Published:Updated:

இதுக்குத்தான் ‘தடா’!

''நம் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டிய விஷயங்களில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?'' என்று இவர்களிடம் கேட்டபோது...

இதுக்குத்தான் ‘தடா’!
##~##

கருணாநிதி, மதுரை மாவட்ட அரிமா சங்கத் தலைவர்: ''அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த வாகனங்கள் அரசு வேலைக்குப் பயன்படுவதைவிட, அதிகாரிகளின் சொந்த வேலைக்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இதற்கு மாற்றாக வாகனங்களைத் திரும்ப வாங்கிக்கொண்டு, அதிகாரிகளின் ரேங்குக்கு ஏற்ப பெட்ரோல் அலவன்ஸ் கொடுக்கலாம்!''

விஜயராமன், பேருந்து ஓட்டுநர், பெரியகுளம்: ''தேவை இல்லாத இடங்களில் செல்போன் உபயோகிக்க மக்களுக்குத் தடை விதிக்க வேண்டும். கோயில், ஹோட்டல், சாலைகள் போன்ற பொது இடங்களில் நாகரிகமே இல்லாமல் பேசுவதால், மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது!''

வீரமணி குமார், கணினி இயக்கக் கட்டுப்பாட்டாளர், மதுரை: ''ஏற்கெனவே தடை இருக்கிறது. இருந்தாலும் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்குவைக்க தடையும், அப்படி வேலைக்குவைத்தால் பெயிலில் வர முடியாத அளவுக்குக் கடும் தண்டனையும் கொடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் வயதில், வேலைக்குச் செல்வதால் அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒரு தலைமுறையே கல்வி அறிவு இல்லாமல் வளர்கிறது!''

இளமதி, குடும்பத் தலைவி, பெரியகுளம்: ''மின் தடைக்கு தடை விதிக்க வேண்டும். மின் தடையால் தொழில் உற்பத்தி, கல்வி, சமையல் என எல்லாம் பாதிக்கப்படுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளைக்கூட ஃப்ரிஜ்ஜில் வைக்க முடியவில்லை!''

மனோகரன், மேலாளர், தமிழ்நாடு வேர்ஹவுஸ், தேனி: ''கல்வி, மருத்துவம் கொடுக்கும் அரசே டாஸ்மாக் மூலம் மக்களுக்குக் குடிக்கக் கற்றுக்கொடுக்கிறது. எனவே மதுபானத்துக்குத் தடை விதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளால் மக்களுடைய உடல் நிலையோடு, சமூக ஒழுக்கமும், சட்டம் ஒழுங்கும் கெட்டுப் போகிறது!''

- தி.முத்துராஜ்