Published:Updated:

தினம் தினம் நாடகம்!

கிராமங்களின் அழகே, அதன் திருவிழாக்களில்தான்  இருக்கிறது. திருவிழா நடக்கும் இரண்டு, மூன்று நாட்களும் கரகாட்டம், ஒயிலாட்டம் எனக் கிராமங்கள் 'ரண்டக்க... ரண்டக்க...’ எஃபெக்டில் இருக்கும். ஆனால், மதுரை அருகே உள்ள வலையங்குளம் கிராம மக்கள் படு வித்தியாசமாகத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தினம் தினம் நாடகம்!

இந்த ஊர்த் திருவிழா இரண்டு, மூன்று நாட்களில் முடிந்துவிடுவது இல்லை. இங்கு உள்ள 'ஸ்ரீ தானாக முளைத்த தனி லிங்கப் பெருமாள்கோயில்’ திருவிழா, மொத்தம் 80 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

திருவிழா நடக்கும்  80 நாட்களும் ஆட்டம்பாட்டம் எதுவுமே கிடையாது. தினம் தினம் நாடகம்தான். திருவிழா நேரத்தில் ஊரின் திறந்தவெளி அரங்கில் பாயை விரித்து, நாடகம் பார்க்கத் தயாராகிவிடுகிறார்கள் ஊர் மக்கள். இந்த வித்தியாசத் திருவிழா பற்றிக் கூறுகிறார் கிராமத் தலைவர் சின்னத்துரை.

தினம் தினம் நாடகம்!
##~##

''இந்தக் கோயிலில் உள்ள தனி லிங்கம், தானாக முளைத்த சுயம்புலிங்கம். அதனால்தான் இதுக்குத் தனி லிங்கப்பெருமாள் சுவாமினு பேர்வந்துச்சு. இந்த ஊரோட அடையாளமே நாடகத் திருவிழாதான். மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து இந்தத் திருவிழா நடக்குது.  இந்தக் கோயிலுக்கு வர்றவங்க அவங்கவங்க குறைகளைச்  சொல்லி வேண்டிக்கிட்டா, குறைகள் சரியாகும்னு  நம்பிக்கை. வித்தியாசமான முறையில நேர்த்திக் கடனை நாடகமாச் செலுத்துறது வழக்கம். வேண்டுதல் நிறை வேறினவங்க, அவங்கவங்க செலவுல நாடகம் போடுவாங்க. இந்தத் திருவிழா, மகா சிவராத்திரி அன்னிக்குத் தொடங் கும். முதல் நாள், ஊர் மக்கள் எல்லோரும்  சேர்ந்து 'அபிமன்ய சுந்தரி’ நாடகம் போடுவோம். நாடகம் போட அவ்வளவு சுலபமா தேதி கிடைக்காது. ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பதிவுசெஞ்சு, தேதி வாங்கணும்.  

பெரும்பாலும் 'வள்ளித் திருமணம்’, 'பவளக்கொடி’, 'அரிச்சந்திரன்’ உள்ளிட்ட புராண நாடகங்களையும் 'வீரபாண்டிய கட்டபொம்மன்,’ 'சிவாஜி’ போன்ற வரலாற்று நாடகங்களையும் அரங்கேற்றுவோம். தமிழ்நாட்டுல உள்ள எல்லா நாடகக் கலைஞர் களும் இங்கு வந்து நடிச்சிருக்காங்க.

தினமும் ராத்திரி நாடகம் தொடங்குறதுக்கு முன்னாடி விளக்கு ஏத்தி, மேளம் அடிப்போம். ராத்திரி தொடங்குற நாடகம், அதிகாலை 4 மணி வரைக்கும் நடக்கும். அதுவரைக்கும் கோயில் திறந்தே இருக்கும். திருவிழாவின் கடைசி நாள் அன்னிக்கு நாடகம் முடிஞ்ச பின்னாடி பட்டாபிஷேகம் நடத்தி, சமபந்தி சாப்பாடு போட்டுதான் திருவிழா முடியும்'' என்று விளக்கினார்!

- ரா.அண்ணாமலை
படங்கள்: பா.காளிமுத்து