Published:Updated:

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

Published:Updated:

முதுகில் புத்தகப் பை சுமக்கவேண்டிய குழந்தைகள் வயிற்றில் சிசுவைச் சுமந்தால்? பால்யக் குறும்புகளோடும் பள்ளிக் கனவுகளோடும் துள்ளித் திரிய வேண்டிய குழந்தைகள் குடும்ப பாரத்தைச் சுமந்தால்? ஆம், சுமக்கின்றன! அனைவருக்கும் கல்வி, சமச்சீர்க் கல்வி என்று அரசு கல்விப் பாதையில் மக்களை முன் நடத்திச் சென்றாலும்கூட, கொங்கு மண்டலத்தின் சில மலைக் கிராமப் பழங்குடி மக்களிடம் குழந்தைத் திருமணங்கள் இன்றும் சர்வ சாதாரணம்!

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைத் திருமணத்தினால் உடல்ரீதியாக மட்டும் இல்லாமல் மனரீதியான பல பிரச்னைகளும் உருவெடுக்கின்றன. இதனால் குழந்தை, தன் குழந்தைப் பருவத்தை இழக்கிறது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இருந்தபோதும்கூட இந்தப் பழங்குடி மக்களுக் கும் அரசுக்கும் இடையே நீண்ட இடைவெளி. இவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யவோ அரசு முன்வந்தது இல்லை. அதனால் இவர்களும் அரசைவிட்டு தூர விலகியே நிற்கிறார்கள்.

இந்தச் சிக்கலுக்கு முக்கியக் காரணம், கல்லாமை மற்றும் இல்லாமை. பல மலைக் கிராமங்களில் பள்ளிக் கூடங்களே இல்லை. பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துக்குப் போகலாம் என நினைத்தாலும் முறையான பேருந்து வசதிகள் கிடையாது. யானைகள் உலவும் காட்டுக்குள் பொடிநடையாகக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகிறார்கள். கழுத்தை நெரிக்கும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் இந்த மக்களுக்குப் பெண் குழந்தைகளைக் கரையேற்றுவது பெரும் சுமையாக இருக்கிறது என்பது முகத்தில் அறையும் யதார்த்தம்.

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

பெண் குழந்தை பூப்படைந்த ஓரிரு நாட்களிலேயே அல்லது குடும்பச் சூழலைப் பொறுத்து பூப்படையாமலேயே திருமணம் செய்துவிடுகின்றனர். ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப் பகுதிகளில் இருக்கும் கொங்காடை, அக்கினிபாவி, தம்புவெட்டி, தாளகரை, பொன்னகரை உட்பட ஊராளி பழங்குடியின மக்கள் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் மிக அதிகம். இவ்வாறாகக் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் குழந்தைகளைச் சந்தித்தோம்.

13 வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட ரத்னாவிடம் பேசினேன். ''என் சொந்த ஊரு அக்கினிபாவிங்க. ஏழாம் வகுப்புப் படிச்சிக்கிட்டு இருந்தேன். பள்ளிக்கூடத்துக்கு வந்து பாதியிலேயே அழைச்சிக்கிட்டுப்போன எங்க தாத்தா, 'புள்ள, உனக்கு நாளைக்குக் கல்யாணம்’னு சொல்லி கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. கல்யா ணத்தப்ப கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆரம்பத்தில வீட்டுக்காரர்கிட்ட பேசவே மாட்டேன். தாத்தா, பாட்டிதான் அப்பப்ப அறிவுரை சொல்வாங்க. அப்புறமா வீட்டுக்காரர்கிட்ட பேச ஆரம்பிச்சேன். அவரும் என்னை நல்லாப் பார்த்துக்கி றார்.

அவர் காட்டுல கூலி வேலைக்குப் போறார். ஒரு நாளைக்கு 60 ரூபா கிடைக் குது. இங்க இருக்கிற என்சோட்டுப் புள்ளைங்க எல்லாத்துக்குமே 14 வயசுக்குள்ளயே கல்யாணம் பண்ணிவெச்சுடுவாங்க. இது பரம்பரைப் பழக்கமாம். ஆனா, இப்பவும் எனக்கு பள்ளிக்கூடத்துக்குப் போய் படிக்கணும்னு ஆசையாத்தான் இருக்கு. என்ன செய்ய?'' என்கிறார்.

16 வயதிலேயே கைக்குழந்தையைச் சுமக்கிறார் மணி. ''வீட்டுல சாப்பாட்டுக்கு ரொம்பக் கஷ்டம். நான் காட்டுல ஆடு மேய்ச்சிட்டு இருந்தேன். எங்கம்மா என்கிட்ட 'நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா குடும்பக் கஷ்டம் தீரும். தினமும் சுடுசோறு சாப்பிடலாம்’னாங்க. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வீட்டுக்காரர் காட்டுல சுள்ளி பொறுக்குறார். இப்பப் பரவாயில்லை அண்ணா. இந்தக் குழந்தையைப் பார்த்துக்கிற அளவுக்கு வருமானம் வருது...'' என்கிறார் அப்பாவியாக!

இதுகுறித்து மருத்துவரான பரமேஸ்வரனிடம் பேசினேன். ''ஐ.நா. அவையின் வரையரையின்படி 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் குழந்தைகளே. குழந்தைத் திருமணங்களால் குழந்தைகள் பெற்றோருடன் வாழும் காலம் குறைகிறது. இதனால் பெற்றோரின் அன்பு முழுமையாகக் கிடைப்பது இல்லை. இந்தத் திருமணத்தால் அவர்கள் தங்களுடைய குழந்தைத் தனத்தை இழப்பதுடன் விளையாட்டு, குறும்பு அனைத்தும் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.  

குழந்தையைச் சுமக்கக் கர்ப்பப் பை தயாராகும் நிகழ்வுதான் பூப்படைதல். ஆனால், பூப்படைந்ததுமே குழந்தையைச் சுமக்கும் தகுதியை அது அடைந்து விடுவது இல்லை. கர்ப்பப் பை விரிவு அடையா மல் கருவைச் சுமக்கும்போது, அது சில நேரங் களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். குழந்தை பிறக்கும் பட்சத்தில் குழந்தையைமுறை யாகப் பராமரிக்கத் தெரியாது!'' என்றார்.

இந்தப் பகுதிகளில் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 'சுடர்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நடராஜன், '' வெறும் சட்டங்களால் மட்டும் இதைத் தடுத்து நிறுத்த முடியாது. குழந்தைத் திருமணம் தவறான விஷயம் என்று அந்த மக்களுக்கு உணர்த்தவேண்டும். ஒரு சிறு உதாரணம், கடந்த ஆண்டு அப்போது ஈரோடு கலெக்டராக இருந்த காமராஜ், இந்த மலைக் கிராமங் களுக்குச் சென்று குழந்தைத் திருமணங்களை ஒழிப்பது குறித்துப் பேசினார். அப்போது முதியவர் ஒருவர் எழுந்து, 'இங்க பள்ளிக்கூடமே இல்லை. 12-ம் வகுப்பு வரைக்கும் படிக்கப் பள்ளிக்கூடம் இருந்தா படிக்கவெச்சுட்டு 18 வயசுல கல்யாணம் பண்ணுவோமில்ல’ என்று கேட்டார். இந்தப் பிரச்னைக்குக் கல்வி ஒன்றே நிரந்தரத் தீர்வு!'' என்றார் உறுதியாக.

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

இப்போதைய கலெக்டர் சண்முகத்திடம் பேசினேன்.

''மேற்கண்ட மலைக் கிராமங்களுக்கு பலமுறை நேரில் சென்று மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். விரைவில் மனநல மருத்துவர்கள், தாய் - சேய் நல மருத்துவர்களுடன் சென்று மிகப் பெரிய அளவிலான குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்பு உணர்வு முகாம் நடத்த இருக்கிறோம்!'' என்றார்.

குழந்தையைச் சுமக்கும் குழந்தைகள்!

கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism