Published:Updated:

”கேமரா, கருவி அல்ல... கல்வி!”

''கேமரா என்பது நான் கற்றுக்கொள்வதற்கான ஒரு கருவி. ஒரு கண்ணை மூடிக்கொண்டு வியூ ஃபைண்டர் மூலம் நீங்கள் உலகத்தைப் பார்க்கிறபோது, மூடிய இன்னொரு கண், உங்களுக்குள் பார்வையைச் செலுத்தும். ஒரே நேரத்தில் புற உலகையும் அக உலகையும் தரிசிக்கும் அந்தக் கணம் அற்புதம்!'' - கேமராவின் ஃப்ளாஷ் போல் அவ்வளவு பிரகாசமாக வந்துவிழுகின்றன ரகுராயின் வார்த்தைகள். உலகின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். தான் எடுத்த புகைப்படங்களை சென்னை அப்பாராவ் கேலரியில் காட்சிக்குவைத்திருந்தார். பல நாடுகளில் தன் புகைப்படங்களைக் காட்சிக்குவைத்திருந்தாலும், சென்னையில் இதுதான் முதல்முறை.

”கேமரா, கருவி அல்ல... கல்வி!”
##~##

''உங்கள் புகைப்படங்கள் சமூகத்துக்குப் பயன்பட்டு இருப்பதாக நினைக்கிறீர்களா?''

''நீங்கள் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்தின் மூலம் இந்தச் சமூகத்தை மாற்றவோ, திருத்தவோ முடியும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் முடியாது! உங்கள் எழுத்து இந்தச் சமூகம் மாறப் பயன்படுமே தவிர, அதுவே மாற்றத்தைக் கொண்டுவராது. அப்படித்தான் என்னுடைய புகைப்படங்களும். அவற்றில் இருக்கும் அழகைத் தரிசியுங்கள். அவலத்தை அறிந்துகொள்ளுங்கள்!''

போபால் விஷவாயு விபத்தைப் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியவர் நீங்கள். இன்று அந்த யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய 'டௌ’ நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்ய இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து?

''அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம்தான் நிற்பேன்!''

இன்றைய போட்டோ ஜர்னலிஸ்ட்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''வெறும் நிகழ்வுகளைப் பதிவுசெய்பவர்களாக மட்டுமே போட்டோ ஜர்னலிஸ்ட்டுகள் இருந்துவிடக் கூடாது. ஃபிலிம் ரோல் கேமரா இருந்தபோது, 'முக்கியமான கணங்களைத் தவறவிடக்கூடாது, கலை நயத்துடனும் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்கிற தவிப்பு இருந்தது. இன்றைய டிஜிட்டல் கேமரா க்ளிக்குகளில் நிமிடங்கள் ஃப்ரேம் ஆகின்றன. கலைநயம் கொஞ்சம் மிஸ் ஆகிறதோ எனத் தோன்றுகிறது. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். ஆயிரம் வார்த்தைகள் என்பது சப்தங்களை உடையது. புகைப்படத்தில் நிறைந்து இருக்கும் அமைதியை எழுத்தில் வடிக்க முடியாது!''

”கேமரா, கருவி அல்ல... கல்வி!”

''உங்கள் மகன் நிதின் ராயும் கேமராவைக் கையில் எடுத்திருக்கிறாரே?''

''பாருங்கள்... பெற்றோர் என்ன செய்கிறார்களோ அதைத் தங்களாலும் செய்ய முடியும் என்று நினைக்கின்றன குழந்தைகள். என் மகனும் கேமராவை விரும்புகிறான். நான் அவனுக்கு என் கேமராவைத் தரலாம். என் லென்ஸைத் தரலாம். ஆனால், படைப்பாற்றலை அவனுக்கு என்னால் கற்றுத் தர முடியாது.  அவரவர்க்கு என ஒரு படைப்புத் திறன் இருக்கிறது. அது வெற்றி அடைந்தால் சந்தோஷம்தான்!''

”கேமரா, கருவி அல்ல... கல்வி!”

''இத்தனை வருட அனுபவங்களில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?''

''நீங்கள் தேர்வு செய்த துறையில் அது சார்ந்த ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் கைக்கொண்டால், அது உங்களை உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்!''

- ந.வினோத்குமார்