Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : பவா செல்லதுரை - கே.வி.ஷைலஜாபடங்கள் : பா.கந்தகுமார்

நானும் விகடனும்!

இந்த வாரம் : பவா செல்லதுரை - கே.வி.ஷைலஜாபடங்கள் : பா.கந்தகுமார்

Published:Updated:

பிரபலங்கள்  விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்  பக்கம்!

பவா செல்லதுரை:

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பத்திரிகைகள் என்றாலே... சிறு பத்திரிகைகள்தான் என்றும், மற்றவை எல்லாமே வணிக இதழ்கள், நாம் வாசிக்கக் கூடாதவை என்றும் ரொம்ப சின்ன வயசிலேயே மனதில் பதிந்துவிட்டது.  'இனி’, 'புதுயுகம் பிறக்கிறது’, 'முன்றில்’, 'காலச்சுவடு’, 'நிகழ்’, 'புதிய கலாச்சாரம்’, 'மன ஓசை’ என்று என் வாசிப்பின் தளத்தை வேறு மாதிரி வைத்துக்கொண்டேன். நண்பர்கள் கையில் இருக்கும் விகடனை வாங்கிப் பிரித்தாலும், கொண்ட கொள்கையில் இருந்து பிசகிவிட்டதாகிவிடும் என்பதால் பிடிவாதமாக இருந்தேன்.

மேலாண்மை. பொன்னுச்சாமியின் ஒரு சிறுகதையை விகடனில் வாசித்ததுதான் விகடனுடனான என் முதல் ஸ்பரிசம். இந்தக் கதையை அவர் செம்மலரில் எழுதுவதற்கும் விகடனில் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்? விகடன் வியாபாரப் பத்திரிகை என்று எனக்குப் போதித்தவர்கள் மேலாண்மைக்கு ஏன் சொல்லவில்லை? நிறையக் கேள்விகள், தர்க்கங்கள்... தெளிவான பின் ஒரு முடிவுக்கு வந்தேன்... சிறு பத்திரிகைகளோடு தொடர்ந்து விகடனை யும் படிப்பது என்று!

நானும் விகடனும்!

எம்.ஜி.ஆர். ஆட்சியில் விகடன் ஆசிரியர் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது, அதற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் அப்போதைய த.மு.எ.ச. சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த குரல்... என் குரல். அடிவயிற்றில் இருந்து எழுந்த ஆவேசம் அது!

விகடன்... தமிழ் இளைய தலைமுறைக்கு அளித்த மிகப் பெரிய கொடை, 'விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’. அந்தத் திட்டத்தின் தொடக்கக் காலத்தில் சௌபா, அசோகன், கண்ணன் ஆகியோரில் தொடங்கி, நேற்று இரவு என்னைச் சந்தித்த ராபின் மார்லர் என்ற புது மாணவ நிருபர் வரை... என்னில் இருந்து அவர்களும்... அவர்களிடம் இருந்து நானும் பரஸ்பரம் அடையும் அனுபவப் பகிர்தல்கள் இவ்வாழ்க்கைக்கே போதுமானது!

செழியன், உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி எழுதும் வரை, எப்போதாவது ஃபிலிம் சொசைட்டிகளில் உட்கார்ந்து, ஊருக்குப் போகும் அவசரத்தில், மனம் லயிக்காமல் அரைகுறையாகப் பார்த்த படங்களே நான் பார்த்த உலக சினிமாக்கள். செழியனின் உலக சினிமா அறிமுகமே, என்னை 'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’, 'லைஃப் இஸ் பியூட்டிபுஃல்’ போன்ற உன்னத சினிமாக்களை அறிமுகப்படுத் தியது.

பல எழுத்தாளர்களை அப்படியே தன்னுள் புதைத்துக்கொண்டு அவர்களைத் திசைகள் எங்கும் உள்ள வாசகர்களோடு கைகுலுக்கவைத்தது விகடன். ஆகச்சிறந்த உதாரணம் எஸ்.ராமகிருஷ்ணன்.

பால் சக்காரியாவின் நூல் ஒன்றை வெளியிட திருவண்ணாமலை வந்திருந்த எஸ்.ராமகிருஷ்ணன், பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் 'சிதம்பர நினைவுகள்’ குறித்து ஒரு நீண்ட இரவில் பேசிக்கொண்டு இருந்தார். 'அந்த மாதிரியான அனுபவங்களற்ற மனிதன் யார்?’ என்ற கேள்வி அந்த இரவில் எல்லாருடைய மனதிலும் எழுந்தது. அந்த உரையாடலின் நீட்சியாகவே விகடனில் ராமகிருஷ்ணன் துணையெழுத்தையும் கதாவிலாசத்தையும் எழுதினார். தமிழ் வாசகர்கள் முன் அந்தக் கவித்துவமான எழுத்தும் வாழ்வனுபவமும் ஏற்படுத் திய பேரலை இன்று வரை எங்காவது ஒரு புது வாசகனின் கால்களை நனைத்துக்கொண்டேதான் இருக்கிறது!

எதன் பொருட்டும் என் படைப்பு ஒரு பத்திரிகையில் இருந்து திரும்பி வந்துவிடக் கூடாது என்பதில் மிகப் பிடிவாதம் உண்டு எனக்கு. அது என் படைப்பின் தோல்வி என ஒரு நினைப்பு. அதனாலேயே என் முதல் கதையை விகடனுக்கு அனுப்பாமல் கல்கிக்கு அனுப்பினேன். அடுத்த வாரமே அது பிரசுரமாகி அம்மாத 'இலக்கியச் சிந்தனை’ விருது பெற்றபோதும் விகடனுக்கு அனுப்பத் தைரியம் வரவில்லை.

விகடன் மலர்களுக்கு படைப்புகள் கேட்டு வந்த கடிதங்கள் என் தயக்கம் காரணமாக என் மேசை மீதே கிடந்தன.

'நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்ற கதையை எழுதி முடித்தபோது, யாரிடமும் வாசிக்கத் தராமல், கருத்து கேட்காமல், விவாதிக்காமல் விகடனுக்கு அனுப்பினேன். இதை யாரும் நிராகரித்துவிட முடியாது என்ற உறுதியான நம்பிக்கை யும் உள் அகங்காரமும் இருந்தது. அந்தக் கதை அடுத்த வாரமே பிரசுரமானது. ஒரு சிறுபத்திரிகை பிரசுரத்துக்கும் வெகுஜனப் பத்திரிகைக்கும் உள்ள வித்தியா சத்தை என் அலைபேசி வழியே நான் முற்றிலும் உணர்ந்த தருணம் அது!

தொடர்ந்த தொலைபேசி அழைப்புகளையும் நேரடிக் கை குலுக்கல்களையும் தாண்டி, வழக்கமான டீக்கடை, பக்கத்து வீட்டு சிடுமூஞ்சி வாத்தியார், எனக்குக் கற்பித்தவர்கள் என எல்லோரும் என்னைக் கொண்டாடியபோது என் எல்லையின் விரிவு எனக்கே பிரமிப்பைத் தந்தது. எத்தனை அற்புதமான கதை இது என்று வியந்த ஓவியர் மணியம் செல்வன், அந்தக் கதைக்குப் படம் போட்ட சந்தோஷத்தை ஆத்மார்த்த மாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒரே ஒரு கதைக்கா இத்தனை வரவேற்பு? எப்போதோ நான் நம்பின ஒரு கருத்துக்காக அத்தனை காலமும் விகடனுக்குக் கதை அனுப்பாமல் விட்டுவிட்ட துயரத்தை ஒரு நிமிடம் எதிர்கொண்டேன்.

என் தம்பி நா.முத்துக்குமார் விகடனில் எழுதிய 'அணிலாடும் முன்றில்’ தொடருக்குத் தலைப்பை என்னிடம் பேசி உறுதி செய்த பிறகுதான் வைத்தான். அந்த எழுத்துக்களை எழுதி முடித்த ஈரம் காயும் முன்னே தொலைபேசி வழியே ஒரு முறையும் விகடனில் வெளியானதும் அச்சு மை உலரும் முன்னே வாசிப்பின் வழியே இன்னொரு முறையும் வாசித்தபோது கிடைத்த இரு வேறு அனுபவங்களும் அந்த நாட்களும் எப்போதும் மறக்க முடியாதவை.

ஒவ்வொரு வாரமும் விகடன் செய்யும் மாயவித்தைகள், அடையும் உயரங்கள், ஏற்படுத்தும் தாக்கங்கள், கோரும் கண்ணீர் என்று வாசிக்கத் தெரிந்தவர்களிடம் அது உருவாக்கி வைத்திருக்கும் ஆகிருதி யாராலும் அளவிட முடியாதது.

நானும் விகடனும்!

விகடனின் வடிவம், வடிவமைக்கும் ஆசிரியர் குழு... எல்லாம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்கும் எனக்குமான ஆத்மார்த்தமான நட்பு மட்டும் அப்படியே உள் மனதில் இருக்கிறது!''

கே.வி.ஷைலஜா:

''எட்டாவது படிக்கும்போது 'அக்காவோடுதான் சாப்பிட வேண்டும்’ என்று அம்மா சொன்னதை மிக அனுசரணையாகக் கேட்டு, தினமும் ஜெயஸ்ரீ படிக்கும் பதினோராம் வகுப்புக்குச் சென்று பெரிய கொண்டை போட்ட கெமிஸ்ட்ரி டீச்சரோ, வார்த்தை வெளிவராமல் பாடம் நடத்தும் மேத்ஸ் டீச்சரோ பெல் அடித்த பிறகும் கடமை ஆற்றுவதைக் கவலையோடு பார்ப்பேன். ஆனால், அக்காவோடு சாப்பிடப்போவது, அவளுடைய தோழிகளைப் பார்ப்பது என்பதைவிட, விஜயலட்சுமி அக்காவும் சிவகாமி அக்கா வும் மதிய வகுப்புகள் மீண்டும் தொடங்கும் முன்பாக வீட்டில் படித்துவிட்டு வந்து சொல்லும் விகடன் தொடர்களைக் கேட்கச் செல்வதாகவே எனக்குள் பதிந்திருந்தது!

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சுஜாதா முதன்முதலில் கம்ப்யூட்டரில் டைப் செய்து பெரிய பெரிய எழுத்துகளாய் அப்படியே வந்த ஒரு விகடன். சுஜாதா, பாலகுமாரனின் பல தொடர்கதைகள், மணியம்செல்வத்தின் ஓவியங்களில் கூடவே அழுது, சிரித்து, பிரமித்து, தப்பு செய்து, அதைச் சரிசெய்து வாழ முயன்று தோற்ற அல்லது ஜெயித்த கதா பாத்திரங்கள். அதேபோல ஓவியர் மாருதி. பெரிய பெரிய இமைகளும் மொழுமொழு என்ற உடல்வாகுமாய் அறுபது எழுபதுகளின் குடும்பப் பெண்களையும் நவீன யுவதிகளையும் அப்படியே நம்முன் நடமாடவிட்டிருப்பார்.

விகடன் தொடர்களில் பல என்னை ஆகர்ஷித்தவை. விகடனைக் காத்திருந்து வாசிக்கவைத்தவை. சமீபத்தில் சுகா, ராஜு முருகனின் கட்டுரைகள்.  

ராஜு முருகனின் முதல் கட்டுரையைப் படித்துவிட்டு வெளியில் சொல்ல முடியாத ஏதோ வீணாய்ப்போன கௌரவம் தடுக்க தேம்பித் தேம்பி அழுதுவிட்டேன். பிறகுதான் தெரிந்தது என்னுடைய பல நண்பர்களும் அப்படித் தங்கள் வீட்டின் குறைந்த ஒளியில் அழுததும்... முருகனை மிக நெருக்கமாக்கிக்கொண்டதும்.

தன் வாத்தியாரும் நான் அப்பாவாக மதிக்கும் இயக்குநர் பாலுமகேந்திராவில் ஆரம்பித்து, ஊரின் சிதிலம் அடைந்த தியேட்டர், வாழ்விழந்துபோன ரிக்‌ஷாக்கார மாமா, திருவிழா, முதன்முதலாக நடித்த நண்பர் அழகம்பெருமாளின் அம்மாவான பாட்டி என எத்தனை சொந்தங்களை நமக்குக் கொடுத்தார் 'மூங்கில் மூச்சு’ சுகா.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக விகடன் தமிழில் வெளியிட்ட என்சைக்ளோபீடியா மிக அற்புதமான தொகுப்பு. கிராமத்தில் படிப்பு சார்ந்த எந்த மனஉளைச்சலும் இல்லாமல் கோலி அடித்துக்கொண்டே பத்தாம் வகுப்பு வரை நன்றாகவும் படிக்கும் மாணவனுக்கு இணையதளத்தைப் புத்தக மாக்கிக் கொடுத்தது விகடனின் பயணத் தில் ஒரு மைல்கல்.    

நான் தமிழில் பதிப்பாளராக அறியப்பட விகடன் வரவேற்பறை எனக்கு அளித்த அங்கீகாரம் என்றென்றும் நன்றிக்கு உரியது. வெள்ளிக்கிழமை எங்களுக்குக் கிடைக்கும் விகடனை முதல் நாளே வெளியூர் நண்பர்கள் வாசித்துவிட்டு, தொடர்ந்து தொலைபேசியில் வரவேற்பறை பகுதியில் வம்சி புக்ஸ் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்று பேசும் நட்புக் குரல்கள் நெகிழ்ச்சியானவை.

நானும் விகடனும்!

விகடன் ஆசிரியர் எங்கள் நண்பர்   ரா.கண்ணன் 'நீங்கள் படைப்பிலக்கியத்தில் தொடர வேண்டும். அப்படி எழுதத் தொடங்கினால், விகடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறது!’ என்று சொன்ன வார்த்தைகளில் துளிர்த்த நம்பிக்கையையும் தோழமையையும் பொத்தி அடைகாத்து வைத்திருக்கிறேன்.

கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நான் மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த மம்முட்டியின் வாழ்வனுபவங்கள் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை விகடனில் வெளியிட்டு, அந்தப் புத்தகத்தை தமிழ் நாட்டின் பல வாசக இதயங்களில் தக்க வைத்தது. விகடனில் வெளியான 'நான் கே.வி.ஷைலஜா ஆனது எப்படி?’ என்ற கட்டுரையாகட்டும்; புதுச்சேரி 'என் விகடன்’ முதல் இதழில் திருவண்ணாமலை பற்றிய 'என் ஊர்’ நினைவுகளாகட்டும், எதையும் எழுதும் பிரதியின் மை காயும் முன் அச்சுக்குக் கொண்டுபோகும் நம்பிக்கை விகடன் என்னிடம் வைத்திருப் பது நிறைவானது!

என் நினைவு அலமாரிகளின் தட்டுகளில் கட்டுக்கட்டாக விகடன் நண்பர்களின் பிரியங்களும் நெகிழ்வான உரையாடல்களும். போதுமே... நண்பர்களும் புத்தகங்களுமாய் இந்த வாழ்வு அர்த்தப்பட!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism