Published:Updated:

சிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு!

Coimbatore
Coimbatore

சிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு!

Coimbatore
Coimbatore

விஞர் புவியரசு. மார்க்சியவாதி, எழுத்தாளர், நாடகக் கலைஞர் எனப் பல முகங்கள் இவருக்கு. வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி.  தான் வாழ்ந்த கோவையைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார்!

சிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு!
##~##

'கோவையின் அனைத்துப் பகுதிகளிலும் நான் வாழ்ந்து இருக்கிறேன். ஒவ்வோர் ஆலையாகத் தொடங்கப்பட்டு, இன்று பிரமாண்டத் தொழில் நகரமாக விளங்கும் கோவையை அதன் பால்யத்தில் இருந்தே பார்த்துவருகிறேன். கோவையைக் குளங்களின் நகரம் என்பார்கள். இந்தக் குளங்கள்தான் கோவையைத் தொழில் நகரம் ஆக்கின. குளங்களின் வழியாக வெளியேறும் குளிர்ந்த காற்று, பருத்தி விளைச்சலுக்கு ஏற்றது என்பதை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தனர். பருத்திச் செடிகள் நடப்பட்டன. மெல்லிய நூல் இழைகளைப் பிரித்தெடுக்க, நூல் ஆலைகள் உருவாகின. இங்கு முதல் முதலாகத் தொடங்கப்பட்டது 'ரங்க விலாஸ்’ மில். இன்றும் அந்த மில் அதே கம்பீரத்தோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது.

கோவை நகரத்து ஆளுமைகளில் இரண்டு மனிதர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் தமிழ் சினிமாவின் பிதாமகன் சாமிகண்ணு வின்சென்ட். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்திலேயே ஜெனரேட்டர் மூலம் மௌனப் படங்களை ஓட்டியவர். கூடவே அவர் வாழ்ந்த தெருவுக்கே மின்சாரம் வழங்கினார். சினிமா மீதான காதலால் தன்னுடைய  மௌனப் படங்களையும்  ஜெனரேட்டரையும் தூக்கிக்கொண்டு ஆப்கானிஸ்தான் வரை சென்று படங்களைத் திரையிட்டுக் காட்டினார்.

எங்கள் காலத்தில் கோவையின் பெருமைக்குரிய இடமாக நாங்கள் கருதியது, சாமிக்கண்ணு வின்சென்ட்டால் கட்டப்பட்ட 'வெரைட்டி ஹால்’ திரை அரங்கம்தான். பிரிட்டன் அரண்மனையில் இருக்கும் அரங்குகளைப் போல் இருக்கும் அதன் வடிவமைப்பு. அதேபோல, இங்கு உள்ள எடிசன் திரை அரங்கில்தான் அன்று பெரும்பாலான நாடகங்கள் நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது, அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு’ நாடகம் இங்கு அரங்கேறியது. அவருக்கு வெகு அருகில் சிறுவனாக நான் அமர்ந்து நாடகம் பார்த்தது இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

அதேபோல, கோவையை உருவாக்கியதில் மிக முக்கியப் பங்காற்றிய மற்றொருவர் நரசிம்மலு நாயுடு. ஸ்டேன்ஸ் அவர்களுக்குத் தன் சொந்த இடத்தைக் கொடுத்து ஸ்டேன்ஸ் மில்லைக் கட்டச் சொன்னவர் அவர்தான். அந்த 'ஸ்டேன்ஸ் மில்’தான், பல தொழிலாளர்களுக்கு அன்று வேலை வாய்ப்பை வழங்கியது. இவர் 'கலாநிதி’ என்ற பெயரில் அச்சகம் தொடங்கி, எழுத்துக்களைக் கோத்து அந்தக் காலத்திலேயே 96 புத்தகங்களை வெளியிட்டார்.

சிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு!

இன்று கோவையில் இயங்கிவரும் பல பள்ளிக்கூடங்களும் அன்று அவர் கட்டியவைதான். அவர் கட்டிய நரசிம்மலு நாயுடு நினைவு உயர்நிலைப் பள்ளியில்தான், நான் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினேன். இன்று கோவை, கல்வியில் சிறந்த மாவட்டமாக விளங்க அஸ்திவாரம் போட்டவர் நரசிம்மலு நாயுடுதான். இவை மட்டுமா... யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காட்டுக்குள் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்த சிறுவாணித் தண்ணீரை கண்டுபிடித்து மக்களுக்குக் கொடுத்ததும் நரசிம்மலு நாயுடுதான்.

கோவை நகரத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. திப்பு சுல்தானின் படை கோவையைக் கடந்தபோது, அவர்கள் தங்கிய இடத்தில்தான் இந்தத் கோயில் எழுப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி இன்னும் பல புகழ் பெற்ற இடங்கள் கோவை நகரத்தில் மறைந்துள்ளன. வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள்தான் அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!''

சிறுவாணியை கண்டுபிடித்த நரசிம்மலு நாயுடு... சினிமாவை ஓட்டிக் காட்டிய சாமிக்கண்ணு!

- ம.முரளிதரன்
படங்கள்: செ.பாலநாக அபிஷேக்

அடுத்த கட்டுரைக்கு