Published:Updated:

என் ஊர்! : முகையூர்

தமிழ் கேரல் பாடும் முகையூர்!

என் ஊர்! : முகையூர்

தமிழ் கேரல் பாடும் முகையூர்!

Published:Updated:
##~##

''சொந்த ஊர் என்பது ஒருவன் தன்னுடைய பால்யத்தில் காணும் ஊர்தான். கடைசி வரை மனதின் ஆழத்தில் வாஞ்சைமிகு  வடுவாகத் தங்கி விடுவதும் அதுவே. ஒருவன் வளரத் தொடங்கும் போது, அறிவின் விரிவும் அனுபவ வெளிச்சமும் ஊரை வெறும் நிலமாகவும் மக்களை வெறும் மனிதர்களாகவும் தோன்றச் செய்துவிடும்போதும் பால்ய காலத்து ஊர் தன்னுடைய பசுமை மாறாமல் அப்படியே இருக்கிறது. அந்த ஊர்தான் மர்மங்களும் மாயங்களும் நிறைந்த ஒரு வசீகரப் பிரதேசமாகி எழுத்தாளனுடைய படைப்புகளுக்கான நேரடியா னதும் மறைமுகமானதுமான உந்து சக்தியாக விளங்கு கிறது''- என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தன் ஊர் ஆன முகையூர் பற்றிப் பேசத் தொடங்குகிறார் எழுத்தாளர் அசதா.

 ''மலையமான் திருமுடிக்காரி திருக்கோவிலூரை ஆண்ட காலத்தில், அங்கு இருக்கும் ஆலயங்களுக்குத் தினமும் மாலை எங்கள் ஊரில் இருக்கும் பூந்தோட் டத்தில் இருந்து முகைகள் (மொட்டுகள்) கொண்டு செல்லப்படுவது வழக்கம். முகைகள் கொண்டுவரப்படும் ஊர் என்பதால், முகையூர் எனப் பெயர்பெற்றதாகக் கூறுவர். இந்தத் தகவலுக்கு ஆதாரமாக இன்றும் பூந் தோட்டம் என அழைக்கப்படும் பாழடைந்த குளத்துடன் அமைந்த பகுதி ஒன்று இந்த ஊரில் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்! : முகையூர்

வட தமிழ்நாட்டில் கிறிஸ்துவம் காலூன்றிய முக்கிய இடங்களுள் முகை யூரும் ஒன்று. 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் இங்கு உள்ளது.தேவா லயத்தின் வயதை உடைய பள்ளிக்கூடம் ஒன்றும் இங்கு இருக்கிறது. முகையூருள் அடங்கிய சிற்றூரான இருதயபுரத்தில் குன்றின் மீது அமைந்த சிற்றாலயம் ஒன்று உள்ளது. வழக்கமாக மலை அல்லது குன் றின் மீது அமைந்த தேவாலயங்களைக் காண்பது அரிது என்பதால், இந்த இருதய ஆண்டவர் ஆலயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கிறிஸ்துவர்கள் அதிக அளவி லும் இதில் சற்றே குறைந்த எண்ணிக்கையில் இந்துக்களும் வாழும் இந்த ஊரின் வரலாற்றில், இன்றுவரை மதத்தை முன்வைத்து உரசலுக்கான சிறு நிகழ்வுகூட இடம்பெற்றது இல்லை என்பதை நான் பெருமையோடு சொல் லிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலைநாடுகளில் பாடப்படும் கேரல் (கொயர்) பாடல்களைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் காலங்களில் எங்கள் ஊரில் முற்றிலும் தமிழ்ப் பாரம்பரியத்தில் தமிழ் கேரல் பாடல்கள் பாடப்பட்டுவருகின்றன. அதிகாலை வேளையில் தெருக்களில் இதைப் பாடுவது, பல்லாண்டு கால மாக நடைமுறையில் உள்ளது. இது தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத ஒரு சிறப்பு. மிஷினரிகள் மூலமாகக் கிறிஸ்துவ மதம் மட்டுமல்லாது கல்வியும் இந்த ஊரில் செழித்து இருக்கிறது. முகையூரின் எழுத்தறிவு சதவிகிதம் எப்போதுமே தேசிய மற்றும் மாநில சராசரியை விஞ்சியே உள்ளது. இந்தச் சிறிய ஊரில் இன்று ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு என தனித் தனியே மூன்று மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆரம்பப் பள்ளிகளும் மூன்று உள்ளன.

என் ஊர்! : முகையூர்

அய்ரோப்பிய மிஷினரிகள் இங்கு வந்து தொண்டாற்றிய காலம் போய் இன்று முகையூரில் இருந்து உருவாகிய பாதிரியார்கள், கன்னிகா ஸ்திரீகள் பலரும் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளுக்குச் சென்று மதத் தொண்டாற்றும் நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இளமை முதல் வாசித்தும் கேட்டும் வரும் பைபிள், என் எழுத்துக்களில் குறிப்பாக மொழிபெயர்ப்புகளில் தாக்கம் செலுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

பெரிதும் விவசாயத்தைச் சார்ந்த கிராமமாக இருந்தாலும், சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். இன்றும் ராணுவ வீரர் இல்லாத வீடே இல்லை எனும் அளவுக்கு ராணுவப் பணியில் ஏராளமான இளைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். மறைந்த என் தந்தை அரு ளானந்தம், ஒரு ராணுவ வீரர். என் தம்பி வின் சென்ட் பால்குமார் இப்போது ராணுவத்தில் பணியாற்றுகிறார். ராணுவ வீரர்களுக்கு அடுத்து ஆசிரியப் பணியில் இருப்போர் கணிசமான வர்கள். இன்றும் இந்தச் சிறு கிராமத்தில் சுமார் 80-ல் இருந்து 90 ஆசிரியர்கள் வரை இருக்கலாம் என்பது என் கணிப்பு!''

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism