசியலும் அதிகாரவர்க்கமும் மலைகளையும் காடுகளையும் வெட்டி வெட்டி விழுங்கிக்கொண்டிருக்கின்றன. ஓர் அதிர்ச்சியான செய்தி. உங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஓர் ஆபத்து காத்திருக் கிறது!''

''ஆபத்தா? என்ன அது?''

அது வரை தனித்தனியே கேள்வி கேட்டவர்கள் மொத்தமாய்க் குவிந்தார்கள். திடுக்கிட்டு நிமிர்ந்தான் சின்னப்பாண்டி யும்!

''சூரியக் கதிரில் இருந்து நியூட்ரினோ அணுத் துகளைத் தனியே பிரித்தறிய

ஆய்வகம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. அதற்கு மூன்று கிலோ மீட்டர் வரைக்கும் மலை குடையப்படலாம். மலை ஊனப் படலாம்; சுற்றுச்சூழல் மாசுபடலாம்; விளைநிலங்களும் மேய்ச்சல் காடுகளும் கையகப்படுத்தப்படலாம். ராணுவத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதிக் கம் அங்கே அரசோச்சலாம். கைவிடப்பட்ட சுரங்கங்களில் இந்த ஆய்வை நிகழ்த்துவதை விட்டுவிட்டு, இருக்கும் மலையைச் சிதைக் கும் முயற்சியை எப்படி ஏற்றுக்கொள்வது? மக்கள் போராடக் கூடும் அல்லது போராட வேண்டும்!''

''உங்கள் அடுத்த முயற்சி?''

''அமெரிக்கா சென்றதும் இந்திய சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறு ஆய்வு நூல்.''

''இந்தியாவில் உங்களுக்குப் பிடித்தது?''

''தாஜ்மஹால், மாமல்லபுரம், மீனாட்சி அம்மன் கோயில், அட்டணம்பட்டி மற்றும் சின்னப்பாண்டி!''

- மூளும்

மூன்றாம் உலகப் போர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism